Breaking
Wed. May 8th, 2024

ஊடகபிரிவு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான படையணியைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள்  அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரின் பெர்னாண்டோவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்துள்ளார். ராஜபக்ஷ படையணி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க வேண்டும் என்ற செய்தியையே ஊவா தேர்தலினூடாக மக்கள் வழங்கியுள்ளனர்.

இதற்கமைய ராஜபக்ஷ படையணியை விரட்டியடிக்க எமது கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும், அரசிலுள்ள சக்திகளையும் ஒன்றுதிரட்ட வேண்டும். பல அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் தற்போது இணக்கப்பாட்டுக்கு வந்து, செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.

விசேடமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்து, அரசமைப்பின் 17வது திருத்தச் சட்டத்தை மீள் நடைமுறைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அடுத்து இடம்பெறவுள்ள தேசியத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம் ஈடுபட்டு வருகிறார். நவம்பர் மாதத்திற்குள் இந்த நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முழு நாடும் ஒரு தேர்தல் தொகுதியாகும். அந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பொறுப்புகளைக் கையேற்று, கட்சியை வெற்றிபெறச் செய்ய தொகுதி அமைப்பாளர்கள் முன்வர வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அரசு தமது பண பலத்தைக் கொண்டு தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கும்போது, நாம் கிராமத்துக்கு கிராமம் சென்று மக்களைச் சந்தித்து, தேர்தலில் வெற்றிபெற செயற்பட வேண்டும். இலங்கையை சிறந்த வெற்றியுடைய பூமியாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். ஆனால், மக்களுடைய வெற்றி பூமியாக மாற்ற வேண்டும் என அவர் கூறவில்லை. துஷ்டர்களின் வெற்றி நாடாக மாற்றவே படையணி முயற்சிக்கிறது.

கிறிஸ் நோனிஸைத் தாக்கியவர்களினதும், சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தாதவர்களின் வெற்றிநாடாகவே மாற்ற வேண்டும் என்பதே ராஜபக்ஷ படையணியின் நோக்கமாகும். இவ்வாறானதொரு நாடு எமக்குத் தேவையில்லை. மக்கள் இப்படியானதொரு நாட்டை எதிர்பார்க்கவில்லை. நாட்டில் ஒரு சதவீதத்தினர் வெற்றிநாடாக்க மக்களுக்குத் தேவையில்லை.

இந்தப் படையணியின் தேவைக்கேற்ப இந்த நாட்டை மாற்ற இடமளிக்கமுடியாது. அனைவரையும் ஒன்றிணைத்து, படையணியின் இந்த நோக்கத்தைத் தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கும். நாட்டில் மக்கள் வாழவேண்டிய நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக மஹிந்த ராஜபக்ஷ படையணியை விரட்டியடிக்க வேண்டும்” என்றுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *