Breaking
Mon. Apr 29th, 2024


தெற்கில் இடம்பெற்று வருவது போன்று வடக்கிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும்  அந்தவகையில் மன்னார் மாவட்டத்திலும்  சுற்றுலாத்துறை மேம்பாடு , திருமலைக்கான  அதிவேக நெடுஞ்சாலை ,தலைமன்னார்இராமேஸ்வர கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதன் ஊடாக பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை செயற்படுத்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 1300 வீடுகளை அமைப்பதோடு அடுத்த வருடம் மேலும் அதனை அதிகரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் மாவட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான வரவேற்பு நிகழ்வு, மன்னார் நகரசபை மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நேற்று (15) நடைபெற்றது.

 

இங்கு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது ;

 

வடக்கு அபிவிருத்தியை பொறுப்பேற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் கிளிநொச்சி , முல்லைத்தீவு , மன்னார்  என்று எனது விஜயம் அமைந்துள்ளது. வடக்கு  மக்கள் எனக்குத்தந்த ஆதரவை மறவேன். வடக்கின்  அபிவிருத்தியை மறந்தும் என்னால் செயற்பட முடியாது.

 

2015 ஆம் ஆண்டு புதிய ஆட்சியை நாங்கள் உருவாக்கும் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எங்களோடு தோளோடு தோள் நின்றார். எல்லோரும் சேர்ந்தே ஜனாதிபதியை வெல்லச்செய்து ஆட்சியை கொண்டு வந்தோம் . அமைச்சர் றிஷாட்டின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் நான் இங்கு நினைவு படுத்துகின்றேன். ஜனநாயகத்தை நிலை நாட்டி அபிவிருத்தியை துரிதப்படுத்தவே அந்த ஆட்சியை நிறுவினோம். எனினும் ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியும் புரட்சியும் ஜனநாயகத்திற்கு கிடைத்த மரண அடியாக மாறியது. அபிவிருத்தியை ஸ்தம்பிக்க செய்தது.

 

இருந்த போதும் அந்த சவால்களை முறியடிக்க நீங்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் அமைச்சர் றிஷாட்டின் அர்ப்பணிப்பான பங்களிப்புக்கும் எனது நன்றிகள்இந்த போராட்டத்தில் எனக்கு அமைச்சர் ரிஷாட் பக்கபலமாக நின்று செயற்பட்டார். அமைச்சர் ரிஷாட் மேற்கொண்ட பாரிய அபிவிருத்தியின் வெளிப்பாடே கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அவரது கட்சி இந்த பகுதியில் மூன்று பிரதேச சபைகளை வெற்றி கொண்டமை யாகும் 

 

வடக்கில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள உள்ளோம். பலாலி விமான நிலையத்தை விஸ்தரித்து சர்வதேச மட்டத்திற்கு அதனைக்கொண்டுவர முடிவு செய்துள்ளோம். அமைச்சர் றிஷாட்டின் கீழுள்ள காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையை அபிவிருத்தி செய்வதுடன் அந்த பிரதேசத்தில் கைத்தொழில் கிராமம் ஒன்றையும் உருவாக்குவோம் . சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக காங்கேசன் துறைதமிழ் நாடு , தலைமன்னார்தமிழ் நாடு கப்பல் சேவைகள்  ஆரம்பிக்கப்படவுள்ளன . தலைமன்னார் துறையை வெறும் பயண  வழிப்போக்குவரத்தாக மட்டும்  ஈடுபடுத்தாமல், அந்தப்பிரதேசத்தில் பொருளாதார கேந்திர மையம் ஒன்றையும்  அமைக்குமாறு அமைச்சர் சாகலவுக்கு அறிவுறுத்தி உள்ளேன். 

 

இந்திய அரசின் உதவியுடன் மன்னார்வவுனியாதிருகோணமலை அதிவேக நெடுஞ்சாலை அமைத்தல் , மன்னாரில் நெற்களஞ்சியசாலை , பனம் பொருள் , தெங்கு அபிவிருத்தி, மற்றும் மீனவர் அபிவிருத்தி  என்று எமது பணிகள் இவ்வருடம் வியாபிக்கவுள்ளன . இந்த வருடம் இந்த மாவட்ட பட்டதாரிகளுக்கு  அதிகமான தொழில்களை கொடுக்கும் வாய்ப்பை அமைச்சர் ரிஷாட் பெற்றுக்கொள்ள உள்ளார்.

 

எண்டபிறைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தையும்  இங்கும் விஸ்தரிப்போம். இவ்வாறு பிரதமர் கூறினார். 

 

இந்நிகழ்வில் அமைச்சர்களான வஜிர அபேவர்தன, பி ஹரிசன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், பிரதியமைச்சர் புத்திக பத்திரன மற்றும் நகர சபை பிரதேச சபை தலைவர்கள் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Related Post