Breaking
Tue. Apr 30th, 2024

இலங்கை பெளத்தர்களுக்கு எதிராக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிநாடுகளுக்கு விநியோகிப்பதற்கு இங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது தொடர்பான அனைத்து தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. இத் தேசத்துரோகிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
 
பான் கீ மூன், நவிப்பிள்ளை மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பெளத்தர்களுக்கு எதிரான சதித்திட்டத்தை தகர்க்க உலகின் பெளத்த நாடுகளுடன் இணைந்து செயற்படும் திட்டத்தை முன்னெடுத்து உள்ளோம் என்றும் தேரர் தெரிவித்தார்.
 
கொழும்பு கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை அறிவித்தார்.
 
இங்கு தேரர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
 
இலங்கையில் பெளத்த பயங்கரவாதம் தலைதூக்கியிருப்பதாகவும் இதனால் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் பிரசாரம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
அதற்காக பல்வேறுபட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவையனைத்தும் இங்குள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கும் அத்தோடு மேற்குலக நாடுகளுக்கும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளும்  எதிராக நீதிமன்றத்தில் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
 
அடிப்படைவாதிகள்
இலங்கையின் காற்றை சுவாசித்து இங்குள்ள நீரை குடித்து உயிர் வாழும் இங்கு பிறந்த முஸ்லிம் அடிப்படைவாதச் சக்திகளே இந்த புத்தகங்களின் பின்னணியில் உள்ளனர்.
 
இவர்கள் யார்? பின்னணி என்ன? பணம் எங்கிருந்து வருகிறது? போன்ற தகவல்கள் அனைத்தும் எம் வசம் உள்ளன. அதற்கான சாட்சியங்களும் உள்ளன.
 
இதன் பின்னணி தொடர்பாக அடுத்தவாரம் அறிவிப்போம்.
 
வழக்கு
அத்தோடு பெளத்தர்களுக்கும் தாய்நாட்டுக்கும் எதிராக புத்தகங்களை அச்சிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானித்துள்ளோம்.
 
பிரசாரம்
இலங்கையில் பெளத்த பயங்கரவாதம் என்ற பிரசாரம் இங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளால் சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்டதன் விளைவாகவே செயலாளர் நாயகம் உட்பட பல நாடுகள் எமக்கெதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றன.
 
பழிவாங்கல்
அது மட்டுமல்லாது விடுதலைபுலி பயங்கரவாதத்தை நாம் முற்றாக ஒழித்தோம்.
 
இதனால் அமெரிக்கா, பான்கீன் மூன் மற்றும் நவிப்பிள்ளை என பலர் எம்மோடு பகையாக உள்ளனர்.
 
எனவே, உலகிலும் இலங்கையிலும் பெளத்த பயங்கரவாதம் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். புலிகளை ஒழித்ததால் எம்மை பழிவாங்க முயற்சிக்கின்றனர்.
 
உலக பெளத்தர்கள்
பெளத்தர்களுக்கு எதிரான இந்த உலகளாவிய சதியை தகர்க்க வேண்டும்.
 
அதற்காக பர்மா, வியட்நாம், தாய்வான், ஜப்பான் போன்ற உலகிலுள்ள பெளத்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டங்களை தயார் செய்யவுள்ளோம்.
 
இது பெளத்த தர்மத்தை பாதுகாப்பதற்கான எமது முயற்சியாகும்.
ஆக்கிரமிப்பு
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்களை பெளத்தர்கள் மேற்கொள்ளவில்லை.
 
ஆனால், உணவு, பொருளாதாரம், கலை, கலாசாரம், உடைகள் என முஸ்லிம்கள் எம்மை ஆக்கிரமித்துள்ளனர். இது தான் உண்மை. இதற்கெதிராகவே நாம் போராடுகின்றோம்.
 
தம்புள்ளை
தம்புள்ளை பெளத்த புனித நகர். அது இனாமலுவே சுமங்கல தேரருக்கு சொந்தமானது.
 
அங்குள்ள பள்ளிவாசலை அகற்ற எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தம்புள்ளையில் வாழும் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
 
ஆனால், கொழும்பிலுள்ளவர்களே எதிர்க்கின்றனர்.
 
உலகில்
போகோ ஹராம், ஐ.எஸ்.ஐ.எஸ் என பல்வேறுபட்ட முஸ்லிம் பயங்கரவாதம் உலகில் இயங்குகின்றன. இவை தொடர்பாக பான் கீன் மூனின் நிலைப்பாடு என்ன?
 
தூதுவர்கள்
பெளத்தர்களுக்கு எதிராக பரப்பப்பட்டு வரும் செய்திகள் தொடர்பில் இங்குள்ள தூதுவர்களை சந்தித்து தெளிவுபடுத்தவுள்ளோம். அதற்கான நேர அவகாசம் கோரி அனைத்து தூதரகங்களுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளோம்.
 
ஏற்கனவே, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் தூதுவர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளோம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
 
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபலசேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகேயும் கலந்துகொண்டார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *