Breaking
Sun. May 19th, 2024

விபத்துக்குள்ளான ஜேர்மன் நாட்டு விமானத்தின் குரல் பதிவு பெட்டியில் இருந்து பயன்படுத்தக்கூடிய தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து தெரிய வந்ததாகக் கூறப்படும் சில முக்கிய விடயங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன.

‘ஜேர்மன்விங்ஸ்’ விமானம் பிரான்சில் விபத்துக்குள்ளான நாளில் வானிலை சீராகவே இருந்தது. இதனால் விபத்துக்கான பிரதான காரணி வானிலையாக இருக்க முடியாது என்பது ஓரளவுக்கு உறுதியாகியது.

மேலும் வேறு  எந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது இது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதொன்றா என்பது தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் மீட்கப்பட்ட குரல்பதிவு பெட்டியில் இருந்து அறியப்பட்டதாகக் கூறப்படும்  சில முக்கிய விடயங்களை இது தொடர்பில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அதிகாரியொருவர் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெயர் குறிப்பிடப்படாத குறித்த அதிகாரியை மேற்கோள்காட்டி ஊடமொன்று பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி குறித்த விமானத்தின் விமானிகளின் உரையாடல்கள் ஆரம்பத்தில் சாதாரணமாக நல்ல முறையில் இருந்துள்ளது.

எனினும் பின்னர் விமானிகளின் அறையிலிருந்து ஒரு விமானி வெளியே சென்றுள்ளார், எனினும் வெளியே சென்ற அவரால் பின்னர் மீண்டும் உள்ளே நுழைய முடியாமல் போயுள்ளமை குரல் பதிவுப் பெட்டியை ஆராய்ந்த போது தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம் அறையின் கதவை திறக்க முடியாமல் போனமையே என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் கதவை திறக்கும் படி ஆரம்பத்தில் மெதுவாக தட்டியுள்ளார், கதவு திறக்கப்படாமையால் தொடர்ந்து பலமாக அவர் கதவை தட்டியுள்ளமையும் குரல் பதிவுப் பெட்டியில் பதிவாகியுள்ளது

எனினும் அறையின் உள்ளிலிருந்து எவ்வித பதிலும் கடைசி வரை வரவில்லையெனவும் , வெளியே இருந்த விமானி கதவை உடைக்க முற்படும் சத்தமும் குரல் பதிவுப் பெட்டியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிகாரி வெளியிட்டுள்ள தகவலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் அதிகரித்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *