Breaking
Fri. May 17th, 2024

எனக்கு காயம் சுகமாகி நான் எப்போது வீடு போவேன்? இது காத்தான்குடியில் வளர்ப்புத்தாயினால் சூடு வைக்கப்பட்டு படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் எதிர்பார்ப்பு.

சூடு வைக்கப்பட்டு படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலீம் வீதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்றன.

இந்த இரண்டு மாதங்களும் அந்த சூடு வைக்கப்பட்ட சிறுமியின் சூட்டுக் காயங்களுக்கு மருந்து போட்டு சிகிச்சைகள் இடம் பெற்று வருகின்றன. தொடர்ந்து சிறுமி வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

உடல் முழுவதும் இருக்கின்ற சூட்டுக்காயங்கள் ஆறி வருகின்றன. இந்த காயங்களில் இரு காயங்களுக்கு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சிறுமியின் சூட்டுக்காயங்களுக்கு தினமும் மருந்து போடுவதற்கு தாதியர் வந்தாலே போதும் இந்த சிறுமியின் அழுகுரல் கேட்க முடியவில்லை. தாதியர்களும் அழுது விடுகின்றனர்.

தினமும் குளிப்பதற்காக சென்றால் அந்த சிறுமி படும் வேதனையும் அழுகுரலையும் கேட்டு வைத்தியசாலையின் அந்த விடுதியிலிருக்கும் தாதியரும் அழும் நிலைமை அனைவரையும் கண்ணீர் மல்கச் செய்கின்றது என அந்த விடுதியிலுள்ள பலரும் கூறும் வார்த்தை இது.

மகள் நாங்கள் உங்களை சுகப்படுத்துவதற்காகவே மருந்து போடுகின்றோம். உங்களின் காயங்கள் சுகமாகி நீங்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்ல வேண்டும், நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக உங்களின் காயங்களுக்கு மருந்து போடுகின்றோம் என்ற ஆறுதல் வார்த்தைகளை கூறி அந்த தாதியர்கள் அந்த சிறுமிக்கு சிகிச்சைகளை செய்து வருகின்றனர்.

எனினும் இந்த சிறுமி வேதனையால் துடிக்கும் போது அந்த மருந்து போடும் தாதியர்களும் கண்ணீர் மல்கின்றனர்.

இன்னும் இந்த சிறுமியின் உடலில் சில இடங்களில் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும், அதற்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்போவதாகவும் தெரிய வருகின்றது.

இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இந்த சிறுமியின் தற்போதைய நிலை என்ன? என்பதை பார்ப்பதற்காக நானும் மனித நேய செயற்பாட்டாளரும் சென்ஸ் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் சமூக சேவையாளருமான ஏ.எல்.மீராசாகிப் (மெக்ஸல்) அவர்களுடன் 10.5.2016 செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைக்கு சென்று அந்த சிறுமியை பார்வையிட்டேன்.

அந்த சிறுமியை மிகவும் சிறப்பாக அந்த சிறுமியின் பெரியம்மா (உம்மாவின் சகோதரி) வைத்தியசாலையில் வைத்து சிரமத்துடன் பராமரித்து வருகின்றார்.

அந்த சிறுமியின் பராமரிப்பில் சிறுமியின் பெரியம்மா கூடுதலான அக்கறை கொண்டுள்ளார்.

தாயை இழந்து கொடூரமான வாழ்க்கையை அனுபவித்து வந்த அந்த சிறுமிக்கு இன்று பெரியம்மாவினது பராமரிப்பும் அன்பும் ஆறுதல் கொடுக்கின்றது.

அதே போன்று சிறுமியின் பெரியப்பா சிறுமியின் மாமாமாரினது பாசமும் இந்த சிறுமியை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

எனினும் இந்த சிறுமியின் உடம்பிலுள்ள சூட்டுக்காயங்கள் ஆறுவதற்கு இன்னும் சில காலம் எடுக்கலாம்.

இந்த சிறுமியின் உடம்பில் சூடு வைக்கப்பட்ட தடயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல, நூற்றுக்கு மேற்பட்ட தடயங்கள்.

சிறுமியின் நாக்கில் காணப்படும் பெரிய தழும்பு சிறுமியின் உடலின் பல பாகங்களிலும் சூட்டுக்காயங்கள்.

சிறுமியின் தாய் மௌத்தானதையடுத்து சிறுமியின் தந்தை மௌலவி மஜீத் ரப்பாணி மும்தாஜை திருமணம் செய்து கொண்டார்.

சிறுமியை பராமரிக்கின்றேன், பராமரிக்கின்றேன் என்று கூறி சிறுமிக்கு மஜீத் மௌலவியின் இரண்டாவது மனைவி (சிறுமியின் வளர்ப்புத்தாய்) நடாத்தியுள்ள கொடூரம் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

இத்தனை கொடூரத்தினையும் இந்த சிறுமி மூன்றாண்டுகள் தாங்கிக் கொண்டு வாழ்ந்துள்ளார்.

இப்போது இந்த சிறுமி தனக்கு தனது வளர்ப்புத்தாயினால் நடாத்தப்பட்ட கொடூரத்தினை மனம் திறந்து வாய் திறந்து கூறுகின்றார்.

சிறுமிக்கு ஞாபகம் வரும்போதெல்லாம் அந்த வளர்ப்புத்தாய் மும்தாஜினால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தினையெல்லாம் கூறி வருகின்றார்.

சிறுமியின் சூட்டுச் சம்பவம் உலகிற்குத் தெரிய வருவதற்கு முதல் தினம் 10.3.2016 அன்று வியாழக்கிழமை மாலை மறு நாள் விடிந்தால் வெள்ளிக்கிழமை. “இன்று எனக்கு சூடு வைய்யாதிங்க உம்மி இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ இரவு ஸலவாத்துடைய நாள். இந்த நாளை மதித்து எனக்கு அல்லாஹ்வுக்காக சூடு வைய்யாதீங்கள் உங்களின் கால்களை பிடித்து கெஞ்சிக் கேட்கின்றேன். நான் எனது வளர்ப்புத்தாயின் காலில் விழுந்து கெஞ்சியும், இரண்டு கைகளையும் கட்டி விட்டு கரண்டியை நெருப்பினால் காய்த்து விட்டு தொடையில் சூடு வைத்தார்.

அன்று பகல் உணவு உட்கொண்ட பீங்கானை நான் கழுவவில்லை என்பதற்காகத்தான் அந்த சூடு எனக்கு அவரினால் வைக்கப்பட்டது.

அது தான் எனக்கு வைத்த கடைசி சூடு. மறுதினம் வெள்ளிக்கிழமை 11.3.2016 அன்று காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரிகள் என்னைக்காப்பாற்றி விட்டார்கள்” என அந்த சிறுமி கூறுகின்றார்.

அன்று காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரிகள் மஜீத் ரப்பாணியின் வீட்டுக்கு சென்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல சிறுமியைக் கேட்ட போது, சிறுமிக்கு உடுப்பு போடுவதற்காக சிறுமியை உள்ளே அழைத்துச் சென்ற வளர்ப்புத்தாய் மும்தாஜ், அந்த சிறுமியைப்பார்த்து “அடியேய் ஒன்றும் சொல்லி விடாதே என்னை மாட்டிக் கொடுத்து விடாதே” என்று அதட்டிக் கூறியதையும் அந்த சிறுமி மறக்க வில்லை.

மஜீத் மௌலவியின் மனைவி, சிறுமியின் வளர்ப்புத்தாய் மும்தாஜ், மஜீத் மௌலவியின் மகளான அந்த சிறுமிக்கு நடாத்தியுள்ள கொடூரத்தினையும் காட்டுமிராண்டித் தனத்தினையும் எழுத்தில், வார்த்தைகளில் இலகுவில் கூறி முடிக்க முடியாதவை.

கடந்த மூன்று வருடங்களில் முதல் ஆறு மாதங்கள் அடித்து அடித்து சிறுமியை சித்திரவதை செய்த வளர்ப்புத்தாய், கடந்த இரண்டரை வருடங்களாக நெருப்பினால் சூடு வைத்து வந்துள்ளார் எனும் அதர்ச்சித் தகவல் தற்போது தெரிய வருகின்றது.

அந்த சிறுமிக்கு சூடு வைக்காத இடங்களே கிடையாது.

கடந்த ரபிஉல் அவ்வல் மாதம் 12ம் நாள் நபிகளாரின் பிறந்த தினம் எனக் கூறப்படும் அந்த தினத்தையொட்டி காத்தான்குடி-6, பதுறியா ஜும்ஆப்பள்ளிவாயலில் ஸலவாத் மஜ்லிஸ் நடைபெற்றுள்ளது.

அன்று மாலை சிறுமிக்கு சூடு வைத்ததையும் சிறுமி இவ்வாறு கூறுகின்றார்.

“இன்று இரவு ஸலவாத் மஜ்லிஸ் உம்மி. பிலீஸ் எனக்கு சூடு வைய்யாதீங்க உம்மி” என்று சிறுமி அழுது கூறியுள்ளார். அன்றும் சிறுமிக்கு சூடு வைக்கப்பட்டுள்ளது.

“எனது கால்கள் இரண்டையும் கட்டி விட்டு தென்னை மட்டையின் நாரினால் அடிக்கும் அடியின வலி என்னால் தாங்க முடியவில்லை” என்றும் அந்த சிறுமி கூறுகின்றார்.

“எனக்கு சூடு வைத்து காய்ந்து போய் கறுப்பாக இருக்கும் அந்தக் கரண்டியைத்தான் தந்தை மஜீத் மௌலவிக்கு சாப்பிடும் நேரத்தில் கறிக்கு கரண்டியாக வைப்பார். எனக்கு சூடு வைத்து என்னைக் காயப்படுத்திய அந்தக் கரண்டியால்தான் அவர் சாப்பிடுவார். ஆனால் ஒரு நாள் கூட என் தந்தை ஏன் இந்தக்கரண்டி கறுத்திருக்கின்றது என்று கேட்பதில்லை.

எனக்கு நடந்த இந்த அநியாயங்களை என் தந்தை மஜீத் மௌலவி ஒரு நாள் கூட என் வளர்ப்புத்தாயிடம் கேட்டதே கிடையாது. கண்டும் காணாதது போல நடந்து கொண்டார்”என்கின்றார் சிறுமி.

“ஒரு நாள் சூடு வைத்த வேதனை தாங்க முடியாமல் தந்தை மஜீத் மௌலவி ஜாமியாவில் இருக்கும் போது ஓடிச் சென்று அவரிடம் கூறினேன் போங்க வாரன் என்றார். ஆனால் அவர் வரவில்லை. மீண்டும் சூடு வைக்கப்பட்டது.

நான் பீங்கான்கள் கழுவ வேண்டும், உடுப்பு மடித்து வைக்க வேண்டும், வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் இல்லையென்றால் அதற்கும் அடியும் சூடும்தான்” என்கின்றார் சிறுமி.

“பாடசாலை விட்டு வீடு வந்தால் பாடசாலை சீருடை கழற்றுவதற்கு முன்னர் நான் பீங்கான் கழுவ வேண்டும். எனக்கு அயன் பொக்ஸினாலும் சூடு வைப்பார்” என்று கூறும் சிறுமியின் கையில் பென்சிலினால் குத்தி காயப்படுத்தியுமுள்ளார்.

“பின்னேரங்களில் நான் தூங்கவே முடியாது. எனக்கு தூக்கம் வரும், முகத்தை கழுவிக் கழுவி இருப்பேன். சூடு வைக்கப்பட்ட படுகாயங்களுடன் அந்த வேதனையில் இருக்கும் போது என்னை வீட்டு வேலை செய்யுமாறு கூறுவார்.

எனக்கு சாப்பிட முடியாது என்றால் அடிப்பார். நான் சாப்பிட வேண்டும். அப்போது எனக்கு வாந்தி வரும். அப்போதும் அடிப்பார். நான் அடிபட்டுக் கொண்டு அழுது அழுது சாப்பிடுவேன்.

எனது உடம்பில் சூடு வைக்கப்பட்ட பச்சக் காயங்கள் மேல் “ஸ்கினி” எனப்படும் உள்ளாடையை அணிவேன். அது அந்தக்காயங்களில் அப்பி பிடித்து விடும். குளிக்கச் சென்றால் அதை வேனுமென்று பிய்த்து எடுப்பார் என் வளர்ப்புத் தாய். நான் துடியாய் துடிப்பேன். இரத்தம் அந்தக்காயத்திலிருந்து பாயும். அதனோடு என்னை இழுத்துக் கொண்டு சென்று என்னை குளிக்கச் செய்வார்.

நெருப்பில் கரண்டியை சூடாக்கும் போது, இன்னும் சூடானது காணாது இன்னும் நன்றாக சூடாகனும் என்று கூறிக் கூறி கரண்டியை சூடாக்கி எனது உடம்பில் அந்த நெருப்புச் சூட்டு கரண்டியை வைத்து தேய்ப்பார். நான் அழுது துடிப்பேன் எனது வாய்க்குள் சீலையை பூர்த்தி விட்டு இவ்வாறு செய்வார்” என அந்த சிறுமி கூறுகின்றார்.

“இத்தனை கொடுமைகள் இழைக்கப்பட்டதை எனது சகோதரர் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருக்கும் வளர்ப்புத்தாய் பல தடவைகளில் அடிப்பார். அதனை தாங்கிக் கொண்டே எனது சகோதரர் இருந்தார்.”

இவ்வாறு சிறுமிக்கு இழைக்கப்பட்ட அந்த கொடுமை நீண்டு கொண்டே செல்கின்றது.

இத்தனை கொடுமைகளும் தனது மனைவியினால் தனது மகளுக்கு நடந்ததை கண்டும் காணாதது போல மௌலவி மஜீத் ரப்பாணி இருந்ததால்தான் சட்டம் அவருக்கும் தனது கடமையை செய்கின்றது என்பது பலரின் கருத்தாகும்.

பல முறை மஜீத் மௌலவியின் விடுதலைக்காக பிணை மனு கோரப்பட்டும் அது நிராகரிக்கப்பட்ட நிலையில், மஜீத் மௌலவி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கான விளக்க மறியல் எதிர் வரும் 20.5.2016 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுமியின் காயங்கள் சுகமாகி சிறுமியின் வாழ்வு சிறக்க நாம் பிராத்திப்போமாக!

எம்.எஸ்.எம்.நூர்தீன்
(ஊடகவியாளர்)

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *