Breaking
Sun. May 19th, 2024

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அரச படைகளால் மறுபடி இரசாயன ஆயுதம் அதாவது நச்சு வாயுப் பிரயோகம் செய்யப் பட்டதில் 6 பேர் கொல்லப் பட்டுள்ளதுடன் சிறுவர்கள் உட்பட பலர் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை சிரிய உள்நாட்டுப் போரைக் கண்காணித்து வரும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், மூச்சுத் திணறலால் பாதிக்கப் பட்ட சிறுவர்கள் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

எனினும், இத்தகவலை முற்றாக மறுத்துள்ள சிரிய இராணுவத் தரப்பு இட்லிப் மாகாணத்திலுள்ள சர்மின் கிராமத்தில் நச்சு வாயு பிரயோகிக்கப் பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் நாம் எந்த ஒரு இராசயன ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை என்பதை எம்மால் நிரூபிக்க முடியும் என்றும் அதற்கான அவசியம் எமக்கில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 4 வருடமாக நீடித்து வரும் சிரிய உள்நாட்டுப் போரில் முன்னர் ஏற்கனவே இரசாயன ஆயுதம் பாவித்த குற்றச்சாட்டை அதிபர் பஷார் அல் அசாத்தின் அரசு மறுத்திருந்தது என்பதுடன் சமீபத்திய குற்றச்சாட்டுக்கும் அதிகாரிகள் பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், இட்லிப் மாகாணத்தின் ஏனைய பகுதிகளில் மோதல்களில் பல போராளிகள் கொல்லப் பட்டதை இராணுவ அறிக்கை உறுதி செய்துள்ளது. இதேவேளை பிரிட்டனைத் தளமாகக் கொண்டு சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட தகவலில், கொல்லப் பட்ட 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் 3 குழந்தைகள் என்றும் மருத்துவ அதிகாரிகளின் தகவல் படி திங்கள் இரவு அரச படைகளால் வீசப்பட்ட பீப்பாய்க் குண்டில் இருந்து வெளியான குளோரின் என்ற இரசாயனமே இவர்களது மரணத்துக்குக் காரணம் எனவும் இதில் பலர் காயமடைந்ததும் உண்மை எனவும் தெரிய வந்துள்ளது.

சிரிய உள்நாட்டுப் போரில் மருத்துவ உட்கட்டமைப்புக்கள் அழிந்ததை அடுத்து அந்நாட்டில் போரில் காயம் அடைந்து வரும் மக்களுக்கு முதல் மருத்துவ உதவியை வழங்கும் பொறுப்புடைய அமைப்பாக ‘வைட் ஹெல்மெட்ஸ்’ என அழைக்கப் படும் சிரிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பில் 2000 இற்கும் அதிகமான மனிதாபிமான தன்னார்வ ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *