Breaking
Wed. May 8th, 2024

பழுலுல்லாஹ் பர்ஹான

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பெரும் முயற்சியின் பயனாக காத்தான்குடியில் அமைக்கப்பட்டுவரும் இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலையின் இறுதிக் கட்டப் பணிகளை பூரத்தி செய்வதற்கான மேலதிக அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பெறுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய, தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய தலைமையிலான விஷேட குழுவொன்று நாளை (14) செய்வாய்க்கிழமை மாலை துபாய் நாட்டுக்கு பயணமாகவுள்ளது.

இவ் விஷேட குழுவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக், நூதனசாலைகள் திணைக்களத்தின் பிரதிப்பணிபாளர் விக்ரமசிங்க, தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட பொறியியலாளர் ஜகத், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், பிரத்தியேக உத்தியோகத்தர் றவூப், இத்திட்டத்திற்கு பொறுப்பான கட்டிடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் அடங்களான 9 பேர் இவ் விஷேட தூதுக்குழுவில் அடங்குகின்றனர்.

துபாய் அரசாங்கத்தின் அனுமதியில் துபாய் நாட்டுக்கு செல்லும் இவ் விஷேட தூதுக் குழுவினர் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து, உலகில் மிகப் பெரிய நூதன சாலை அமைந்துள்ள துபாய் நூதன சாலைக்கும் ஏனைய இஸ்லாமிய நூதன சாலைகளுக்கும் விஜயம் செய்து அங்கு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அனுபவங்களை பெறவுள்ளனர்.

இங்கு பெறப்படும் அனுபவங்கள், ஆலோசனைகள் அடிப்படையில் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுவரும் இஸ்லாமிய நூதன சாலையின் இறுதிக் கட்டப் பணிகள் பூரத்தி செய்யப்படவுள்ளது.

ஜந்து நாட்கள் தங்கி கலந்துரையாடலில் ஈடுபடும் இக் குழுவினருக்கான சகல ஏற்பாடுகளையும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி மஹிந்த பாலசூரி, துபாய் நாட்டின் கவுன்சிலர் அப்துர் றஹீம் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *