Breaking
Sat. May 4th, 2024

-அமைச்சின் ஊடகப் பிரிவு

மொத்தத வியாபாரச் சந்தையில் போதியளவு அரிசி கையிருப்பில் இருந்த போதும் தட்டுப்பாடு என்று கூறி அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் எச்சரித்தார்.

புறக்கோட்டை 5ம் குருக்குத்தெருவில் உள்ள மொத்த வியாபார அரிசிக் கடைகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து திடீரென விஜயம் செய்த அமைச்சர் அரிசி நிலவரங்கள் மற்றும் விலைகள் தொடர்பில் கேட்டறிந்தார். புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினார்.

அமைச்சர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

புறக்கோட்டை சந்தையில் மொத்த வியாபார நிலையங்களில் அரிசி தாராளமாக இருக்கின்றது. விலைகள் மாறுபட்டுள்ள போதும் நிர்ணய விலையைவிட வியாபாரிகள் சில்லரை வியாபாரிகளுக்கு 5 ரூபா அல்லது 6 ரூபாக்கு குறைவாகவே விற்பனை செய்கின்றனர். எனினும் அரிசிக்கு தட்டுப்பாடு என போலிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு விலையைக் கூட்டி விற்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அரசு ஒரு போதும் இடமளிக்காது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அரிசியின் சீரான விநியோகம் தொடர்பான உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது தொடர்பில் முறைப்பாடுகள் இருந்தால் 1977 என்ற இலக்கத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் தொடர்பு கொள்ள முடியும். இதற்கென விஷேடமாக நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுப்பர்.

இறக்குமதி அரிசி தொடர்பில் இறக்குமதியாளர்கள் எவ்வளவு தொகையை எங்கிருந்து இறக்குமதி செய்து யாருக்கு கொடுக்கின்றார்கள் என்று கண்காணிப்பதற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சந்தையில் இறக்குமதி அரிசியையும் உள்ளுர் அரிசியையும் எத்தகைய விலை நடைமுறையில் விற்பனை செய்கின்றார்கள் என்பததை கண்காணிப்பதற்கும் நாம் அதிகாரிகளை களத்தில் ஈடுபடுத்தியுள்ளோம். அரிசியை மோசடியாக விற்பனை செய்யும் இறக்குமதியாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடைய இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வோம் என்று அமைச்சர் கூறினார்.

உள்ளுர் நெல்  உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கிணங்க இன்னுமொரு சில தினங்களில் வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழு கூடி உள்ளூர் உற்பத்தியாளர்களின் நன்மையை கருத்தில் கொண்டு நியாயமான விலையை நிர்ணயிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *