Breaking
Thu. May 2nd, 2024

புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின், 100 நாட்களுக்குள் புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இவ்வைபவத்தில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, அதுரலியே ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ஆர்.யோகராஜன், துமிந்த திசாநாயக்கா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்வெளியீட்டின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம்

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன.

தன்னிச்சையான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைக்கு பதிலாக நாடாளுமன்றம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.

அதில் ஜனாதிபதியும் நாட்டின் ஏனைய பிரஜைகளை போல் சட்டத்திற்கு முன் சாதாரண பிரஜையாக கருதப்படும்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி சட்டரீதியான விசேட சிறப்புரிமைகள் ஜனாதிபதிக்கு கிடைக்காது.

சகல திருத்தங்களிலும் நாட்டின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, இறையாண்மை என்பன பாதுகாக்கப்படும். இவற்று பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு அமைச்சரவை மற்றும் அதன் துறைகள் தீர்மானிக்கப்படும்.

அமைச்சுக்களின் செயற்பாடுகளுக்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு முறை வலுப்படுத்தப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர மக்கள் பிரதிநிதிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறி கோவை சட்டமாக்கப்படும்.

தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் மேற்கொண்டு வரும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக நிறுத்தும் நோக்கத்தில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

மக்களை துன்பத்திற்கு உள்ளாக்குவதுஇ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதுஇ இலஞ்சம் பெறுவது, பாலியல் துஷ்பிரயோகம், கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடக்காத சமூகத்தை உருவாக்க இது உதவும்.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகளின் பக்கசார்பான செயற்பாடுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விருப்பு வாக்கு முறை ஒழிக்கப்படும். அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கட்டாயம் தெரிவு செய்யப்படும் வகையில் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் செய்யப்படும்.

நல்லாட்சியை கண்காணிக்க கண்காணிப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும். அரசியலமைப்புத் திருத்தம் மூலம் நீதித்துறை, பொலிஸ், தேர்தல், கணக்காய்வு, சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் பக்கசார்பின்மையை பாதுகாக்க சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

அத்துடன் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை வலுப்படுத்தவும் அமுல்படுத்தவும் அந்த ஆணைக்கு சுயாதீன ஆணைக்குழுவாக மாற்றப்படும்.

அரச சேவையை வலுவானதாக மாற்றவும் அதன் பக்கசார்பின்மையை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க சுயாதீன ஆணைக்குழு ஏற்படுத்தப்படும். அத்துடன் நீதிபதி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் சிரேஷ்டத்துவம் மற்றும் தி்றமைகளின் அடிப்படையில் வழங்கப்படுவதற்கான முறை உருவாக்கப்படும்.

சிறுவர் மற்றும் பெண் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்த தேவையான சட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்பதுடன் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.

சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட உள்ளதுடன் வேட்பாளர்கள் அரச அதிகாரம், பணம் மற்றும் ஊடகங்களை தவறாக பயன்படுத்துவது முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல்கள் அறிந்து கொள்வது மக்களின் உரிமை. சகல தகவல்களையும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் சட்டம் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அபிவிருத்திகளில் பாரிய மோசடிகளை நிறுத்தி, 6 வருடங்களுக்குள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகளை விட 10 மடங்கு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்.

மக்கள் பெறும் கடன் பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்.

மேலும் மக்களின் வாழ்க்கை செலவை குறைக்கும் நோக்கில் 10 அத்தியவசிய பொருட்களுக்கான சுங்க வரிகள் நீக்கப்படும். இதன் மூலம் உணவுப் பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்க முடியும்.

அரச ஊழியர்களின் ஊதியம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும். முதல் கட்டமாக பெப்வரி மாதம் 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

.

ஒய்வூதியம் பெறுவோரின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் வரை 3.500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும்.

மூத்த பிரஜைகளுக்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவி தொகை ஆயிரத்து 500 ரூபாவாக உயர்த்தப்படும்.

நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு நாட்டின் தேசிய வருமானத்தில் 6 சத வீத நிதி ஒதுக்கப்படும். பல்லைக்கழக மாணவர்களின் மாபொல புலமைப் பரிசில் தொகை 5 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும்.

அத்துடன் தொழிறநுட்ப கல்வியை கற்கும் மாணவர்களுக்கு கடனுதவியை பெற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைந்த மாணவர்கள் டிப்ளோமா பாடநெறியை கற்க கடனுதவி வழங்கப்படும்.

தேசிய நிலைப்பாடுகளை கொண்ட வெளிநாட்டு கொள்கை உருவாக்கப்படும். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதிலை வழங்கி இலங்கை தொடர்பில் புதிய தோற்றப்பாடு உலகத்தின் மத்தியில் கட்டியெழுப்பப்படும்.

அரச ஊடகங்கள் ஆளும் கட்சியின் பிரசார ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்தி சமநிலை தகவல்களை வழங்க தேவையான கொள்கைகள் உருவாக்கப்படும்.

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் குறுகிய மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும்.

இணையத்தளங்களை இலவசமாக பயன்படுத்தும் வகையில், வைஃபை வலயங்கள் பிரதான நகரங்களில் ஏற்படுத்தப்படும்.

கட்சி, இன, மத பேதமின்றிய 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வளர்ச்சியடைந்த நாடாக இலங்கை உருவாக்கப்படும் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபாலவின் கொள்கைப் பிரகடனக் கூட்டத்திற்கு இடையூறு

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடனக் கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பொது வேட்பாளரின் கொள்கைப் பிரடகன வெளியீட்டு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்விற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

நிகழ்வு நடைபெறும் இடத்தை அண்டிய பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பூங்கா பகுதிக்கான நீர் விநியோகமும் வரையறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், தடைகளை பொருட்படுத்தாது மைத்திரிபால சிறிசேன கொள்கைப் பிரகடனம் தொடர்பிலான அறிமுக உரையை மேற்கொண்டு வருகின்றார்.

இடையூறுகள் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் பிரச்சாரத்தை முன்னெடுத்து தேர்தலில் வெற்றியீட்டி மக்களுக்கு சேவையாற்ற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்கைப் பிரகடனம் கையளிக்க ஆயத்தமாகிய தருணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *