Breaking
Mon. Apr 29th, 2024
ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் எதிரணி வேட்பாளராக பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதில் ஐக்கிய தேசியக்கட்சி தயாராகி வருகின்றது. பொது எதிரணியில் களமிறங்குவது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு சவாலானதும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொது வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் எதிரணி வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சி தெரிவு செய்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க தெரிவிக்கையில்;
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. கட்சியின் சார்பில் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் கடந்த சில காலங்களில் இருந்து பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கட்சிக்குள் ஏகோபித்த தீர்மானமொன்று எட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கட்சியின் பிரதான உறுப்பினர்கள் அனைவரினதும் விருப்பத்திற்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிரணி வேட்பாளராக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்க முடியும்.
எதிர்க்கட்சிகளுடன் பேச்சு
அதேபோல் பொது எதிரணியொன்றினை களமிறக்குவது தொடர்பில் கருத்துக்கள் எழுந்துள்ளது. அரசாங்கத்தை வீழ்த்தும் பலமான எதிரணியினை உருவாக்கி போட்டியிடுவதில் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. எனினும் நாம் தற்போது வரையிலும் பிரதான எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றோம். சில கட்சிகள் எமக்கு ஆதரவு வழங்கத்தயார் என தெரிவித்துள்ளனர். மற்றைய சில கட்சிகள் ஒரு சில முரண்பாடான தன்மைகளில் இருப்பதனால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாதுள்ளது. எனினும் சகல கட்சிகளுடனும் உறுதியான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பொது எதிரணி தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுப்போம்.
தமிழ் முஸ்லிம் கட்சிகளையும் ஆதரிக்கின்றோம்
மேலும், பொது எதிரணியில் களமிறங்குவதாயின் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் உதவிகள் அவசியமானது. ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவினை பெறும் வகையில் ஒருசில தமிழ்க்கட்சிகளுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடொன்றினை எட்டியுள்ளோம். ஏனைய பிரதான தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.
அரச – கூட்டு கட்சிகளுடனும் பேச்சு
அத்தோடு அரசாங்கத்தில் உள்ள கூட்டுக்கட்சிகள் இன்று அரசை எதிர்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள இடதுசாரிக் கட்சிகளும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளும் தமது அதிருப்தியினை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆகவே, அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இணங்கக்கூடிய வழிமுறைகளில் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் நாம் தயாராக இருக்கின்றோம்.
அனைவரும் ஒன்றிணைவார்களாயின் பொதுச்சின்னத்தில் களமிறங்க முடியும். அதேபோல் மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கத்தை வீழ்த்த முயசிக்கின்றோம். எனவே, அதேகொள்கையில் ஏனைய எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *