Breaking
Wed. May 8th, 2024
த. மனோகரன்
நாட்டு மக்களிடையே சமத்துவம், இணக்கப்பாடு, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, மதிப்பளிப்பு போன்றவை இருந்தால் மட்டுமே நாடு வளம் பெறும். முன்னேற்றமடையும். இதைவிடுத்து இனப்பகை, எதிர்ப்புணர்வு, புறக்கணிப்பு, அடக்குமுறை  போன்றவை மேலோங்கி செயற்பட்டால் நாடு அல்லல்படும். அவலப்படும். இதற்கு நமது நாடும் சான்றாகவுள்ளது. எனவே,  இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, முடிவுகட்ட நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் முன்வர வேண்டும். நாட்டின் இன்றைய தேவையும் அதுவாகவேயுள்ளது. இதற்குத் தடையாக இருப்பவர்கள்,  ஊறு செய்பவர்கள், அதிகார நோக்கம் ö0காண்டவர்கள் அதிலும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசியல் வாதிகள் என்பதை மறைக்க முடியாது.   நாடு என்பது நிலப் பரப்பு கட்டிடங்கள், பாலங்கள், பாதைகள், துறைமுகங்கள் போன்ற சடப் பொருட்களல்ல. நாடு என்பதும் நாட்டு  வளம் என்பதும் நாட்டின் குடி மக்கள் ஒவ்வொருவரதும்  அவர்களது நலம் சார்ந்ததாகவுமே கருதப்படுவது நாகரிகமானது ஏற்புடையது. நாட்டின் ஒரு சாரார் அவதிப்படுகின்றார்களென்றால், அவதிக்குள்ளாக்கப்படுகின்றார்களென்றால் நாடு சீரழிவில் சிக்கியுள்ளது என்பதே ஏற்புடையது.  
 
நாடு அவலத்தில் ஆழ்ந்துள்ளது. ஆழ்த்தப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். ஏற்கவேண்டும்.   இவ்வாறின்றுள்ள நிலையில் பல்வேறு சமூகங்களும் விட்டுக் கொடுப்புடன், இணக்கப்பாட்டுடன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. சமய ரீதியாகவும் மொழி ரீதியாகவும் முதலில் இணக்கப்பாடு காண வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவ்வாறு இணக்கப்பாடு ஏற்பட்டால் மட்டுமே மாற்று சமூகமும் மதிக்கும், ஏற்கும் நிலை  உருவாகும். அல்லது ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போலாகிவிடும்.   தமிழ் மக்களும் தமிழ் பேசும்  மக்களும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தால் மட்டுமே நாட்டின் சிறுபான்மையினரென்ற அடிப்படையில் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமென்று கூறப்படுகின்றது. பல்வேறு தரப்புகளும் இதையே எடுத்துக் காட்டுகின்றன.   இலங்கையைப் பொறுத்த வரை சிறுபான்மைச் சமூகங்களெனப்படும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே அரசியல் தலைமைகள் பெருக்கமும் ஒரு துர்ப்பாக்கிய நிலையை உருவாக்கியுள்ளது. சமூக நலனுக்கென்று பொது வாழ்வில் , அரசியலில் களமிறங்க முற்பட்டவர்கள் தமக்கிடையே மோதும் விமர்சிக்கும் அரசியல் நடத்துவதால் சமூகங்களுக்கு மத்தியிலேயே  ஒற்றுமையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.   இவ்வாறான நிலையில் தமிழ், முஸ்லிம் உறவை வலுப்படுத்தவென்று  நல்ல நோக்கத்தில் தேவையை உணர்ந்து முன்வந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் முயற்சியை  இரு சமூகங்களும் வரவேற்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. 
 
இந்நிலையிலே உறவுக்கு  உலை வைத்த  வரலாற்று நிகழ்வுகளையும் தற்போது அங்கும் இங்குமாக இடம்பெற்று வரும் இன உறவுக்குப் பாதிப்பான செயற்பாடுகளையும்  சுட்டிக்காட்டுவது காலத்தின் தேவையாயுள்ளது. வரலாறு என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டியது. அதிலிருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். விட்ட தவறுகள், தவறான சிந்தனைகள் தடையின்றித் தொடர்வதைத் தடுத்துக்கொள்ள முடியும். ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டுப் பார்ப்பதிலிருந்து காத்துக்கொள்ள முடியும். சந்தேகமும் கடந்த கால வரலாறு அறியாமையுமே இன்றுள்ள பிரச்சினையாகும்.   தமிழ் , சிங்கள உறவும் அதேபோல் தமிழ், முஸ்லிம்  உறவும் பங்கப்பட தமிழரை விட ஏனைய சமூக அரசியல்வாதிகளின் செயற்பாடுகளே வழியமைத்ததாக வரலாறு வெளிப்படுத்துகின்றது. வரலாற்றில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தமிழ், சிங்கள உறவின் விரிசலுக்கு நாடாண்ட பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்களது குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிப்புகளும் தமிழ் மொழியுரிமை, தமிழரது  கல்வி, தொழில் உரிமைத் தடைகளும் அதேபோல் காலத்திற்குக் காலம் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறிக் காடைத் தனங்களும் காரணிகளாயின.   
 
அவ்வாறே தமிழ், முஸ்லிம் உறவுக்கு முஸ்லிம்  அரசியல்வாதிகள் சுயலாபம் கருதி செயற்பட்டமையும்  வரலாற்றில் தெளிவாகப் பதிவேறியுள்ளது. தமிழ்ப் பேசும் மக்கள் ஓரணியில் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ் மக்களது வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளே இன்றைய விரிசலுக்கு அத்திபாரமாயமைந்துள்ளது.   ஆம். இன்று தமிழ், முஸ்லிம் உறவுக்கு கை கொடுத்து செயற்படத் துடிக்கும் தமிழரசுக் கட்சி அதன் ஆரம்ப காலம் முதலே  இந் நோக்கில் செயற்பட்டு வந்ததை வரலாறு தெளிவாகச் சொல்கின்றது. மறைக்க முடியாத அந்த வரலாற்று  நிகழ்வுகளை, உண்மைகளை மீள நோக்கி விட்ட தவறுகள் இனியும் தொடராதிருக்க வழியமைத்துக் கொள்வது அவசியமானது. பொருத்தமானது. அரசியல் வாதிகள் அன்று விட்ட தவறுகள் இன்று தமிழ், முஸ்லிம் உறவு பற்றி, அதன் தேவைப் பற்றி புதிதாகச் சிந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. அன்றிருந்த சமூகங்களுக்கிடையேயான இணக்கப்பாட்டைச் சிதைத்ததால் அரசியல் வாதிகள் பலன் பெற்றனர். சமூகம் துன்பத்தில் தள்ளப்பட்டது. இது யதார்த்த நிலை.  தமிழ் பேசும் மக்களது அணியாக உருவான தமிழரசுக் கட்சியின்  சார்பில் தமிழ் மக்கள் அமோக ஆதரவுடன் பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் பிரமுகர்கள் சகலரும்  தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி பெரும்பான்மையின ஆளும் கட்சிகளில் இணைந்தமை வரலாற்றுப் பதிவாகும். கேட் முதலியார் என்று அறியப்பட்டு வரும் பின்னாளில் ஊழல் குற்றச்சாட்டில் வடு கொடபிட்டிய ஆணைக் குழுவால்  குற்ற வாளியாகக் காணப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த வருமானம் எம்.காரியப்பர் என்பவர்  தமிழரசுக் கட்சியின் சார்பில் கல்முனையில் போட்டியிட்டு தமிழ் மக்களின் ஆதரவுடன் பாராளுமன்றம் சென்றார். அதேபோல் நிந்தவூர் தொகுதியிலிருந்து எம்.எம். முஸ்தபாவும் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவானார்.  1956 இல் பாராளுமன்றத்திற்குத் தெரிவான  குறித்த இருவரும் தமிழரசுக் கட்சியிலிருந்து நீங்கி தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்து தமிழ் மொழியின் உரிமையைப் புறந்தள்ளிய அன்றைய ஆட்சியாளருடன் இணைந்தனர்.  
 
அதேபோன்றே நிந்தவூர், பொத்துவில், மூதூர், கல்முனை ஆகிய தொகுதிகளிலிருந்து தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழர் வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்குத் தெரிவான  முன்கூறப்பட்ட நிந்தவூர், பொத்துவில் ஆகிய இரு தொகுதிகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட இரு மஜீதுகளும் மூதூரின் முகமதலியும் கல்முனையின் எம்.சீ. அகமதுவும் தமிழரசுக் கட்சியிலிருந்து  விலகி ஆளும் கட்சிகளில் ஐக்கியமாகினர். மூதவை உறுப்பினராக விருந்த மு.மாணிக்கம் அவர்களிடத்திற்கு தமிழரசுக் கட்சியால் நியமனம் செய்யப்பட்ட மசூர் மௌலானா என்பவரும் அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாய்ந்தமை வரலாற்றுப் பதிவாயுள்ளது.  அதேபோல் ஈரோஸ் என்ற தமிழ் இளைஞர் குழு சார்பில் மன்னாரிலும் மட்டக்களப்பிலும் தெரிவான  அயூப் மற்றும் சேகுதாவூத் ஆகியோரும் தமது முன்னோர் காட்டிய வழியில் ஆளும் கட்சியுடன் சங்கமித்தமை வரலாறு. அரசியல் வாதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இன உறவின் சிதைவிற்கு வழிவகுத்தனவேயன்றி வேறு காரணிகளெவையுமில்லை.  கிழக்கு மாகாணத்தின் முதற் பெரும்பான்மையினமாகவுள்ள தமிழர்கள், தமிழர்களது பிரச்சினையின் தீர்வின் ஒரு அம்சமாகக் கொண்டு வரப்பட்ட மாகாண  சபையில் எந்தவொரு அதிகாரமும் அற்ற நிலையில் உள்ளமைக்கு உதவியவர்கள் யார் என்று ஆய்வு செய்ய வேண்டியதில்லை. 
 
வடக்கு, கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு முதலாவது அமைச்சரவை நியமிக்கப்பட்ட போது வரதராஜப் பெருமாள் தலைமையிலான மாகாண அரசு முஸ்லிம் ஒருவரை மாகாண சபை உறுப்பினராக உள்வாங்கி அமைச்சராக நியமித்ததுடன் சிங்களவர் ஒருவரையும் அமைச்சராக்கி அரசியல் நாகரிகம் என்றால் என்ன என்பதைப் புரிய வைத்தது.   ஆனால், தமிழரல்லாத ஏனைய சமூகங்கள் தமிழரது அரசியல் இருப்பை வலுவிழக்கச் செய்யும்  கைங்கரியத்தில் முனைப்புடன் உள்ளமை பண்பட்ட அரசியல் நாகரிகத்தின் முகத்தில் கரிபூசுவதாயுள்ளது. வரதராஜப் பெருமாள் தலைமையிலான அரசின் வற்புறுத்தலால் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக வரலாற்றில் முதல் முறையாக சகாப்தீன் என்ற முஸ்லிம் நியமனம் செய்யப்பட்டார்.   வரதராஜப் பெருமாளின் ஆட்சி கவிழ்ப்புடன் சகாப்தீன் கொழும்புக்கு உடனடியாக மாற்றப்பட்டு சிங்கள  இனத்தவர் அரச அதிபரானார். முஸ்லிம்கள் முதற் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தின் அரச அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் கேட்டதாக வரலாறு இல்லை.   
 
முஸ்லிம்களது உரிமை, இருப்பு,  அங்கீகாரம் , அரசியல் அதிகாரம் என்பவையில் அவை கிட்ட வேண்டும் என்பதில் தமிழர் தரப்பு அவதானமாகச் செயற்பட்டது. கண்ணியமாக நடந்து கொண்டது.    அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற  உறுப்பினர் பொன்.செல்வராசா என்னுடன் உரையாடும் போது கல்முனைத் தமிழ் மக்கள் பொதுபலசேனாவுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் தமிழ்ப் பேசும் முஸ்லிம்களுக்கு எதிரான அவ்வமைப்புடன் தொடர்புபடுவது ஏற்புடையதல்ல என்றும் கருத்துத் தெரிவித்தார்.   தமிழ்  பேசும் மக்களான முஸ்லிம்களுக்கு எதிரான குறித்த அமைப்புடன் தமிழர்கள் ஏன் தொடர்பை ஏற்படுத்துகின்றனர்? விரும்பியா ஏற்படுத்துகின்றனர் என்பதை அவதானத்தில் கொள்ள வேண்டும். அப்பகுதிகளில் தமிழ் மக்கள் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதால்  அவர்கள் பாதுகாப்புத் தேட வேண்டிய நிலை  ஏற்படுத்தப்பட்டுள்ளது.   எடுத்துக்காட்டாக கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவு ஏற்படவுள்ள முட்டுக்கட்டை, கல்முனை தமிழ் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு அங்கு திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் இடையூறுகள், சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சரஸ்வதி பூசை நடத்த அனுமதி மறுப்பு, அபிவிருத்திப் பணிகளில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் புறக்கணிப்பு, தமிழ்ப் பாடசாலைகளுக்கான வளப்  பங்கீடுகளில் பாரபட்சம் இவ்வாறு கிழக்கு மாகாணத் தமிழர்கள்  இன ரீதியாகப் பல பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வரும் போது, பாதிக்கப்படும் போது ஏதாவது ஒரு பாதுகாப்பைத் தேடுவது தவிர்க்க முடியாது அல்லவா ? இதைத் தவறென்று எந்தப் புத்தியுள்ளவனும் கூறமாட்டான். சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலையொன்றில் இடம்பெற்ற தமிழ் மொழித் தின விழா ஆரம்ப  நிகழ்வின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதைத் தடுத்து சிங்கள மொழியில் பாடச் செய்தவர் சிங்களவர் அல்ல என்பது வெளிப்படையானது. இவை போன்றவையே இன விரிசலுக்கு வழி செய்கின்றன.தமிழருக்கு, தமிழ் மொழிக்கு எதிராகச் செயற்பட்டால் சிங்களவரிடம் இலாபம் பெறலாம். 
 
தாம் தமிழருக்கு எதிரானவர்களென்று காட்டிக் கொண்டால் நன்மை பெறலாம் என்று தப்புக் கணக்குப் போடுபவர்களுக்கு தமிழர்கள் பொதுபல சேனாவுடன் கொள்ளும் உறவு ஒரு எச்சரிக்கையாகும்.   மொழி ரீதியாக இணக்கம் காணப்படாத போது சமயக் கோட்பாடுகளின்   அடிப்படையில் பௌத்த இந்து உறவு  வலுப்பட வழியுண்டு என்பதை மறந்து விட முடியாது. அதைத் தவறென்றும் கூற முடியாது. வன்முறை, இனக் குரோத சிந்தனைகள்  கைவிடப்படாத வரை  தப்புகளும் தவறுகளும் தொடரும் வரை பல்வேறு சம்பவங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது. இது ஏற்புடையதும் கூட.    தமிழ், முஸ்லிம் உறவின் தேவைப் பற்றி மனப்பூர்வமாகச் சிந்திக்கும் ஒரு முஸ்லிம் பாடசாலையின்  அதிபரின் கூற்று சிந்திக்கத்தக்கது. முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர்களை மட்டுமா ஏமாற்றினார்கள். முஸ்லிம் பொது மக்களையுமல்லவா ஏமாற்றியுள்ளனர். சாதாரண பொது மக்களை பிரித்தாளும் செயல் அரசியல் அதிகாரம் பெறும் நோக்கம் கொண்டது. முஸ்லிம்களின் நலனுக்காக அஸ்ரப் நிறுவிய அரசியல் அமைப்பு இன்று எத்தனை துண்டுகளாகச் சிதறிவிட்டது. ஒரே அமைப்பில் அரசியலுக்கு வந்தவர்கள் நான்கு சிந்தனைகளில் இன்று அமைச்சர்களாகவுள்ளனர்.ஏன் இவர்கள் ஒன்றுபட முடியாது? எல்லாம்  பதவி சுகம் என்றார் அக்கல்விமான் .   தமிழ்ப் பேசும் மக்களை அதாவது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தும் கேவலமான, கீழ்த்தரமான, கேடு கெட்ட அரசியல் வாதிகளிடமிருந்து விடுபட்டால் மட்டுமே தமிழ், முஸ்லிம் உறவுக்கு வழி ஏற்படுத்த முடியும். தேவைக்கு ஒற்றுமை. தேவை முடிந்தபின் நீ யாரோ நான் யாரோ  என்ற நிலைமை. இது மாறாத வரை சமூக இணக்கப்பாடு சாத்தியமற்றது. இது தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல சிங்கள அரசியல் அரங்காடிகளுக்கும் பொருந்தும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *