Breaking
Sun. May 5th, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் தாருல் உலூம் அல் அஸ்ரபியா மத்ரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

கடந்த வாரம் பிரதமர், முக்கிய அமைச்சர்கள் மற்றும்  அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட அரசியலமைப்புச் சபைக் கூட்டத்தில் முஸ்லிம்கள் மீது மீண்டும் அராஜகங்கள் இடம்பொருவதை தெளிவாகவும் துணிவாகவும் சுட்டிக்காட்டினேன். அடாவடித்தனங்களை கடந்த அரசு அடக்கியிருந்தால் மஹிந்தவுக்கெதிராக நாங்கள் கிளர்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க மாட்டாதெனவும், சொல்ல வேண்டிய பாணியில், உரிய தொனியில் உணர்தினோம்.

இன்று உலகில் எந்த மூலையில் குண்டுவெடிப்புகளோ, கொலைகளோ இடம்பெற்றாலும் அதற்கு முஸ்லிம்களே சூத்திரதாரிகளென மேற்குலகமும் ஊடக மாபியாக்களும் விஷக்கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இரத்தக் களரிகளையும், படுகொலைகளையும் கண்டு முஸ்லிம்களாகிய நாமும் வேதனைப்படுகிறோம், வெதும்புகின்றோம். நமது இரத்தம் கொதிக்கின்றது. ஆனால் அவர்கள் எம்மை நோக்கியே தங்கள் சுட்டுவிரலை நீட்டிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாமியர்களை வேண்டுமென்றே தமது நிகழ்ச்சி நிரலுக்குள் வலிந்து வம்புக்கிழுத்து எங்களை படுபாதகர்களென பரப்புரை செய்கின்ற துர்பாக்கியத்தை நாம் காண்கிறோம். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவர்களின் பண்புகளையும் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தும் செயற்பாடுகளே அரங்கேற்றப்படுகின்றன.

முஸ்லிம் நாடுகள் பெற்றோலிய, கனிய வளங்களையும், பெரும் செல்வத்தையும் கொண்டிருந்த போதும் அவை அமைதியிழந்து தவிக்கின்றன.

அதே போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் அந்தச் சமூகத்தின் நிம்மதி கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

சுதந்திரத்திற்குப் பின்னர் நமது நாட்டில் முஸ்லிம்கள், சிங்கள மக்களுடன் முரண்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. எந்த இடைவெளியும் அர்களுக்கிடையில் இருக்கவுமில்லை. ஆனால் அண்மைக் காலமாக சிங்கள மக்களுடன் முஸ்லிம்களை மோத வைத்து இரத்தக் களரியை உருவாக்க ஒரு சதிகாரக் கூட்டம் அலைந்து திரிகின்றது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டிலே அமைதியையும், நிம்மதியையும் ஏற்படுத்தித்தந்த மஹிந்தவின் இறுதி ஆட்சிக் காலம் முஸ்லிம்கள் மத்தியில் வேதனையையும், பீதியையும் ஏற்படுத்தியது. வடபுல முஸ்லிம் அகதிகள் தமது தாயகத்திற்கு செல்ல முடியாது என்றிருந்த ஒரு நிலையை மாற்றி மீள் குடியேற்றத்திற்கு சாதகமான ஒரு நிலையை யுத்த வெற்றி ஏற்படுத்தியது. இவ்வாறு நல்லவைகள் செய்த மஹிந்த அரசை நாங்கள் வீழ்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். நன்மைகளை எல்லாம் ஒரு புறம் வைத்துவிட்டு அவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டிய சூழ்நிலை எமது சமூகத்திற்கு ஏற்பட்டது.

நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் குர்ஆனையும், எமது இறுதித் தூதர் பெருமானாரையும், எம்மைப்படைத்த இறைவனையும் கேவலப்படுத்தும் ஒரு கூட்டத்திற்கெதிராக அந்த அரசு எந்த நடவடிக்கைiயும் எடுக்காமல் கைகட்டி, வாய் பொத்தி இருந்ததனாலேயே அந்த அரசை வீட்டுக்கு அனுப்பினோம். 10 சதவீதமான வாக்குகளை மாத்திரம் தம்வசம் வைத்திருந்த முஸ்லிம் சமூகம் தமது வளங்கள், சக்தி ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக பிரயோகித்து மஹிந்தவுக்கெதிரான வாக்குகளை இன்னும் பத்து சதவீதமாக தேடிக் கொடுத்ததே சரித்திரம்.

அரசியலமைப்பில் எமக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்த மத உரிமைக்கு சதிகாரர்கள் வேட்டு வைப்பார்களென்ற அச்சத்தில் வாக்குரிமையை ஜனநாயக வழியில் மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தி சாதித்துக் காட்டினோம். அரசியல்வாதிகளான நாங்கள் அதிகாரம், பதவி, பட்டங்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. சமுதாயத்திற்கு ஆபத்தென்றால் அவற்றைத் தூக்கியெறிவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். அதே போன்று முஸ்லிம்களை சரியாக வழிநடத்தும் பொறுப்பையும், வல்லமையையும், சந்தர்ப்பத்தையும் உலமாக்களாகிய உங்களுக்கு இறைவன் தந்திருக்கின்றான். நீங்கள் மிம்பரில் பிரச்சாரங்கள் செய்யும் போது எவருமே உங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. அவ்வாறான பக்குவத்தை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. எனவே உலமாக்கள் இந்த சமூகத்தை சரியாக வழிநடாத்த வேண்டிய தேவை இருக்கின்றதென்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் மௌலவி அஷ்ரப் முபாரக், பெரிய பள்ளிவாசல் தலைவர் ஜனாப் ஹாஜியார், நவவி எம் பி, தொழில் அதிபர் ஜிப்ரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யஹ்யா, சமூக சேவையாளர்களான முஹ்ஷி ரஹ்மதுள்ளாஹ், இல்ஹாம் மரைக்கார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

whatsapp-image-2016-12-24-at-11-42-14-am whatsapp-image-2016-12-24-at-11-41-14-am whatsapp-image-2016-12-24-at-11-42-16-am-1

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *