Breaking
Mon. Apr 29th, 2024

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகின்றன. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன் முதல் அங்கமாக பளையில் இருந்து யாழ்தேவி இன்று 13-01-2014 யாழ்ப் பாணத்துக்கு பயணம் செய்கிறது.

பளையிலிருந்து யாழ்ப்பாணம்வரை ரயிலில் பயணிக்கும் ஜனாதிபதி, கொடிகாமம் மற்றும் நாவற்குழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களையும் திறந்துவைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ரயிலில் பயணிக்கும் அவர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தைச் சென்றடைந்து புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார்.
இன்று முற்பகல் 9.30 மணிக்கு பளையிலிருந்து ரயிலில் புறப்படும் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 10.30 மணிக்கு யாழ் ரயில் நிலையத்தைச் சென்றடையவுள்ளனர்.
கொழும்புக்கும் பளைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டிருக்கும் யாழ் தேவி ரயில் சேவை இன்று முதல் யாழ்ப் பாணம்வரை சேவையைத் தொடர்கிறது. பயணிகளின் வசதி கருதி கொழும்பு புறக்கோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவை கல்கிஸ்சை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கல்கிஸ்சையிலிருந்து தினமும் நகரங்களுக்கிடையிலான இரண்டு கடுகதி ரயில் சேவைகள் (இண்டர்சிட்டி) ஆரம்பமாகவிருக்கும் அதேநேரம், யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கும் இரண்டு ரயில்கள் கல்கிஸ்சையை வந்தடையும். இதனைவிட புறக்கோட்டையிலிருந்து மேலும் இரண்டு ரயில் சேவைகள் யாழ்ப்பாணத்துக்கு தினமும் இடம்பெறும்.
சுமார் 25 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் சேவை யாழ்ப்பாணத்துக்கு ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேலும் பலப்படுத்தியிருப்பதுடன், யாழ் குடாநாட்டின் பொருளாதாரத்துக்கு மேலுமொரு உந்துசக்தியாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.சுமார் கால் நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகின்ற யாழ்ப்பாணம் புகையிரத சேவையானது கல்கிசை ரயில் நிலையம் வரை நடத்தப்படுவதாக யாழ் ரயில் நிலைய பிரதம அதிபர் நா. தவானந்தன் Tn குத் தெரிவித்தார்.
இதன்படி தினமும் அதிகாலை 5.10 மணிக்கு கல்கிசையிலிருந்து புறப்படுகின்ற குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் கொழும்பு கோட்டையை வந்தடைந்து காலை 5.50 மணிக்கு யாழ். நோக்கிப் புறப்படும்.
இந்தக் கடுகதி ரயில் முற்பகல் 11.56 இற்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.
பின்னர் அந்த கடுகதி ரயில் பிற்பகல் மணி 1.45க்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு இரவு 8.00 மணிக்கு கொழும்பு கோட்டையையும், 8.31க்கு கல்கிசையையும் சென்றடையும்.
யாழ் தேவி ரயில்
இதே வேளை, தினமும் காலை மணி 6.30க்கு கல்கிசையிலிருந்து புறப்படும் யாழ் தேவி கொழும்பு கோட்டைக்கு வந்து, அங்கிருந்து மீண்டும் காலை 7.15க்கு புறப்பட்டு பிற்பகல் 3.04ங்கு யாழ்ப்பாணம் சென்றடையும்.
அதே சமயம் தினமும் காலை 7.25க்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் யாழ் தேவி மாலை மணி 3.47க்கு கொழும்பு கோட்டையையும், 4.16ன்னு கல்கிசையையும் சென்றடையும். இலங்கை அரச ரயில்வே திணைக்களம் மேலே குறிப்பிட்டபடி நாளை முதல் (14ஆம் திகதி) நிரந்தர புதிய நேர அட்டவணைப்படி ரயில் சேவை நடத்தவிருக்கிறது.
யாழ் தேவி, குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ஆகிய இரு ரயில்களுமே கல்கிசைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் சேவையில் ஈடுபடுவதாக யாழ் ரயில் நிலைய பிரதம அதிபர் தவானந்தன் தெரிவித்தார்.
யாழ். கோட்டை இடையே மற்றொரு கடுகதி ரயில் சேவை
இது இவ்விதமிருக்க தயட்ட கிருள (தேசத்திற்கு மகுடம்) என்ற பெயரில் அப்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மற்றொரு நகர்சேர் கடுகதி ரயில் பகல் மணி 11.50க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு மாலை மணி 6.15க்கு யாழ்ப்பாணம் வந்தமடையும். அதே வேளையில் பகல் 11.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் இந்த நகர்சேர் கடுகதி மாலை மணி 5.40க்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
தினமும் இரவு மணி 7.45க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் தபால் ரயில் மறுநாள் அதிகாலை மணி 5.07க்கு யாழ்ப்பாணம் வந்தடையும் இதே வேளையில் இரவு மணி 7.05க்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் தபால் ரயில் மறுநாள் அதிகாலை மணி 4.23க்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
இதுதவிர, வார இறுதி விசேட ரயில் சேவையொன்று ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 7.00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டைக்கு வந்து அங்கிருந்து மீண்டும் காலை மணி 9.40க்கு புறப்பட்டு மால மணி 5.07க்கு யாழ்ப்பாணம் வந்தடையும்.
இதே ரயில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு மால மணி 6.11க்கு கொழும்பு கோட்டையையும், இரவு மணி 8.50க்கு மாத்தறையையும் சென்றடையும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *