Breaking
Sat. May 4th, 2024

சென்னையில் பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை கடந்த புதன்கிழமை மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

அருண் செல்வராசன் குறித்து நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனவே அருண் செல்வராசனை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி தேசிய புலனாய்வு அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நேற்று நீதிபதி மோனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

புழல் சிறையில் இருந்து அருண் செல்வராசன் பலத்த பாதுகாப்புடன் சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவரை காவலில் எடுக்கும் மனு மீதான விவாதம் நடைபெற்றது. குறிப்பாக புதிய புலனாய்வு அமைப்பினர் தரப்பில் வாதிட்ட அதிகாரிகள் அவரை காவலில் எடுக்க வேண்டிய அவசியம் குறித்து பல்வேறு தகவல்களை கூறினர்.

குறிப்பாக கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியதாகவும் தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் உள்ள பல முக்கிய இடங்களை படம் பிடித்து கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதுதவிர தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நடத்தப்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவு மற்றும் தடுப்பு ஒத்திகை குறித்த பல்வேறு தகவல்களையும் அவர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

எனவே இது பற்றியெல்லாம் விசாரிக்க வேண்டியிருப்பதால் அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி கோரினர்.

இதனை கேட்ட நீதிபதி தேசிய புலனாய்வு அதிகாரிகளின் காவலில் எடுக்க சம்மதமா என அருண் செல்வராசனிடம் கேட்டனர். அவரும் காவலுக்கு செல்ல ஒத்துழைப்பதாகவும் கூறினார்.

மேலும் வழக்கறிஞர் வைத்து வாதாட விருப்பமா அல்லது இலவசமாக வழக்கறிஞர் வாதாட ஏற்பாடு செய்ய வேண்டுமா என நீதிபதி கோரினார். இதற்கு தம்முடைய வழக்கறிஞரிடம் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாக அருண் செல்வராசன் கூறினார்.

இது தொடர்பாக நடைபெற்ற வாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அருண் செல்வராசனை காவலில் எடுக்கும் மனு மீதான உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *