Breaking
Thu. May 9th, 2024
நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் பௌத்த சமயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதை அகற்றி புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் போலியானவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மகா சங்கத்தினருக்கோ அல்லது பௌத்த சமயத்திற்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் எவ்வித நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது எனத் தெரிவித்தார்.
பௌத்த மக்கள் உள்ளடங்களாக எல்லா சமயங்களும் எல்லா இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்பை நாட்டுக்கு முன் வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று (27) பிற்பகல் கெட்டம்பே மகாநாம கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய பிரிவெனா தின அரச நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதேயன்றி புதிய பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்வதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அதேபோல் நாட்டை பிளவுப்படுத்தும் நாட்டின் ஆட்புல எல்லைக்கும் இறைமைக்கும் பாதிப்பாக அமையும் எந்தவொரு விடயமும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது தொடர்பாக சிலர் முன்னெடுத்து வரும் போலிப் பிரச்சாரங்களை ஜனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் மூலம் நாட்டுக்குப் பொருத்தமான எல்லோருக்கும் நியாயமான ஒரு புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணத்தோடு உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். நாட்டின் பிரிவெனாக் கல்வியை மேம்படுத்துவதற்கும் குறைந்த வசதிகளைக் கொண்ட விகாரைகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பௌத்த சமயத்தின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

”சசுனட்ட திரிதென சுரக்கிமு பிரிவென” என்ற தொனிப்பொருளில் தேசிய பிரிவெனா தின அரச விழாவை கல்வி அமைச்சு ஒழுங்கு செய்திருந்ததோடு, பிரிவெனாக்களுக்கான விருதுகளும் இதன்போது ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய வறக்காகொட ஞானரத்தன தேரர், மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர், ராமான்ய மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய பிரேமசிறி நாயக்க தேரர், களனிப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எஸ்.பி.திசாநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *