Breaking
Thu. May 2nd, 2024

அனைத்து பலஸ்தீன நிலங்களில் இருந்தும் இஸ்ரேல் வெளியேறுவதற்கு 2016 ஒக்டோபர் மாதத்தை இறுதி கெடுவாக விதிக்கும் தீர்மானத்தின் மீது இந்த ஆண்டு இறுதிக்குள் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் அறிவித்துள்ளார்.

எனினும் பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா இந்த தீர்மானத்தை எதிர்க்கும் நிலையில் அது தோல்வி அடைந்தால் மாற்று தீர்வு எடுக்கப்படும் என்று மன்சூர் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஒரு வெளிப்படையான முயற்சியாகவே அமையும். பிரதான முயற்சி வாக்கெடுப்புடன் முன்னெடுக்கப்படும்” என்று அவர் விபரித்தார்.

இந்த தீர்மானத்திற்கு 15 அங்கத்துவ நாடு களைக் கொண்ட பாதுகாப்பு சபையில் 7 ஆதரவு வாக்குகள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கும்பலஸ் தீன நிர்வாகம், ஆதரவை அதிகரிக்க முயற்சிப்ப தாக தெரிவித்தது. தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட குறைந்தபட்சம் 9 வாக்குகள் தேவைப்படுகின்றன. எனினும் இந்த தீர்மானம் அமெரிக்கா உட்பட ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒன்றால் வீட்டோ அதிகாரத்தை கொண்டு நிராகரிக்க முடியும்.

அமெரிக்காவின் முயற்சியால் முன்னெடுக்கப்படும் அமைதி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியடையும் நிலையிலேயே பாலஸ்தீன நிர் வாகம் இந்த தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கடைசியாக இவ்வாறான அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்று கடந்த ஏப்ரலில் முறிவடைந்தது.

“கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கப்படும் ஒரே மாதிரியான சமரச முயற்சிக்கு பலஸ்தீனம் மீண்டும் திரும்பாது” என்று மன்சூர் குறிப்பிட்டார். பலஸ்தீனத்தின் இந்த தீர்மானம் குறித்து அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதுவர் சமன்தா பொவர் குறிப்பிடும்போது, இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு எட்டப்பட வேண்டும் என்றார்.

பாதுகாப்பு சபையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் பட்சத்தில் ஆண்டுதோறும் பலஸ்தீனத்திற்கு கிடைக்கும் அமெரிக்காவின் 700 மில்லியன் டொலர் உதவி நிறுத்தப்படும் அபாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டால் மாற்று தீர்வாக பலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையும் என்று மன்சூர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நாவில் அங்கத்துவமற்ற பார்வையாளர் அந்தஸ்த்தை பெற்றிருக்கும் பலஸ்தீனத்திற்கு ஐ.நா. கிளை அமைப்புகள் மற்றும் ஒப்பந்தங்களில் இணையும் உரிமை இருப்பதோடு இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றங்கள் குறித்து முறையிடவும் அதற்கு வாய்ப்பு உள்ளது.

1967 மத்திய கிழக்கு யுத்தத்தின் மூலம் இஸ்ரேல் மேற்குக்கரை, காசா, கிழக்கு ஜெரூசலம் மற்றும் சிரியாவின் கோலன் குன்று பகுதிகளை ஆக்கிரமித்தது. இந்த இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பின்னர் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேல் 100க்கும் அதிகமான குடியேற்றங்களை நிறுவியுள்ளது. இங்கு சட்டவிரோத யூத குடியேறிகளின் எண்ணிக்கை 500,000ஐ தாண்டியுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *