Breaking
Sun. Apr 28th, 2024
இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் கடமையை எவ்வித பாரபட்சமுமின்றி மேற்கொள்ளுவதற்கு ஏற்ற வகையிலான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நேரடியாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெலிமடையில் நேற்று தெரிவித்தார்.
 
பல தடவைகள் செல்லும் நடை முறைக்குப் பதிலாக அனைத்து முஸ்லிம்களும் இந்த யாத்திரையை மேற்கொள்ள வசதியாக இத்திட்டம் செயற்படுத்தப்படுமென தெரிவித்த ஜனாதிபதி, மத விவகார அமைச்சினூடாக இதற்கான நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
வெலிமடையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்து உரையாற்றிய ஜனாதிபதி;
 
குருத்தலாவ முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தைப் பெற்றுக் கொடுப்பதில் மகிழ்ச்சிய டைகின்றேன். இந்த பாடசாலைக்கு இதன் மூலம் 64 கணனிகள் கிடைக்கின்றன. கணிதப் பயிற்சி, மொழிப் பயிற்சிக் கூடங்களும் இதில் அடங்குகின்றன.
 
ஆங்கில மொழி, பிரான்ஸ் மொழி உட்பட பல மொழிகளை இங்கு கற்க முடியும். நான் சிங்கள பாடசாலைகளுக்குச் சென்றால் தமிழ் கற்க வேண்டுமென மாணவர்களைக் கேட்டுக்கொள்வேன். அதேபோன்று தமிழ் அல்லது முஸ்லிம் பாடசாலைகளுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அங்குள்ள மாணவர்களிடம் சிங்களம் கற்குமாறு அறிவுறுத்துவேன். எல்லோரும் அனைத்து மொழிகளையும் கற்றிருப்பது மிகச் சிறந்தது.
 
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்துங்கள். முதலில் இந்த நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
 
இது நாம் பிறந்த எமது தாய் நாடு. இந்த நாடே நாம் அனைவரும் வாழும் நாடு. நாங்கள் மரணிக்கும் நாடும் இதுவே. நான் பெளத்தன், எனது மதத் தலைவர் இந்தியாவைச் சேர்ந்தவர். கெளதம புத்தர் பிறந்ததும் இந்தியா வில்தான்.
 
முஸ்லிம் மக்களே! உங்கள் மதத் தலைவர் நபிகள் நாயகம் பிறந்ததும் மக்காவிலே, நான் பெளத்தனாக இருந்தாலும் நான் இந்தியன் அல்ல. நீங்கள் இஸ்லாமியர் என்றாலும் சவூதி அரேபியர் அல்ல. இதுவே நீங்கள் பிறந்த உங்கள் தாய் நாடு. நானும் நீங்களும் இந்த நாட்டிலேயே பிறந்தோம். நமது தாய் நாட்டையே நாம் நேசிக்க வேண்டும். மக்கா, மதீனாவுக்கு ஹஜ் போன்ற யாத்திரைகளை நீங்கள் மேற்கொள்வது முக்கியம். ஒருவர் ஒரு முறையாவது செல்வது சிறந்தது.
 
இப்போது குறிப்பாக சிலர் நூறு தடவைகளுக்கு மேல் ‘ஹஜ்’ சென்று திரும்பினாலும் மீண்டும் போவதற்கே முயற்சிக்கின்றனர். எனினும் குறிப்பிட்டவர்களே போகாமல் அந்த வாய்ப்பை இன்னும் ஒரு முஸ்லிமுக்கு வழங்கினால் அது நல்லது என நான் விரும்புகிறேன்.
 
நான் இப்படிக் கூறவும் பயமாகவுள்ளது. இதை சிலர் தவறாகப் புரிந்து கொள்வர். எனினும் எதிர்காலத்தில் மத அலுவல்கள் அமைச்சினால் அரசாங்கமே நேரடியாக இந்த ஏற்பாட்டை செய்ய கலந்துரையாடி வருகிறோம். இதுவரை காலமும் ஒரு பெயர் பட்டியல் போடப்பட்டு எமக்கு வரும். அதன்படி நாம் அனுமதி வழங்கினோம். எனினும் மத அலுவல்கள் அமைச்சி னூடாக இனி ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை நேரடியாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
 
இதற்கிணங்க ஒருவர் ஒருமுறை மக்கா சென்றால் அடுத்த முறை இன்னுமொருவருக்கு மக்கா செல்ல வழியேற்படும் என்பது எனது நம்பிக்கை. கஷ்டப்பட்டவர்களும் இதன்மூலம் மக்கா செல்ல வாய்ப்புக்கிட்டும்.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் கல்வி பற்றி கூறியுள்ளார். கல்வி கற்பது அனைத்து முஸ்லிம்களின் முக்கிய கடமை என அவர் வலியுறுத்துகிறார். பிள்ளைகள் இதனை மனதில் பதித்துக் கொண்டு செயற்பட வேண்டும். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுப்பது பெற்றோரின் பொறுப்பாகும்.
 
மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள உங்கள் பாடசாலை, இப்போது ‘சுப்பர் கிரேட்’ பாடசாலையாக உயர்த்தப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள ரோயல் கல்லூரி, விசாகா கல்லூரிக்கு கிடைக்காத தரமுயர்வு இந்தப் பாட சாலைக்கு கிடைத்துள்ளது. இதன் பலன்களை சரிவரப் பெற்று இந்த நாட்டை மட்டுமல்ல உலகை வெல்பவர்க ளாக நீங்கள் உங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் வழிபடும் இறைவனையும் நான் பிரார்த்திப்பேன். 
 
…………………
 
பயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நாம் போராடினோம். நாம் தமிழர்களுக்கு எதிராகப் போராடவில்லை. இனி எந்தக் காலத்திலும் எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டை பிரிப்பதற்கு சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *