Breaking
Fri. May 3rd, 2024

போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் 2011ம் ஆண்டில் இலங்கைக்கு போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , கொழும்பு உயர்நீதிமன்றத்தால், அக்டோபர் 30ந்தேதியன்று மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் மேல்முறையீட்டுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது. இந்த ஐந்து பேரையும் சிறையிலிருந்து விடுவித்துவிட்டதாகவும், அவர்களை இலங்கை குடிவரவு அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் இலங்கை சிறைத்துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில், இந்த மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அவர்களை இந்தியா அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் கூறியிருக்கிறது. இலங்கைக்கான இந்தியத் தூதர் வொய்.கே.சின்ஹா இந்த மீனவர்கள் விடுதலையான பிறகு தூதரகத்தில் அவர்களை சந்தித்தார். இலங்கை ஜனாதிபதி “மனிதநேய சமிக்ஞையாக” இவர்களை விடுதலை செய்திருப்பது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஏற்கனவே நிலவும் உறுதியான மற்றும் பன்முகத்தன்மையுடைய இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று தூதரக செய்திக்குறிப்பு கூறியது. ‘ பொதுமன்னிப்பின் பேரிலேயே விடுதலை’ இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்களின் வழக்கறிஞர் அனில் சில்வா, இலங்கை அரசியல் அரசியல் சட்டத்துக்கு அமைய, ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் பேரிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு கோரி இந்த ஐந்து மீனவர்கள் தாக்கல் செய்த மேன் முறையீடு செவ்வாய்க்கிழமை வாபஸ் பெறப்பட்டது. இதன் பின்னரே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் அனில் சில்வா தெரிவித்தார். இதன்படி இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனை முற்றாக நீக்கப்பட்டுள்ளதா இல்லாவிட்டால் அந்த தண்டனை குறைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது இது சம்பந்தமான விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை என்றார் அனில் சில்வா.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *