Breaking
Tue. Apr 30th, 2024

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை என்ற சுனாமி நிதி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்தது.

அப்போது, அவரது வேட்பாளர் அந்தஸ்து கேள்விக்குறியானபோது, அவர் மீதான குற்ற விசாரணையை நிறுத்தி சரத் என்.சில்வா தலைமையிலான உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதரங்கள் மீதான சந்தேகத்தின் பலனை மஹிந்த ராஜபக்ஷவுக்கு அளித்து, அவர் சிறையில் அடைக்கப்படுவதிலிருந்து காப்பாற்றியிருந்தோம்.

அன்று மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைத்திருந்தால், அவர் இன்று ஜனாதிபதியாக இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. ´2005-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கில் ஜனாதிபதியை  ரிமாண்டில் போட்டு சிறையிலடைப்பதற்கான வாய்ப்பு தான் இருந்தது.

நான் அந்த நேரத்தில், எனக்குத் தெரிந்தவரையில் நீதியை நிறைவேற்றினேன்´
´அதாவது இந்த சந்தர்ப்பத்தில் இவரை சிறையில் அடைப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று கூறினேன். அதனால், அவரால் போட்டியிட முடிந்தது. ஜனாதிபதியாக இரண்டு தவணைகள் தெரிவானார்.

ஆனால் ´இப்போது இவர் செல்கின்ற பாதை முழுமையாக சட்டத்துக்கு விரோதமானது, உச்சகட்ட ஊழல் நடக்கின்றது. ஒப்பந்தங்களில் எந்தளவுக்கு பணம் கொள்ளை அடிக்கப்படுகின்றது என்பது எமக்குத் தெரியும்.

தங்களின் குடும்பத்தை வளர்த்துவிடுகிறார்கள். பொதுச் சொத்துக்கள் சுரண்டப்படுகின்றன. அதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா இல்லையா?´ என்று சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் சரத் சில்வா கூறினார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புப்படி தகுதியை இழந்துவிட்டார் என்றும் முன்னாள் பிரதம நீதியரசர் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *