Breaking
Wed. Dec 4th, 2024

“சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை 2017ஆம் ஆண்டிலிருந்து கணக்காளர் இல்லாமல் இயங்கி வருகிறது. உடனடியாக அந்த வெற்றிடத்தை நிரப்ப சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று வியாழக்கிழமை (30) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“எனது ஊரான மன்னார், தராபுரம் கிராமத்திலிருக்கும் வைத்தியசாலைக்கே கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அந்த வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் அண்மையில் இராஜினாமா செய்துவிட்டு அவுஸ்திரேலியா சென்றுவிட்டார். அவருக்கு பதிலாக இன்னுமொரு வைத்தியரை அவ்விடத்துக்கு நியமிக்க வேண்டும். ஆனாலும், அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் இன்னும் வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. எனவே, வைத்தியர் ஒருவரை நியமிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். .

அதேபோன்று, சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பிரதேசமான சம்மாந்துறையில் உள்ள ஆதார வைத்தியசாலையில், 2017ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கணக்காளர் பதவி வெற்றிடமாகவே காணப்படுகின்றது. எனவே, அவ்வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்கு தயவு செய்து உதவுமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அத்துடன், இரண்டு இலட்சம் மக்கள் வசிக்கும் மன்னார் மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையில் CT ஸ்கேனர் ஒன்று இல்லாத காரணத்தினால், அங்குள்ள நோயாளிகளை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புகின்றனர். இதனால், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் ஒன்றை உடனடியாக பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

Related Post