Breaking
Thu. May 2nd, 2024
இந்த மார்க்கத்தில் எவ்வித வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்’
குர்ஆன் 2:256
இந்த வசனம் இறங்கிய வரலாற்றை சற்று பார்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பு மதினாவில் ஒரு பழக்கம் இருந்தது. குழந்தைக்கு ஏதாவது நோய் வந்து விட்டால் அன்றைய சிலை வணங்கிகள் ‘எனது குழந்தைக்கு நோய் குணமாகி விட்டால் அந்த குழந்தையை யூதனாக்கி விடுகிறேன்’ என்று நேர்ச்சை செய்து கொள்வார்கள். குழந்தைக்கு குணமாகி விட்டால் அந்த குழந்தைகளை யூதர்களிடம் கொடுத்து விடுவார்கள் அன்றைய மக்கா மதினாவாசிகள். கோவிலுக்கு நேர்ந்து விடுவது என்று நம் பக்கம் சொல்வதில்லையா அது போல். இவ்வாறு பல குழந்தைகள் யூதர்களாக வளர்ந்து வந்தனர். இந்த நேரத்தில் மதினாவில் இஸ்லாம் வளர ஆரம்பிக்கிறது. மதினாவில் இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் உயருகின்றனர். ஒரு கட்டத்தில் மதினாவிலிருந்த யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவ்வாறு அவர்கள் வெளியேறும் போது யூதர்களாக மத மாற்றம் செய்யப்பட்ட சில சிறுவர்களும் அவர்களோடு செல்ல நேரிட்டது. அந்த சிறுவர்களின் தாய் தந்தையரோ இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். ‘அறியாமைக் காலத்தில் நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்கள் குழந்தைகளை யூதர்களாக வளர்க்க முன்பு அனுமதித்தோம். அது தவறு என்று உணர்ந்துள்ளோம். எனவே எங்கள் குழந்தைகளை நாங்கள் கட்டாயப் படுத்தி இஸ்லாத்தில் இணைத்து விடுகிறோம்’ என்று மதினா முஸ்லிம்களில் சிலர் நபி அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். அப்போதுதான் இந்த வசனம் இறங்குகிறது.
‘இந்த மார்க்கத்தில் எவ்வித வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.
-குர்ஆன் 2:256
இந்த சம்பவம் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அறிவிக்க அபூதாவூத் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் 2307 ஆவது ஹதீதாக பதியப்பட்டுள்ளது. இது ஆதாரபூர்வமான நபி மொழியாகும். சொந்த பிள்ளைகளின் மீதே தாய் தகப்பன் தங்களின் கருத்துக்களை திணிக்க குர்ஆன் அனுமதிக்காதபோது அன்னியர்களை மார்க்கத்தை ஏற்க வாளை தூக்க சொல்லியிருக்குமா? எனவே குர்ஆனின் அடிப்படையில் கட்டாய மத மாற்றம் செய்வதற்கு வாளை எடுப்பது இஸ்லாமிய நடைமுறை கிடையாது என்பதை விளங்கிக் கொண்டோம்.
இங்கு இன்னொன்றையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். மதினா யூதர்களின் தாயகம் அல்ல. அவர்களின் வேதத்தில் ‘ஒரு இறைத் தூதர் பின்னால் வருவார். சொந்த மக்களால் அவர் விரட்டப்படுவார். விரட்டப்பட்ட அவரும் அவரது நண்பர்களும் மதினாவில் தஞ்சமடைவர்’ என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு அந்த இறைத் தூதர் வரும் போது முதல் ஆளாக நாம் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவர்களின் முன்னோர் மதினாவில் குடியேறினர். அந்த யூதர்களின் வாரிசுகளே மதினாவை துறந்து வெளியேறினர் என்பதை மேலதிக தகவலாக தெரிந்து கொள்வோம்.
இனி இது பற்றி இந்து மத துறவி சுவாமி விவேகானந்தர் கூறுவதையும் கேட்போம்.
“ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் முஸ்லிம்களின் படையெடுப்பு ஒரு விடுதலையாக அமைந்தது. ஆதலால்தான் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாக மாறினர். இதனை சாதித்தது வாள் என்பதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வாளாலும் நெருப்பினாலுமே இவை சாதிக்கப்பட்டது என்று கூறுவது மதி கேட்டின் உச்ச நிலையாகும்” என்று கூறினார்.
-விவேகானந்தர், இஸ்லாமும் இந்தியாவும், ஞானய்யா, அலைகள் வெளியீட்டகம், பக்கம் 124.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *