Breaking
Sat. Apr 27th, 2024

வெற்றிலையை இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, அந்த நாடு இறக்குமதி வரியை மேலும் அதிகரித்துள்ளமையால் வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு  ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து, கைத்தொழில் வர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை (31.07.2017) பாகிஸ்தான் தூதுவர் அஹமட்கான் சிப்றாவிடம் எடுத்துரைத்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர தன்னுடன் தொடர்பு கொண்டு, வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில்  எடுத்துரைத்ததாகவும், இந்த விடயத்தை பாகிஸ்தான் அரசாங்கம் சாதகமாக பரிசீலித்து, வெற்றிலை ஏற்றுமதியாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் நன்மை பயக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஜூலைமாதம் தொடக்கம் இவ்வாறான மேலதிக இறக்குமதி வரியை பாகிஸ்தான் அரசு அமுல்படுத்தியிருப்பதனால் வெற்றிலை உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திச்; செலவைக்கூட ஈடு செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் வடமேல்மாகாணத்தில் புத்தளம், குருணாகல் போன்ற மாவட்டங்களிலேயே வெற்றிலை உற்பத்தி பெருமளவில் இடம்;பெறுவதாக தெரிவித்த அமைச்சர், இலங்கையானது பாகிஸ்தானுக்கு மட்டுமே வெற்றிலையை ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவித்தார்.

1கிலோ கிராம் வெற்றிலைக்கு பாகிஸ்தான் ரூபாவில் 200 (இலங்கையின் 291ரூபா)  மேலதிகவரி அறவிடப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ரிஷாட், இந்த விடயத்தை பாகிஸ்தான் அரசு மீள்பரிசீலனை செய்து வெற்றிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவேண்டுமெனவும் தெரிவித்தார்.

இவற்றைக் கேட்டறிந்துகொண்ட பாகிஸ்தான் பதில் தூதுவர், இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் காத்திரமான முடிவொன்றை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

2013ம் ஆண்டு 10.05 மில்லியன் டொலரும், 2016ம் ஆண்டு 7.38 மில்லியன் டொலரும், 2017ம் ஆண்டு முதல் அரைக்காலாண்டு பகுதியில் 10 மில்லியன் டொலரும் வெற்றிலை ஏற்றுமதியால் இலங்கைக்கு வருமானம் கிடைத்துள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கராச்சியில் நடைபெறவுள்ள இலங்கை – பாகிஸ்தான் கூட்டுப் பொருளாதார  ஆணைக்குழுவின் மாநாடு தொடர்பிலும் இங்கு சிலாகிக்கப்பட்டது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான சிக்கல்கள் குறித்து, இந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்வுகாண முடியும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *