Breaking
Sun. May 5th, 2024
“முடியாது என்று எமக்கு எதுவுமில்லை, மக்கள் எம் மீது முழுமையான நம்பிக்கை கொள்ள முடியும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஊவாவில் ஆட்சியமைக்கலாம் என்று ஐ.தே.க. கனவு காண்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது எனவும் தெரிவித்தார்.
பதுளை ஹாலிஎலயில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மகளிர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, “பெண்கள் கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் சக்தியாக உள்ளதாகவும், உலகிலேயே பெண்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கும் நாடு இலங்கை” எனவும் குறிப்பிட்டார்.
உலகிலேயே முதல் பெண் பிரதமர் இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்பட்டார் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்னும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
பதுளை ஹாலிஎலயில் அமைச்சர் டிலான் பெரேராவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி மாநாட்டில் அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், லக்ஷ்மன் செனவிரத்ன, பவித்ராவன்னியாராச்சி, தயா ஸ்ரீததிசேரா, அனுர பிரியதர்ஷன யாப்பா, குணரத்ன வீரக்கோன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதி நாட்டில் நூற்றுக்கு நூறு வீதம் மக்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் முடியும் தறுவாயில் உள்ளது. தற்போது 96 வீதமானவர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டடு விட்டது.
எமது அடுத்த இலக்கு நூற்றுக்கு நூறு வீதம் மக்களுக்கு நீரைப் பெற்றுக் கொடுப்பதே. இன்னும் நாம் பதுளை எட்டம்பிட்டியில் 15,000 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம்.
நாடு அபிவிருத்தியடைவதைப் பொறுக்காதவர்களே பல்வேறு விமர்சனங்களை மேற்கொள்கின்றனர். வீதிகளை அபிவிருத்தி செய்யும் போதும் மின்சாரம் வழங்கும் போதும் இவை எதற்கு உண்பதற்கா என கேட்கின்றனர்.
சிலர் ஆயத்தமாகுங்கள் ஊவாவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்கப் போகின்றது என கூறி வருகின்றனர். கனவு காண்கின்றனர். எனினும் சிந்திக்கத் தெரிந்த மக்கள் இந்த நாட்டில் உள்ளனர். மக்கள் எம்மோடு உள்ளனர்.
நாம் அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பி வருகின்றோம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *