Breaking
Mon. May 6th, 2024
முஸ்லிம் சமுகத்தின் மானத்தையும் மரியாதையும் காப்பாற்றி சமுகத்தை கௌரவமாக வாழவைப்பதற்கான கூட்டுத்தான் நானும் சகோதரர் ரவூப் ஹக்கீமும் இணைந்த இந்தக் கூட்டாகும். பொதுபலசேனாவையும் ஞானசாரரையும் அடக்கி ஒடுக்காததன் விளைவுதான் இது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யார் ஜனாதிபதி என்பதை இங்குள்ள 20 இலட்சம் முஸ்லிம்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக மாற வேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
பதுளை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீனும் அமைச்சர் ரவூப் ஹக்கீமும்; ஒரு மேடை ஏறினர். இங்கு உரையாற்றும் போதே அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றியபோது
முஸ்லிம் சமுகத்தின் மானத்தையும் மரியாதையும் காப்பாற்றி முஸ்லிம் சமுகத்தை கௌரவமாக வாழவைப்பதற்கான கூட்டுத்தான் நானும் சகோதரர் ரவூப் ஹக்கீமும் இணைந்த இந்தக் கூட்டாகும். இன்று இந்தக் கூட்டை மலினப்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கி அதற்காக சமுக வலைத்தளங்களை பாவிப்பதை நான் பார்க்கின்றேன். எனினும், அந்த மலினப்படுத்தல்களுக்கு அப்பாற்சென்று பதுளை மாவட்ட முஸ்லிம்கள் ஒன்று பட்டுவருகின்றார்கள்.
எமது ஒன்றுபட்ட இந்தக் கூட்டை 25 மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்ற பொறுப்பு, 20 இலட்சம் முஸ்லிம்களை ஒன்றுபடுத்தும் பொறுப்பு இன்று பதுளை மாவட்ட முஸ்லிம்களின் கைகளில் வந்துள்ளது. அதற்கு இத்தேர்தல் நல்லதொரு சந்தர்ப்பமாகும். இதற்கு மாற்றமாக பதுளை மாவட்ட முஸ்லிம்கள் செயற்படுவார்களாயின் அது இந்த நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமை, கௌரவம் என்பனவற்றை நாசம் செய்த பாவம் இந்த பதுளை மாவட்ட முஸ்லிம்களையே வந்து சேரும். என்னையும் ரவூப் ஹக்கீமையும் இந்த அரசை விட்டு துரத்துங்கள், வெளியேற்றுங்கள் என்று ஞானசாரரும் பொதுபலசேனாவும் அவர்களது அடிவருடிகளும் கோசம் எழுப்புகின்றனர். இவ்வாறான கோசங்களை எமது சகோதரர்களில் சிலரும் எழுப்புகின்றனர்.
வடக்கு முஸ்லிம்கள் 20 வருடங்களுக்கு பின்னர் இன்று மீள்குடியேற செல்கின்றனர். இதனைக் கூட தடுத்து அநியாயம் செய்கின்ற செயற்பாடுகளில் பொதுபலசேனா இறங்கியுள்ளது. புலிகளால் அன்று அழிக்கப்பட்ட 79 பள்ளிகள், பாடசாலைகள், 20ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளை இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கட்டிக்கொண்டு வருகின்றோம். இதனையும் தடுத்து என்னை துயரப்படுத்துகின்ற செயற்பாடுகளில் பொதுபலசேனா அண்மையில் செயற்பட்டது. எனினும் அதனையும் மீறி துணிச்சலாக எமது பணிகளை முன்னெடுக்கின்றோம்.
இவற்றிலிருந்தெல்லாம் ஓரளவாவது முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்து காப்பாற்றி எதிர்காலத்தில் வரப்போகும் பெரிய ஆபத்திலிருந்தெல்லாம் சமுகத்தை காப்பாற்ற இந்த அரசில் எமக்குள்ள பலத்தினாலும் இந்த அரசில் இருப்பதினாலும்தான் இந்த அநியாயக்காரர்களிடமிருந்து எமது சமுகத்தை காப்பாற்ற முடியுமாகவுள்ளது. ஹலால் பிரச்சினையின்போது அரசால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு மிக ஆபத்தான முடிவுகளை எடுக்கவிடாமல் தடுக்க நானும் சகோதரர் ரவூப் ஹக்கீமும் இந்த அமைச்சரவையில் இருந்ததால்தான் முடிந்தது என்பதையும் முஸ்லிம் சமுகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸின் வருகைக்கு முன்னர் எவ்வாறு இந்த முஸ்லிம் சமுகத்தை இருபெரும் தேசியக் கட்சிகளும் கறிவேப்பிலையாக பாவித்ததோ அதேபோன்று இன்றும் பாவிக்கவே இந்த முஸ்லிம் கூட்டமைப்பை சின்னாபின்னப்படுத்தி இ முஸ்லிம் சமுகம் இந்தக் கூட்டுக்கு பின்னால் இல்லை என்று இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கான அடித்தளமாகவே இந்தக் கூட்டமைப்பை பற்றி அவதூறாக அறிக்கை விட்டே அமைச்சர் நிமலின் கருத்து அமைந்திருந்தது என்பதை பதுளை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யார் ஜனாதிபதி என்பதை இங்குள்ள 20 இலட்சம் முஸ்லிம்களின் வாக்குகள் தான் இதீர்மானிக்கும் சக்தியாக மாற வேண்டும். எனதும் சகோதரர் ரவூப் ஹக்கீமினதும் எதிர்கால அரசியலுக்கு பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை என்ற நோக்கோடுதான் இந்த சமுகத்தை முன்னிலைப் படுத்தியவர்களாக நாங்கள் ஒன்று பட்டிருக்கின்றோம். எனவே முஸ்லிம் கூட்டமைப்பின் வெற்றிதான் இந்த சமூகத்தின் வெற்றி 20இலட்ச முஸ்லிம்களின் வெற்றி என்பதை இறுதியாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *