Breaking
Mon. Apr 29th, 2024

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

18 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியமை தொடர்பில் பல தரப்பிலுமிருந்தும் தொடர்ந்தும் அதிருப்தியே தெரிவிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் ஹக்கீம் கூட இந்த விடயத்தில் இப்போது கவலைப்படுகிறார்.

உண்மையில் இந்தச் சட்டமூலத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஆதரவு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டமைக்கான காணம் பலருக்கும் தெரியாது. அதேவேளை, அமைச்சர் ஹக்கீமும் அந்தக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலரும் இந்த நிலைமை ஏற்பட்டதற்கான காரணத்தை வெளியில் சொல்ல முடியாதவர்களாக உள்ளனர்.

அவ்வாறு கூறும்போது 18 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் கட்சிக்குள் இடம்பெற்ற சதி முயற்சிகளையே அவர்கள் அம்பலப்படுத்த வேண்டி வரும். அதனால் அவர்கள் இந்த விவகாரத்தை தங்கமலை இரகசியம் போல் பேணி வருகின்றனர்.

இதுதான் நடந்தது….

18 ஆவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு 146 உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்கு இருந்த நிலையில் இன்னும் நான்கு அல்லது ஐந்து பேரின் ஆதரவே தேவையென்ற நிலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர், தானும் மேலும் மூவரும் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவதாக முன் வந்ததனையடுத்தே அரசுடனான அவர்களின் பேரம் பேசலும் அதேவேளை, கட்சியின் தலைமைக்கு தலையிடியும் ஆரம்பமாகின.

அரசுக்கு ஆதரவளிப்பதற்காக ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பொறுப்பும் இரண்டு அல்லது மூன்று பிரதிமையச்சர் பதவிகளும் வழங்கப்பட வேண்டுமென்ற பேரம் பேசல் அரசுடன் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமான சிரேஷ்ட சிங்கள அமைச்சர் ஒருவரும் அதே போன்று ஆளுந்தரப்பைச் சேர்ந்த இன்னொரு சக்திமிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தப் பேரம் பேசல் விவகாரத்தில் தங்களது அதிருப்தியையும் எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரையும் கொண்டு 18 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினாலும் பின்னர் அவர்களால் எந்தப் பயனும் இல்லை. இவர்கள் நால்வரும் ஒன்றிணைந்தாலும் பத்து சத வீத முஸ்லிம் வாக்குகளைக் கூட எதிர்காலத்தில் கட்சிக்குப் பெற்றுத் தரமாட்டார்கள் என அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

18 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சியின் தலைவர் ஹக்கீமுடன் முதலில் பேசுவோம். அவர் இந்த விடயத்துக்கு ஆதரவு வழங்க மறுத்தார் என்றால் இவர்கள் விடயத்தில் கவனம் செலுத்தலாமென்றும் குறித்த அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் அரச உயர்மட்டத்துக்குத் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்ட ஆளுந்தரப்பு தலைமையானது ஹக்கீமுடன் பேசுமாறு கேட்டுள்ளது. இதனையடுத்து குறித்த ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மகனும் அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

விடயங்களைப் புரிந்த கொண்ட அமைச்சர் ஹக்கீம் தான் இந்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் தங்களது கட்சியைச் சேர்ந்த நால்வரின் உதவியுடனேயே அரசாங்கம் இதனை நிறைவேற்றிக் கொள்ளும் என்பதில் தெளிவு கொண்டுள்ளார்.

அதேவேளை, தான் ஆதரவு வழங்காவிட்டால் கட்சி இரண்டாகப் பிரிவதுடன் அரசிலிருந்து தமது தரப்பு வெளியேற்றப்படலாமென்றும அவர் கருதியதன் காரணமாகவே இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவதாக இறுதிக் கட்டத்தில் தெரிவித்து அதன்படி செயற்பட்டுள்ளார். ஆகவே, கட்சிக்குள் ஏற்பட்ட நிலைமைகளாலேயே அமைச்சர் ஹக்கீம் இந்தச் சட்டமூலத்தை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானாரே தவிர அவரால் மனம் விரும்பி எடுக்கப்பட்ட முடிவல்ல இது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *