Breaking
Fri. May 17th, 2024

– ஏ.எஸ்.எம்.ஜாவித்   –

கொலொன்னாவை, வெல்லம்பிட்டிய, புத்கமுவ போன்ற பிரதேசங்களில் வாழும் பாதிக்கப்பட்ட உலமாக்களுக்கும், மௌலவிமார்களுக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கொண்ட உதவிகளை, எமது வாழ்நாளில் நாம் ஒரு போதுமே மறக்க முடியாதென்று மெகொட கொலன்னாவ மௌலவி ரிழ்வான் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் அமைந்திருந்த 27 பள்ளிவாசல்களில், 25 பள்ளிவாசல்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல பள்ளிவாசல்கள் முழுமையாகவும், சில பள்ளிவாசல்கள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று உலமாக்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டதை அறிந்து எமக்கு உதவ முன்வந்தார் அமைச்சர் றிசாத்.

வெளிநாட்டிலிருந்த அவர் தனது நிகழ்ச்சிகளை இரத்துச் செய்துவிட்டு கடந்த சனிக்கிழமை (21/05/2016) இலங்கை திரும்பியவுடன், கொலொன்னாவ பிரதேசத்துக்கு வந்து நாம் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றார். மக்களை சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து அறிந்துகொண்டார்.

வெல்லம்பிட்டி சந்தியில் இருந்து  அவிஸ்சாவளை பிரதான வீதியில், கடல்போல் நிரம்பியிருந்த வெள்ளத்தில் படகொன்றில் மெகொட கொலன்னாவ, புத்கமுவ, பிரெண்டியாவத்தை ஆகிய பிரதேசங்களுக்குள் சென்று, மேல்மாடிகளில் தஞ்சமடைந்து வெளியேற முடியாத நிலையில் இருந்த மக்களிடம் படகில் இருந்தவாறே தேவைகளைக் கேட்டறிந்தார். அந்த மக்கள் தமக்கு போதியளவு சாப்பாட்டுப் பார்சல்களை படகில் வந்து தருகின்றார்கள் என்றும், மெழுகுதிரியும், நுளம்புத்திரியுமே அவசியம் என கூறினர்.

அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய  அமைச்சர் கொலொன்னாவ ஜும்ஆ மஸ்ஜித்துக்கு வந்தார். அங்கு இடம்பெற்ற நிர்வாகப் பணிகளை பார்வையிட்ட பின்னர் மஸ்ஜித் சம்மேளன நிர்வாகிகளுடன் தேவைகளைக் கேட்டறிந்தார். சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் ஐ.வை.எம்.ஹனீப்  வெள்ள அகதிகளுக்கு தாம் மேற்கொள்ளும் பணிகள் பற்றியும், அகதிகள் முகம் கொடுக்கும் கஷ்டங்கள், அவர்கள் பட்ட துயரங்களை எடுத்துச் சொன்னார். அங்கு கூடியிருந்த உலமாக்களிடம் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர், பின்னர் கொலொன்னாவ வித்தியா பாடசாலை, கொலொன்னாவை பன்சலை, பாத்திமா மகளிர் கல்லூரி, பதியுதீன் மஹ்மூத் கல்லூரி, ஹைரியா பாடசாலை, ஸ்டேடியம் கம ஆகியவற்றுக்குச் சென்று அகதிகளின் தேவையைக் கேட்டறிந்தார். அமைச்சருடன் உலமாக்கள் ஆகிய நாமும் இணைந்திருந்தோம்.

நேற்று திங்கட்கிழமை அமைச்சர் தான் சொன்னவாறு மீண்டும் எமது பிரதேசத்துக்கு வந்தார். புத்கமுவ சென்று அங்கு வாழும் சிங்கள சகோதரர்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுகளை வழங்கினார். பின்னர் கொலொன்னாவ ஜும்ஆ பள்ளிக்கு வந்து, பாதிக்கப்பட்ட உலமாக்களுக்கு உதவி வழங்கினார். அந்தவேளை பள்ளி சம்மேளனத் தலைவர் ஹனீப், மௌலவி முபாரக் அல்ரஷாதி ஆகியோரும் உடனிருந்தனர்.

“ஒரு சமூகத்தை வழிகாட்டும் உலமாக்களின் துன்பங்களை நேரில் கண்டறிந்து, அவர்களுக்கு உடனுக்குடன் உதவியளித்த அமைச்சரை நாம் என்றுமே மறக்கமாட்டோம்.“

உலமாக்களுக்கு உதவியளித்த அமைச்சர், கொலொன்னாவ வித்தியா கல்லூரி அகதி முகாம், பாத்திமா கல்லூரி அகதி முகாம், பதியுதீன் கல்லூரி அகதி முகாம், மாதம்பிட்டிய ஜும்ஆ பள்ளி அகதி முகாம், மட்டக்குளி அகதி முகாம், ஆகியவற்றுக்கும் சென்று அகதிகளை மீண்டும் சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

w3 (1) w23 (1)

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *