Breaking
Sun. May 19th, 2024

“ஒலுவில் துறைமுக பாதிப்பு, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். எதிர்வரும் மே மாதம் அளவில் இந்தப் பிரேரணை விவாதத்திற்கு வரும்போது, இங்கு வாழ்மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை நீக்க முடியும் என்று, நான் பெரிதும் நம்புகின்றேன்” இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒலுவில் மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல், அன்சாரி ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அமைச்சர் குறைகளைக் கேட்டறிந்த பின்னர், இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது,

அம்பாறை மாவட்டத்துக்கு வந்த பின்னர் இங்குள்ள மக்கள் படுகின்ற வேதனைகளைக் கண்டு வெதும்புகின்றேன். ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் மூலம் ஒலுவில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களையும், அசௌகரியங்களையும் நீங்கள் எடுத்துரைத்தீர்கள். துறைமுகம் அமைக்கப்பட்டதனாலும், பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதனாலும், உங்கள் காணிகள் சுவீகரிக்கப்பட்டபோதும், இன்னும் ஒரு குறிப்பிட்ட சிலரைத் தவிர ஏனையோருக்கு நஷ்டஈடு கிடைக்கவில்லை என்றீர்கள்.

இது ஒரு கவலையான விடயம். இந்தக் கிராமம் மிகவும் அழகானது. வளமானது. எனினும் கடலரிப்பு இந்தக் கிராமத்தை தொடர்ந்தும் விழுங்கி வருகின்றது. உங்கள் பிரதேசத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ள போதும், இங்குள்ளோருக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்தப் பிரச்சினையை படிப்படியாகவே தீர்க்க முடியும்.

அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சிக்கென்று எம்.பியோ மாகாண சபை உறுப்பினரோ இல்லாத போதும், கடந்த பொதுத்தேர்தலில் எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு, நாம் ஒருபோதும் துரோகம் செய்யப்போவதில்லை. தந்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும். இவ்வாறு அமைச்சர் உறுதியளித்தார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஊர்ப் பிரமுகர்கள், தாங்கள் படுகின்ற கஷ்டங்களை விவரித்ததுடன், அமைச்சர் எங்களுக்கு உதவினால், என்றென்றும் விசுவாசமாக இருப்போம் என உறுதிமொழி வழங்கினர்.

ad

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *