Breaking
Sun. May 5th, 2024
இஸ்ஸாமிய தேச (ஐ.எஸ்.) இயக்கத்தின் செயல்களைக் கண்ட பிறகு, இதுபோன்ற பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்ற தெளிவு முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
வாஷிங்டனில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா பேசியதாவது:
கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது ஐ.எஸ். அமைப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இராக், சிரியா ஆகிய நாடுகளில் சில பகுதிகள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களது முரட்டுத்தனமான நடவடிக்கைகள், வழக்கத்துக்கு மாறானதாக உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளை உற்றுநோக்கிப் பார்த்தால் பயங்கரவாத செயல்களே அதிக அளவில் புலப்படுகின்றன. இதையடுத்து, ஐ.எஸ். பற்றி இஸ்லாமியர்களிடையே ஒரு தெளிவு பிறந்திருப்பதை முதல் முறையாக நான் பார்க்கிறேன். ஐ.எஸ். ரக மதத் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கருதுவதைக் காண முடிகிறது. 21-ஆம் நூற்றாண்டில் இதுபோன்ற தீவிரவாதத்துக்கு இடமில்லை. நாம் எப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளப் போகிறோம் என்று திட்டமிடுவது அவசியம்.
சிரியா, இராக்கில் உள்ள இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும். மேலும் பல்வேறு நாடுகளுடன் இணைந்து கூட்டுப் படை அமைப்போம்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் IS க்கு எதிராகச் செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்றார் ஒபாமா.
அமெரிக்க இடைத் தேர்தலில் குழப்பம்
அமெரிக்காவில் மேலவைக்கான இடைத் தேர்தல் நவம்பர் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இராக், சிரியாவில் ஐ.எஸ். நிலைகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் நடத்தப்படும் என்ற ஒபாமாவின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஒபாமா சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இடையே பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன.
அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள், கிழக்கு ஆசிய நாடுகளில் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பது குறித்த கவலை எழுந்துள்ளது.
அப்பகுதியிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகள், அமெரிக்க விரோத நாடுகளாக மாறும் வாய்ப்புள்ளது என்று ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஒபாமாவின் அறிவிப்பை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது குறித்து அவர்கள் குழம்பி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *