Breaking
Tue. Dec 16th, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பா சென்றதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர், அவர் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்து இரண்டு வாரத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கனவான தனித் தமிழ் ஈழத்தை அமைக்கும் நோக்கில் தற்போதும் புலம்பெயர் நாடுகளில் நிதி சேகரிப்பு நடைபெறுகின்றது. எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் நான் இருக்கும் வரை ஈழம் என்பது கனவாகவே இருக்கும்.

அதன் காரணமாகத் தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ரத்துச்செய்ய முயற்சிக்கின்றார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ரத்துச் செய்யப்பட வேண்டியதுதான், ஆனால் அதற்காக புலம் பெயர் தமிழர்களினதும், விடுதலைப் புலிகளினதும் தேவைக்காக அதனைச் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாது, மக்கள் மத்தியில் செல்வாக்கைக் கட்டியெழுப்பி, அதன் மூலமாகவே அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

ஆனால் இன்று நாட்டைக் காட்டிக் கொடுத்து அதிகாரத்துக்கு வரும் நோக்கில் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. அவற்றுக்கு இடமளிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனாவிற்கு ஆதரவான பௌத்த பிக்குகளுக்கு அறநெறிப் பாடசாலை (தஹம்பாசல்) ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Post