Breaking
Fri. Apr 26th, 2024

ரஸீன் ரஸ்மின்

சொந்த மண்ணில் வாழும் உரிமைக்காக எல்லோரிடத்திலும் போராட்டங்களை நடத்தும் மன்னார் மரிச்சுக்கட்டி முஸ்லிம்களின் காணி விவகாரம் இன்று எல்லோரினதும் கவனத்தை பெற்றிருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் விடயத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது இன்று நேற்றிருந்து அல்ல. ஆனால் இந்த நல்லாட்சியில் கூட முஸ்லிம்கள் நிம்மதியிழந்து வாழ்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இன்று முஸ்லிம்களின் இருப்பை அடியோடு அறுத்து வீசுகின்ற வரைக்கும் ஓயப்போவதில்லை என்ற ரீதியில் ஒருசில தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் வாயிலாக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் அடக்கி ஒடுக்கி விடலாம் என்று இனவாதிகள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதன்படியே தமது செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறார்கள்.

இலங்கை முஸ்லிம்களைப் பற்றி நல்லாட்சியில் பேசுவதற்கு என்ன இருக்கிறது. அதனால்தான் வில்பத்து விவகாரத்தை தூக்கியிருக்கிறார்கள். மஹிந்த ஆட்சியாக இந்த ஆட்சி இருந்திருந்தால் மன்னார் மரிச்சுக்கட்டி மக்கள் நிம்மதியாக தமது சொந்த மண்ணில் மீள்குடியேறியிருப்பார்கள்.
எனென்றால் இந்த இனவாதிகள் முஸ்லிம்களின் உரிமைகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தமது கவனத்தை செலுத்தியிருப்பார்கள். வில்பத்து காடழிப்பு பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

வில்பத்து காணி விவகாரம் ஒன்றும் புதிதாக உருவாகிய விடயமல்ல. கடந்த மஹிந்த அரசில் இருந்தே ஆரம்பித்துவிட்டது. எனினும் கொஞ்ச காலத்துடன் இனவாதிகளின் ஆட்டங்கள் அடங்கிப் போயிருந்தன.

ஆனால், இப்போது அந்த இனவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. வில்பத்து காணி விவகாரப்பிரச்சினை தனிப்பட்ட ஒருவருக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. இது சமூகம் சார்ந்த பிரச்சினையாகும். எனவே, இதுபற்றி எல்லோரும் இணைந்து செயற்படவேண்டும்.
இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக வடகிழக்கு முஸ்லிம்கள் காணி, வீடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுடன் வாழ்ந்துவருகிறார்கள். தேர்தல் காலங்களில் வந்து அது தருவோம், இது செய்து கொடுப்போம் கடலுக்குள் பாலம் கட்டுவோம் என்று வீரவசனங்களைப் பேசும் அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு தவிக்கின்ற மக்களின் நலன்சார் விடயங்களில் எப்படிச் செயற்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியே.

மஹிந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்து சாதித்தது என்ன?, நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து சாதித்தது என்ன? என்று ஒரு பதிலை கேட்டால் சண்டை பிடித்தது மட்டும்தான் தாம் தவறாது செய்த பணியே தவிர, உருப்படியாக தமது முஸ்லிம் சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்பதுதான் மிச்சம்.

இதற்கு காரணம் ஒற்றுமையில்லாமையே ஆகும். முறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மு.கா. கட்சியை என்ன நோக்கத்திற்காக உருவாக்கினாரோ அந்த நோக்கங்களை எல்லாம் மறந்தவர்களாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பில்லாத காரணங்களினால் மு.கா கட்சியை விட்டு பிரிந்து சென்று ஆளுக்கொரு பெயரில் கட்சியை உருவாக்கி அரசியல் செய்ய ஆரம்பித்தார்கள்.
எனவே, ஒற்றுமையின்மையே இதற்கு காரணமாகும். இன்று தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒற்றுமையக இருந்து கொண்டு காய்நகர்த்தல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் இருந்து எதனையும் கேட்டால் அவர்கள் கேட்கின்றதை கொடுப்பதற்கு அரசு தயாராகவே இருக்கிறது. காரணம் ஒற்றுமையாக இருப்பதுதான்.
ஓற்றுமையை வலியுறுத்தும் புனித இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்து வளர்ந்துள்ள நம்மிடையே ஒற்றுமை இல்லையென்பதுதான் மிகவும் வேதனையைக் கொடுக்கிறது.
இன்று முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் இனவாத அமைப்புக்கள் வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளது. இதன் எல்லை மீறும் செயற்பாடுகளை நல்லாட்சியை நோக்கிப் பயணக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசு கூட கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை.

முஸ்லிம்கள் மீதான கழுகுப்பார்வை மற்றும் இனவாத அடக்குமுறை, பழிவாங்குதல், மனதை புண்படுத்தல், அடக்கி வைத்தல் என இனவாதிகளின் செயற்பாடுகள் பொறுத்துக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்த வண்ணமே உள்ளன.
நல்லாட்சி உருவாகுவதன் மூலம் தமது சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ முயும் என்ற நம்பிக்கை, ஆசையில் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஏன் வாக்களித்தோம் என்று எண்ணுகின்ற அளவுக்கு அரசின் செயற்பாடுகள் இருக்கிறது.

மன்னார் முஸ்லிம்கள் தமது மரிச்சுக்கட்டி பிரதேசத்தில் வாழ்ந்தமைக்கான சகல ஆதராங்களும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் காட்டுப்பகுதியில் பலவந்தமாக குடியேற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்கள் திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதுவிடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு கேள்விக்குறியாகியுள்ள மன்னார் வில்பத்து விடயத்தில் நல்ல பதிலை சொல்ல வேண்டும்.

அமைச்சர் ரிசாத் பதியுதின் வில்பத்து காட்டுப்பகுதியை அழித்துவிட்டு அங்கு முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்றியுள்ளதாக இனவாதிகளினால் முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுக்களை மன்னார் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர், வனபாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துள்ள போது அங்கு எதுவிதமான சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் கருத்துக்களையும் மத்pக்காது அதனை திரிபுபடுத்தி மாற்று வடிவம் கொடுத்து செய்யப்பட்ட மீள்குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கான வழிகள் திறைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், முஸ்லிம்களுக்கு மாடி வீடுகளைக் கட்டிக்கொடுக்குமாறும், பிள்ளைகளைப் பெறுவது இரண்டுடன் நிறுத்திக்கொள்ளும் வகையில் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் பொதுபலசேன அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இது மன்னார் முஸ்லிம்களை மாத்திரம் குறிவைத்து சொல்லப்பட்ட கருத்துக்கள் அல்ல. முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை தடை செய்யுங்கள் என்று பொதுபலசேனா அமைப்பு மறைமுகைமாக அரசுக்கு செய்தியை சொல்லியிருக்கிறது.

இந்த செய்தியானது முஸ்லிம்களை அவமானப்படுத்தும் நடவடிக்கையாகும். அதுமாத்திரமின்றி, இலங்கை அரசியலில் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கின்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதராகவும் பொதுபலசேனா கருத்துக்களை முன்வைத்துள்ளன. ஆமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் உதவி செய்வதாகவும் இதனால் முஸ்லிம்களின் வர்த்தகளுக்கு தனது அமைச்சு மூலம் உதவி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஆங்கிலப்பத்திரிகையொன்று வில்பத்து விவகாரத்தை முன்னிருத்தி முஸ்லிம்கள் மது அருந்தும் காண்டூன் ஒன்றை பிரசுரித்துள்ளது. இதுவும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை காட்டுகின்றது.

இவ்வாறு முஸ்லிம்கள் மீது வட்டம் போட்டு அடக்கி ஒடுக்க முயற்சிக்கும் இனவாதிகள், இதவாத செயற்பாட்டாளர்களின் கழுகுப்பார்வையில் இருந்து தப்பித்து பிழைத்துக்கொள்வதற்கு ஒரே வழி ஆயுதம் ஏந்ததேவையில்லை, போராட்டங்களை நடத்த தேவையில்லை. மாற்றமாக சமூக சிந்தனையை முன்னிருத்தி இனத்தை பாதுகாப்பதற்காக வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே எமது சமூகம் வெற்றிபெறும் என்பது உண்மை.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *