Breaking
Tue. May 7th, 2024

எ.எச்.எம்.பூமுதீன்

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து மீளக் குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு வீடுகளை வழங்கும் வகையில் திட்டமொன்றை உருவாக்கி செயற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.

சம்பந்தப்பட்ட முஸ்லிம் மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு அமைச்சர்களுக்குப் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்ரசிறி, யாழ் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைச்சர்களுக்கு உதவியாகச் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்குமான விசேட அபிவி ருத்தி மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முக்கியஸ்தர் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில்,யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு ஒரு வீடுகூட வழங்கப்படவில்லை என்றும் வீடு வழங்கும் விடயத்தில் பாரபட்சம் காட்டப் படுவதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்த அமைச்சர், மீளக் குடியமர்ந்துள்ள 500 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக வீடுகளை வழங்க நட வடிக்கை எடுக்குமாறும் இது தொடர்பில் தாம் பல தடவைகள் யாழ். அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை என ஜனாதிபதியிடம் சுட்டிக் காட் டிய அமைச்சர் சம்பந்தப்பட்ட 500 குடும்பங்களுக்கும் வீடுகளைப் பெற்றுக் கொடுக்க வட மாகாண ஆளுநரின் தலைமையில் உரியதொரு திட்டத்தை செயற்படுத்த அனுமதி தருமாறும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் மக்கள் தம்மை பதிவு செய்துகொண்டிருக்காவிடில் அவர்களை மீள்குடியேற்றம் செய்துள்ள பகுதியில் அவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுப்பது முக்கியம் எனத் தெரிவித்தார்.தொடரும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அமைச்சர்கள் டக்ளஸ் மற்றும் ரிசாட் பதியுதீன் இருவரும் இணைந்து இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றும் இவர்களுக்கு உதவியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகமும் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு முதன்மையளிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது முன்பு இங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்களையும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.இனம், மதம் மற்றும் வேறு எந்த பேதங்களுக்குமின்றி முன்பு இங்கு வாழ்ந்த மக்கள் என்ற ரீதியில் அவர்கள் மீள்குடியேற்றப்படவேண்டும். இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *