Breaking
Fri. May 17th, 2024

முப்படைகளின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையிலான அனைத்து அங்கத்தவர்களதும் பாதுகாப்பிற்காகவும் அபிமானத்திற்காகவும் முன்னிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் பிரதானி என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் தனது பொறுப்புக்கள் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற 09 ஆவது பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டியின் பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

எமது பாதுகாப்புப் படையின் கௌரவத்தையும் அபிமானத்தையும் பாதுகாத்து அவர்களை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த முப்படைகளாக மாற்றுவதற்கு அரசு தன்னை அர்ப்பணித்துள்ளது.

இன்று அரசியல் மேடைகளிலும் ஒருசில ஊடகங்களிலும் பேசப்படும் படைவீரர்களை தண்டித்தல் எனும் கூற்றினைத் தான் வன்மையாக நிராகரிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, குறுகிய அரசியல் நோக்கங்களை விட தாய்நாட்டின் அபிமானத்திற்காக பணியாற்றுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான போட்டிகளில் கலந்துகொள்ளச் செல்லும் எமது நாட்டு வீரர், வீராங்கனைகளது ஆற்றல் மற்றும் திறமைகளை விருத்திசெய்வதற்கு எதிர்காலத்தில் கூடுதலான அனுசரணைகளை வழங்குவதற்கு அரசு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இவ்வீரர், வீராங்கனைகளின் தரம் மற்றும் பண்புகளை மேம்படுத்துவதற்காக சர்வதேச விளையாட்டு குழுமத்தினை நாட்டில் ஏற்படுத்துதல். அதற்குத் தேவையான தொழிநுட்ப அறிவு, பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்காக கூடுதலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான பிரேரணையொன்றை எதிர்காலத்தில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

முப்படைகளின் அங்கத்தவர்களுக்கிடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துதல், விளையாட்டு திறமைகளை மெருகூட்டுதல் என்பவற்றின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு அவர்களைக் கொண்டு செல்லும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சினால் வருடாந்தம் பாதுகாப்புச் சேவை விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஐந்து மாதங்களாக 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்தேறிய விளையாட்டுப் போட்டித் தொடரின் பூர்த்தி விழா இவ்வாறு ஜனாதிபதி தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

பாதுபாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *