Breaking
Sat. Apr 27th, 2024

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து தான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லையெனவும் தன் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும், வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருவதாக கல்முனை மாநகர முன்னாள் மேயரும் லங்கா அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான ஷிராஸ் மீரா சாஹிப் அறிக்கையொன்றின் மூலம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னைத் தூரமாக்கி தமது அரசியல் தேவைப்பாடுகளை அடைந்து கொள்ள நினைப்பவர்களே இவ்வாறு திட்டமிட்டு கதை பரப்பி வருகின்றனர்.

இதன் மூலம் எனது அரசியல் வாழ்வை குழி தோண்டிப் புதைக்க முடியுமென்ற நப்பாசையில் அவர்கள் தினமும் கற்பனைக்கதைகளை சோடித்து வருகின்றனர்.

சமுதாய நலனில் விருப்பம் கொண்டே கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மேயராகினேன். இறைவனின் உதவியால் மிகக் குறுகிய காலத்தில் அரசியல் செய்து இந்தப் பதவியை பெற்று மக்கள் பணியாற்றி வந்தேன்.

எனது மேயர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பறித்தெடுத்த போதும் மக்களை விட்டு நான் ஒரு போதும் ஓடவில்லை. சமூக நலனை முன்னிறுத்தியே அப்போது தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டேன்.

பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சமூகம் சார்ந்த போராட்டங்களிலும், செயற்பாடுகளிலும் ஈர்க்கப்பட்டதனால் அவருடன் இணைந்து மக்கள் பணி புரிந்து வருகின்றேன்.

சிறு வயது முதல் அவருடன் நட்பாக இருந்ததனாலும், அவர் என்னுடைய பள்ளித்தோழராக இருந்ததனாலுமே இந்த சமூகப் பயணத்தில் நானும் இணைந்து கொண்டேன். என்னைப் பொறுத்த வரையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்கள் காங்கிரஸிலிருந்து வேறு ஒரு கட்சிக்கு தாவுகின்ற எண்ணம் எள்ளளவும் இல்லை.

எங்கள் கட்சித்தலைவரிடமிருந்து என்னை பிரித்தெடுத்து தங்களது எண்ணங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள்.

படிப்படியாக இழந்து வரும் தமது அரசியல் செல்வாக்கை சரி செய்வதற்காக சிலர் என்னை பகடைக்காயாக பயன்படுத்த நினைக்கிறார்கள். இவர்கள் இறைவனைப் பயந்து கொள்ளட்டும். இவ்வாறு ஷிராஸ் மீராசாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

 

-ஊடகப்பிரிவு-

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *