Breaking
Sun. May 19th, 2024

ISIS உடன் இணைந்து சுமார் 1000 இற்கும் அதிகமான ரஷ்ய நாட்டவர்கள் சண்டையிட்டு வருவதாகவும் இவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்குத் திரும்பும் பட்சத்தில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் அபாயம் இருப்பதாகவும் ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சில் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் வெளிவரும் கொம்மெர்சாண்ட் (business daily) என்ற நாளிதழுக்கு அந்நாட்டு பாதுகாப்புக் கவுன்சில் தலைமை அதிகாரியான நிக்கொலை பட்ருஷேவ் அளித்த நேர்காணல் நேற்று  திங்கட்கிழமை வெளியாகி இருந்தது. அதில் தற்போது ISIS இற்காகச் சண்டையிட்டு வரும் ஆயிரக் கணக்கான ரஷ்யர்கள் ரஷ்யாவுக்கு உள்ளே மறைந்திருந்து உத்தரவினைப் பெறக் கூடிய பல இரகசியப் போராளிகளை உருவாக்க முடியும் என்றும் பின்னர் அவர்கள் மூலமாக எதிர்காலத்தில் ரஷ்யாவை அதிர வைக்கும் தாக்குதல்களை நிகழ்த்த முடியும் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

பட்ருஷேவ் மேலும் அளித்த தகவலில் ரஷ்யாவில் மாத்திரமின்றி மத்திய ஆசிய நாடுகளிலும் குறிப்பாக இளம் நபர்களையும் பழங்குடி சிறுபான்மையினத்தவரையும் குறி வைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிரியாவுக்குச் சென்று ISIS உடன் சேர்வதெற்கென புறப்பட்டுச் சென்ற மாஸ்கோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி மற்றும் 12 மேலதிக ரஷ்யர்கள் துருக்கி எல்லை நகர் ஒன்றில் கைது செய்யப் பட்டிருந்தனர்.

இதேவேளை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடந்த வாரம் உக்ரைன் பிரச்சினையால் மேற்குலகுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ள நிலையிலும் ISIS உடன் போராடுவதில் சர்வதேசத்துடன் கூட்டுறவை வலுப்படுத்துவது அவசியம் எனவும் ISIS பூரணமாகவே ஓர் தீய சக்தி என்றும் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *