Breaking
Tue. May 7th, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 பிரதிவாதிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிக்கா டி லிவேரா தென்னக்கோன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவை சுட்டுக்கொலை செய்தமை உட்பட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கெதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வித்தானகே அனுர துஷாரதமெல், சந்தன ஜகத் குமார பத்திரனகே சமிந்த ரவிஜயநாத், கொடிப்பிலி ஆரச்சிகே லங்கா ரசாஞ்ஞன, விஜயசூரிய ஆரச்சிகே சாலக்க சமீர, வித்தானகமகே அமில, சரத் பண்டார, சுரங்க பிரேமலால், சந்தன சமன் குமார அபேவிக்கிரம, பிரியங்க ஜனக்க பண்டார, துமிந்த சில்வா, ரோஹண மாரசிங்க, லியனாரச்சி சமிந்த ஆகிய 13 பேருக்கு நேற்று அழைப்பாணை விடுக்கப்பட்டது.

2011 ஒக்டோபர் 08ஆம் திகதி அங்கொட, முல்லேரியாவ மற்றும் ஹிம்புட்டான பிரதேசங்களில் உள்ளூராட்சி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு துப்பாக்கிகளை காண்பித்து அச்சுறுத்தி சட்டவிரோத பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்றும் அவ்வாறே அங்கொட, ராகுல வித்தி யாலயத்தில் போடப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் இருந்தவர்களையும் அச்சுறுத்தி பலவந்தப்படுத்தி வன்முறையிலீடுபட்டமை தொடர்பாகவும் பத்திரென்னே ஏலாகே திலங்கா மதுஷானி பத்திரன என்பவரை வார்த்தைகளால் அச்சுறுத்தியதாகவும் பிரதிவாதிகளுக்கெதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

சட்டவிரோதமாக நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் அங்கத்தவர்களாகவிருந்த தர்ஷன ஜயதிலக்க, ஜலாப்தீன் மொஹமட் அசின், மஹிவேல் குமாரசுவாமி ஆகியோருக்கு மரணத்தை ஏற்படுத்தினார்களென்றும் இராஜதுறைகே காமினி என்பவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தினார்களென்றும் பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அங்கொட ராகுல வித்தியாலயத்தில் போடப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் இருந்தவர்களை பலவந்தப்படுத்தியமை, வன்முறையில் ஈடுபட்டமை, கூட்டம் கூடியமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டார்களென்றும் முல்லேரியா பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி ரி-56 ரக தன்னியக்க துப்பாக்கியொன்றை அருகில் வைத்திருந்தார்களென்றும் சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக் கெதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *