Breaking
Thu. May 2nd, 2024

அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதோடு அவர்கள் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உரிய தீர்வு கிடைக்கச்செய்ய வழி வகுக்குமாறு விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.

இலங்கை வந்துள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சிறுபான்மைச்சமூகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடன் இணைந்து நேற்று (19) நண்பகல் கொழும்பில் சந்தித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த சந்திப்பில் வலியுறுத்தியதாவது,

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள், தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் பரஸ்பரம் இணைந்து சுமூகமாக வாழ்கின்றபோதும் அவர்கள் தொடர்ந்தேர்ச்சியாக துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர்.

கடந்த கால யுத்தத்தில் முஸ்லிம்கள் நேரடியாக சம்பந்தப்படாத7m8a7910-01 7m8a7983-01 7m8a7971-01 7m8a7960-01 7m8a7944-01 போதும் அதனால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 1990 ஆம் ஆண்டு வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் துரத்தப்பட்டு இன்னும் அகதி முகாம்களில் வாழும் கொடுமையே நிலவுகின்றது. இந்தக் காலப்பகுதியில் இவர்கள் வாழ்ந்த பூர்வீக குடியிருப்புக் காணிகள், விவசாயக்காணிகள் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் சில காணிகள் வர்த்தமானிப்பிரகடனம் மூலம் அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீள்குடியேறுவதற்கு பெருந்தடை நிலவுகின்றது.

சர்வதேசமோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ வடக்கு முஸ்லிம் சமூகத்தை எள்ளளவும் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அழுத்தம் கொடுத்துவரும் சர்வதேசம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலோ, அவர்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலோ அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும் இந்த மக்களை குடியேற்றுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரசினால் உருவாக்கப்பட்ட விஷேட செயலணியின் செயற்பாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலேயுள்ள வடமாகாண சபை தடை போடுகின்றது. இந்த மாகாண சபை வடக்கு முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நடாத்துகின்றது. அவர்கள் உதவுகின்றார்களுமில்லை, உதவி செய்பவர்களை அனுமதிக்கின்றார்களுமில்லை. நீங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எங்களின் மனக்குறைகளையும் கவலைகளையும் எடுத்துரைக்க வேண்டும்.

போரின் காரணமாக அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களுக்கோ உடமைகளுக்கோ இற்றவரை அரசாங்கம் எந்த நஷ்ட ஈடும் வழங்கவுமில்லை, அவற்றை மீளக்கட்டிக்கொடுக்கவுமில்லை எனவும் அமைச்சர் தனது வேதனையை இந்த சந்திப்பில் வெளிப்படுத்தினார்.

வடக்கு – கிழக்கை இணைப்பதற்கும் எமது கட்சி ஒரு போதும் இடமளிக்காது. பொதுவாக இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வடக்கு – கிழக்கு இப்போது இருப்பது போன்றே தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். கடந்த கால அனுபவங்களில் இருந்து இந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளதுடன் அதுவே தங்களுக்கு பாதுகாப்பு எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

இது மட்டுமன்றி இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு பல்வேறு அக்கிரமங்களும் அநியாயங்களும் இழைக்கப்பட்டன. தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைக்கப்பட்டது. அழுத்கமையில் முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான பெறுமதியான சொத்துக்கள் எரிக்கப்பட்டன. உயிர்கள் பலி கொள்ளப்பட்டன. இனவாதிகளால் இழைக்கப்பட்ட இந்த கொடூரங்களுக்கு இற்றைவரை எந்த நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை.

யுத்த காலத்தில் காத்தான்குடி, பொலநறுவை பள்ளிகளில் தொழுது கொண்டிருந்தோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு சிறுபான்மையிலும் சிறுபான்மையாக வாழும் சமூகத்திற்கு இரண்டு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளாலும், இனவாதிகளாலும் கொடூரங்களே இழைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே கடந்த கால வரலாறு.

கிழக்கிலே முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான காணிகள் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அம்பாறை நுரைச்சோலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் அந்த மக்களை வாழவிடாது இனவாதிகள் தடை போட்டுள்ளனர். இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை நீங்கள் உள்வாங்கி ஜெனீவா,, மற்றும் இலங்கை அரசுக்கு நீங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையிலே அதனையும் சுட்டிக்காட்ட வேண்டும். அதன் மூலம் எமக்கு விமோசனம் கிடைக்க உதவுவீர்களென நாம் நம்புகின்றோம்.

அத்துடன் புதிய அரசியல் யாப்பு, தேர்தல் முறை மாற்றம் ஆகியவற்றிலும் எமது சமூகத்திற்கு அநீதி இழைக்க இடமளிக்க வேண்டாமென நீங்கள் உங்கள் முன்மொழிவில் உணர்த்த வேண்டும்.

எல்லை நிர்ணயம், எல்லை மீளாய்வு தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவடையக்கூடிய நியாயமான அச்சம் எமக்கு இருக்கின்றது.

சிறுபான்மையினர் செறிந்து வாழும் சில பிரதேசங்களைத் துண்டாக்கி அதனை பெரும்பான்மை பிரதேசங்களுடன் இணைக்கும் முயற்சிகளுக்கு ஊக்குவிக்க வேண்டாமென்ற விடயத்தையும் உங்கள் சிபாரிசில் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறான விடயங்களை மேற்கொள்வதன் மூலமே உண்மையான நல்லெண்ணத்தையும் சக வாழ்வையும் மேற்கொள்ள முடியும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முஸ்லிம்கள் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் கூறிய விடயங்களை மிகவும் உன்னிப்பாக கேட்டறிந்த விஷேட அறிக்கையாளர் ரீட்டா தெரிவித்ததாவது,

அண்மைய நாட்களில் தான் பல்வேறு முஸ்லிம் தரப்பினருடனும் சந்திப்பை ஏற்படுத்தியதாகவும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தற்போது முழுமையாக விளங்கிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தனது அறிக்கையில் இந்த விடயங்கள் நிச்சயமாக இடம்பெறுமெனவும் அவர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ் சுபைர்தீன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம் எச் எம் நவவி, அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், சிரேஷ்ட சட்டத்தரணிகளான, என் எம் ஷஹீட், ருஷ்தி ஹபீப், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், முன்னாள் பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, கலாநிதி மரைக்கார் ரியாஸ் சாலி, அலிகான் சரீப் ஆகியோர் பங்கேற்றனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *