Breaking
Mon. Apr 29th, 2024

கூனிக்குருகி வீடுகளுக்குள் முடங்குகின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவமாக இல்லாமல் எமது கட்சி மூலம் கிடைக்கின்ற தேசியப்பட்டியல் கிடைக்கின்ற இந்த கல்முனை பிரதிநிதித்துவம் இன்ஷா அல்லாஹ் மறைந்த தலைவரின் பிறகு மீண்டும் முஸ்லிம்கள் சார்பில் பாராளுமன்றில் முழங்க இருக்கின்ற ஒரு பிரதிநிதித்துவமாக இருக்கும் என்ற வாக்குறுதியை வழங்குகின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

கல்முனைக்குடி பிரதான வீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 7 ஆம் இலக்க வேட்பாளர் கலீலுர் ரஹ்மானை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடும்போது,

இன்று தேர்தல் பிரச்சார மேடைகளில் என்ன பேசப்படுகின்றது. எங்களது பிரச்சாரத்தில் நாங்கள் என்ன பேசுகின்றோம். அவர்களுடைய பிரச்சாரத்தில் அவர்கள் என்ன பேசுகின்றார்கள். என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஸ்ரீ லங்கா மு.கா. கட்சி, அ.இ.ம.கா. கட்சி என்ற இரண்டு பிரதான கட்சிகள் இங்கு போட்டியிடுகின்றன. கடந்த 15 ஆண்டுகள் மு.கா. விற்கு றவூப் ஹக்கீம் தலைமை தாங்கியிருக்கின்றார்.

அக்காலத்தில் பல தேர்தல்களை சந்தித்து எல்லா தேர்தல்களிலும் அம்பாரை மாவட்ட மக்கள் மு.கா. விற்கே வாக்களித்திருக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலிலும் அவ்வாறே நடந்தது. இப்போது இந்த மு.கா வினர் சொல்லட்டும் கடந்த 15 ஆண்டுகாலமாக அவர்களது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்காக எவ்வளவு சேவை செய்திருக்கின்றோம் என்று ஒரு சாதனைப்பட்டியலை சொல்லட்டும்.

இந்த கல்முனையில் இத்தனை வீதிகள் அமைத்திருக்கின்றோம். பாலங்கள் அமைத்திருக்கின்றோம். இத்தனை பொது வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம். இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம் என்று கூறட்டும். நிச்சயமாக அவர்களால் பேசுவதற்கு எதுவுமில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இப்பொழுதுதான் இம்மாவட்டத்திலே ஒரு பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது. இங்கு எமது கட்சி ஏசுவதுதான் மு.கா வினரின் 15 வருடகால சேவைகளாகும். அது மடடுமல்லாமல் பொய்யும் புறட்டும் மாத்திரம்தான் இங்கு இவர்களுக்குள்ள மூலதனமாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர், இரண்டு முறை மக்களால் பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர், ஒரு தடவை மேயராக தெரிவு செய்யப்பட்டவர். இவர் கேள்வி எழுப்புகின்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இந்த பிரதேசத்திற்கு என்ன செய்திருக்கின்றார்.

இந்த கேள்வி கேட்பதற்க ஒரு எம்.பி. தேவை நமக்கு, நான் என்ன செய்தேன் இந்த மக்களுக்கு என்றுதான் இவர் கூற வேண்டும். அதிகாரம் இல்லாத, பாராளுமன்ற உறுப்பினரல்லாத ஒருவரை பார்த்து இவர் என்ன செய்திருக்கின்றார் என்று கூறுவது எந்த வகையில் நியாயம். ஒரு கட்சியின் செயலாளரால் இந்த பிரதேச மக்களுக்கு என்ன செய்யப்பட்டிருக்கின்றது என்று கேட்பது இலங்கை திருநாட்டில் இவரால் மட்டுமே முடிந்த விடயமாகும்.

இருந்தாலும் இந்த வை.எல்.எஸ். ஹமீட் இந்த பாலிகா வித்தியாலயத்தில் இந்த கிழக்கிலங்கையிலேயே இல்லாத அழகான நிர்வாக கட்டிடத்தை கட்டியிருக்கின்றார். அதற்குப் பக்கத்தில் 3 மாடி வகுப்பறைக் கட்டிடத்தை கட்டியிருக்கின்றார். பின்னர் பாலிகா விடுதி கட்டப்பட்டதும் இந்த வை.எல்.எஸ். ஹமீடின் முயற்சியினாலாகும். இவ்வாறு நாங்கள் அதிகாரமில்லாமலேயே செய்த சேவைகளின் பட்டியல் இருக்கின்றது. இதுபோல் நீங்கள் இந்த 15 வருடகாலம் நீங்கள் செய்த மக்கள சேவை என்ன? நான் செய்தது போன்று இவ்வாறான ஒரு கட்டிடத்தை கட்டியிருக்கின்றேன் என்று உங்களால் கூற மடியுமா ? ஏற்பட்ட சுனாமியினால் இந்த கல்முனை பிரதேச மக்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள். தமிழ், சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டார்கள் எல்லோருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வீடகளைக் கட்டிக் கொடுத்தது.

இந்த கல்முனைக் குடி சாய்ந்தமருது மருதமுனை மக்கள் வீதிக்கு இறங்கி உண்ணாவிரதம் இருக்கவில்லையா ? ஆர்ப்பாட்டம் செய்யவில்லையா ? இவர்களுக்கு மட்டும் ஏன் பல வருடங்கள் வீடுகள் வழங்கப்படவில்லை. ஏன் இந்த மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா ? ஏன் இந்த 3 ஊர் மக்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால் மு.காங்கிரஸிற்குத்தான் இங்குள்ள மக்கள் வாக்களித்தார்கள். அதன் பின்னர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கல்முனையில் உள்ள வீட்டுத்திட்ட விவகாரத்திற்கு அப்போதைய அமைச்சராக இருந்த பஷிலிடம் கோரிக்கை விடுத்து கட்டி முடிப்பதற்கும் மக்களிடம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்தார்கள்.

இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளில் அரசாங்க நிதியினால் கட்டப்பட்ட வீடுகள் இருக்குமென்றால் அது கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது வீடுகள் மாத்திரமே மற்ற அனைத்தும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் கட்டி முடிக்கப்பட்டவைகள் என்ற உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வை.எல்.எஸ். ஹமீட் என்ன செய்திருக்கின்றார் என்பதை கேட்பதற்காக மக்கள் வாக்களிக்க வில்லை. ஆனாலும் இந்த வை.எல்.எஸ். ஹமீட் நிறைய சேவைகள் செய்திருக்கின்றார்.

இப்பிரதேச மக்களுக்கு இக்கட்டான நிலை வந்தால் வை.எல்.எஸ். ஹமீடும், எமது கட்சியும், கட்சியின் தலைமை றிசாட்டும் தேவைப்படும். அப்போது எனது போன் நம்பர் எல்லோருக்கும் பரீட்சயம் எமக்கு அழைப்பு வரும் அதனை தட்டிக்களிக்காது நாம் நிறைய விடயங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.

வாக்களிக்க ஒரு கட்சி சேவை தேவைப்படும்போது பிரிதொரு கட்சியும் செயலாளர் நாயகமும் தேவை. இது என்ன நியாயம் மக்களே ! ஆனாலும் எமது மக்களின் பரிதாப நிலைகண்டு அப்போது நாம் நிறைய தேவைகளை இங்கு நிறைவு செய்து கொடுத்திருக்கின்றோம். மீனவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், என்ற பல்வேறு துறையினருக்கும் நாம் ஒருவராலும் செய்ய முடியாத சேவை செய்திருக்கின்றோம். இதனை செய்தது கல்முனை பாராளுமன்ற உறுப்பினரல்ல. மு.கா. தலைவரல்ல. என்ன செய்தார் என்று கேள்விக்குட்படுத்தப்படும் இந்த வை.எல்.எஸ். ஹமீட்தான் அதனை செய்து கொடுத்திருக்கின்றேன். இது கடந்த கால வரலாறாகும்.

இவ்வாறான நிலையில் கல்முனை மக்களையும் கல்முனையையும் காப்பாற்றியாக வேண்டும். என்ற நிலையில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி அம்பாரை மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு நடாத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. தயட்ட கிருளயின் கீழ் அம்பாரை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக 6 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் அன்னளவாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அந்த 6 மில்லியன் ரூபாவில் அம்பாரை மாவட்ட 4 தொகுதிகள் மாத்திரம்தான் இருக்கின்றன.

அவ்வாறாக இருந்தால் ஆகக் குறைந்தது தொகுதிக்கான நிதியையாவது அவர்கள் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் அம்பாரை வைத்தியசாலைக்கு மாத்திரம் 600 மில்லியனை ஒதுக்கியிருந்தார்கள், ஹிஸ்புல்லாஹ்வுக்கு 750 மில்லியன், பஷீர் சேகுதாவூதிற்கு 600 மில்லியன், இந்தக் கல்முனைக்கு 332 மில்லியன்கள் மாத்திரமே. இதில் 32 மில்லியன்கள் மாத்திரம்தான் இங்கு கொண்டுவரப்பட்டது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா ? 6 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் அம்பாரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்முனைக்கு வந்த பணத்தின் தொகை என்ன ? வெறும் 32 மில்லியன்கள் மாத்திரமே.

இந்நிலையில்தான் எதிர்காலத்தில் இந்த கல்முனை நகர அபிவிருத்தி அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ரணில் விக்ரமசிங்ஹ அமுல்படுத்துவதாக கூறியிருக்கின்றார். இந்நிலையில் நீங்கள் விரும்புகின்ற கல்முனையின் தலைவர் உங்களுடைய விருப்பங்களை செயற்படுத்துகின்ற ஒருவராக வரவேண்டுமா ? நீங்கள் விரும்புகின்ற அபிவிருத்தி புதிய நகரம் அமைய வேண்டுமா ? என்பதை தெளிவாக சிந்தித்து நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ யார் பாராளுமன்ற உறுப்பினராக வந்தாலும் எமது கல்முனை புதிய நகர அபிவிருத்தி நடைமுறைப்படுத்தப்படும்போது அ.இ.ம.கா. கட்சி கல்முனைக்கு இன்ஷா அல்லாஹ் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்க உள்ளது. அத்துடன் இன்ஷா அல்லாஹ் அம்பாரையில் நாம் ஒரு ஆசனத்தையும் பெறுவோம். ஆனால் இந்தக் கட்சிக்கு கல்முனை பிரதேச மக்கள் வாக்குகளை வழங்காமல் றணில் விக்ரம சிங்ஹவிடம் கல்முனை அபிவிருத்தி தேவைகளை பெற முடியாது. என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதனால் மிகக் கூடுதலான வாக்குகளை மக்கள் வழங்க முன்வரும்போது நாமும் மிக தைரியமாக எமது பிரதேசத்திற்காக குரல்கொடுப்போம்.

இந்தத் தேர்தலில் அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டிருக்கின்றார்கள். கல்முனை மக்களிடமும பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தக் கட்சி மூலம் கல்முனைக்கு கிடைக்கின்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கௌரவப்படுத்துகின்ற, அதன் மூலம் இந்த மண்னை அபிவிரத்தி செய்கின்ற சந்தர்ப்பத்தை நீங்கள் இணைந்து கௌரவப்படுத்த முன்வாருங்கள். இந்த சந்தர்ப்பத்தை கல்முகை்குடி மக்கள் தவறவிடாதீர்கள்.

எனவே கல்முனையில் போட்டியிடும் வேட்பாளர் கலீலுர் ரஹ்மான் மற்றும் இதர வேட்பாளர்களுக்கும் உங்கள் வாக்குகளை அதிகப்படியாக வழங்கிவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *