Breaking
Mon. May 6th, 2024

-எம்.எஸ். பாஹிம்-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட போதும் ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதி முடிவு எடுப்பார். இறுதி நேரத்தில் வேட்பு மனுவில் எந்த மாற்றமும் இடம்பெறலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு யோசனையொன்றை வழங்கியுள்ளோம். இதற்கு மாற்றமாக மோசடி குற்றச்சாட்டுள்ளவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் சு.க.விலிருந்து விலகுவதா மாற்று முடிவு எடுப்பதா என்பது குறித்து 13 ஆம் திகதி அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இங்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்கப்படுவது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

போதைப் பொருள் குற்றச்சாட்டுள்ளவர்களுக்கு வேட்பு மனு வழங்கக்கூடாது என்பது அடங்கலான சில யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளோம். இது தொடர்பில் கட்சி செயலாளர்களுடன் பேசி ஜனாதிபதி முடிவெடுப்பார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்குவது தொடர்பில் ஐ.ம.சு.மு. கட்சிகளிடையே மாறுபட்ட கருத்து காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் பஸ்களில் கூட்டம் சேர்த்து கூட்டம் நடத்தி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்குமாறு அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் ஜனவரி 8 ஆம் திகதி எம்மோடு கைகோர்த்த சு.க. ஆதரவாளர்கள், சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்கக் கூடாது என்ற நிலைப் பாட்டிலே உள்ளன.

ஜனாதிபதி 8 ஆம் திகதி ஏற்படுத்திய நல்லாட்சி செயற்பாடுகளை மாற்றப் போவதில்லை என ஜனாதிபதி உறுதிப்பட தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்ட போதும் அதனை மாற்றம் செய்ய முடியும். ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஜனாதிபதி இதற்கு அனுமதி வழங்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் வேட்புமனு தொடர்பில் ஜனாதிபதியே இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிக்கக் கூடாது என்பதே பலரதும் கருத்தாகும். அவரை பிரதமர் வேட்பாளராகவோ குழுத் தலைவராகவோ நியமிக்க முடியாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் அவருக்கு வேட்பு மனு வழங்குவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதிக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அதனை ஜனாதிபதியும் நன்கு அறிவார். திருடர்களுக்கும் மோசடிக்காரர்களுக்கும் வேட்பு மனு வழங்கக்கூடாது என மக்கள் உரத்துக் கோரி வருகின்றனர்.

கட்சியா அல்லது எஞ்சியுள்ள கொள்கைகளா இரண்டில் ஒன்றை ஜனாதிபதிக்கு தெரிவு செய்ய நேரிடும் கட்சி உடையாமல் அனைவரையும் இணைத்து செயற்பட வேண்டிய கடப்பாடு கட்சித் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு உள்ளது. அதற்காக பல சுற்று பேச்சுகள் நடத்தப்பட்டன. வேட்பு மனு தொடர்பில் ஜனநாயக ரீதியான முடிவை அவர் எடுக்க வேண்டும். கடினமான முடிவு எடுக்க வேண்டிய நிலையில் அவர் காணப்படுகிற போதும் சிறந்த முடிவை ஜனாதிபதி எடுப்பார் என நம்புகிறோம்.

எமது கோரிக்கைகளுக்கு முரணாக முடிவு எடுக்கப்பட்டால் அரசியலை விட்டும் ஒதுங்குவதா இருந்து கொண்டு போராடுவதா என முடிவு எடுக்க நேரிடும்.

13 ஆம் திகதி வேட்பு மனுக்கள் கையளிப்பது முடிவடைந்த பின்னர் இது குறித்து முடிவெடுக்க இருக்கிறோம்.

எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டு எம்.பியாக தெரிவானால் எம்.பிக்குரிய பாதுகாப்பே அவருக்கு கிடைக்கும். அவருக்கு உயிர் அச்சுறுததல் இருப்பதாக அறிவித்தால் மேலும் பாதுகாப்பு வழங்க முடியும் என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *