Breaking
Sun. May 19th, 2024
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரான அசாத் சாலி, மத்திய மாகாண சபை உறுப்பினராக உள்ளார். முஸ்லிம் தரப்பில் இருந்து அரசாங்கத்தை விமர்சிப்பதில் முதலாமவராகவும் உள்ளார்.
இதன் காரணமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் அவரது கைத்துப்பாக்கிக்கான லைசென்ஸை புதுப்பிக்க பொலிசார் மறுப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் மாகாண சபை உறுப்பினருக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அவருக்கு வழங்கப்படவில்லை.
அண்மையில் அவர் கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் வைத்து அமெரிக்கத் தூதுவரை சந்தித்தபோது புலனாய்வுத் தரப்பினர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
மேலும் சமரசிங்க என்றொரு பொலிஸ் அதிகாரி தொலைபேசி மூலம் ஹோட்டலைத் தொடர்பு கொண்டு சந்திப்பு தொடர்பான விபரங்களைக் கேட்டிருந்தார்.
மேலும் அளுத்கம கலவரத்தின் பின்னர் அங்கு விஜயம் மேற்கொண்டபோதும் புலனாய்வுத்தரப்பினர் அவரைப் பின்தொடர்ந்திருந்தனர்.
தற்போது புலனாய்வுத் தரப்பினர் மூலம் தனக்கு மீண்டும் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கடிதம் மூலம் அவர் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பட்டுள்ளார்.
குறைந்த பட்சம் தனக்கு பள்ளிவாசலுக்குச் செல்லக்கூட முடியாத நிலை இருப்பதாக அவர் தனது கடிதம் மூலம் சுட்டிக்காட்டுகின்றார்.
புலனாய்வுத்தரப்பினர் மாத்திரமன்றி மர்ம நபர்களும் தன்னைப் பின்தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல மற்றும் அரசாங்கம் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *