Breaking
Sun. Apr 28th, 2024

தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் மீது நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ள கைக்குண்டு தாக்குதல், முஸ்லிம்கள் மீதான அரசின் அக்கரையின்மையின் வெளிப்பாட்டை காட்டுவதாக மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் நாள்தோரும் பல துயரங்களுக்கு ஆளாக வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுவரும் செய்திகளை கேட்கும்போது மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ள அவர், அளுத்கம சம்பங்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மூன்று வருடங்களுக்கு மேலாக இலங்கை முஸ்லிம்கள் பல துயரங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனால், மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். மக்களின் இந்த நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

அளுத்கம, பேருவளை, தர்காநகர், வெலிப்பன்ன மற்றும் துந்துவ பகுதிகளில் இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை; நஷ்டஈடும் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பில் ஆராய குழுவொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தபோதும், இதுவரையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. இதன்மூலம், இவ்விவகாரத்தை அரசு மூடி மறைப்பதற்கு முயற்சிப்பது தெரிகிறது.

இதனிடையே, தம்புள்ளை பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நள்ளிரவு வேளையில் பள்ளிவாசலுக்குள் இருவர் நுளைத்து குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்வி எழுகின்றது.

அத்தோடு, முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்குவாதிகள் மேற்கொண்ட பல தாக்குதல்களின்போது பொலிஸார் கைக்கட்டியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். இது, இனவாதிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. இலங்கையில் சட்டம் சீர்குழைந்துள்ளது. இந்நிலைமை தொடருமாயின் இலங்கையில் முஸ்லிம் இனம் அழிக்கப்பட்டுவிடும் அபாயம் தோன்றியுள்ளது.

விலை ஏற்றத்தினால் வாழ்க்கைச்செலவை கொண்டு நடத்த முடியாமல் நாட்டு மக்கள் பட்டினி சாவை எதிர்கொண்டுள்ளனர். அபிவிருத்தி என்ற பெயரில் வீடுடைப்பால் குடியிருப்புக்களை இழந்து தவிக்கின்றனர். வேலைவாய்ப்பு கிடைக்காமையால் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

இதனால் தற்கொலைகளும் கொள்ளைகளும் கொலைகளும் நாட்டில் அதிகரித்துள்ளன. நிலைமைகள் இப்படியிருக்க அரசாங்கம் இனவாதிகளுக்கு தீனிபோட்டு வளர்க்கின்றது. இது, மிகவும் அபாயகரமானதாகும்.

இவ்வாறான தாக்குதலை அரச தரப்பினர் தமக்கு எதிரான சதித்திட்டம் என கூறுகின்றனர். அதனை எவ்வாறு நம்ப முடியும். அத்தோடு, ஊவா மாகாண சபை தேர்தலில் அவர்களுக்கான ஆதரவை இல்லாது செய்யவே தம்புள்ளையில் குண்டுத் தாக்குதல் நடத்ததப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஊவா மாகாண சபைக்கு அரசாங்கத்தின் வெற்றிலை சின்னத்தில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்படவில்லை. அரசின் பங்காளி கட்சிகளான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூட்டிணைந்து இரட்டையிலை சின்னத்தில் வேட்பாளர்களை களமிறங்கியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு எவ்விதமான ஆதரவும் முஸ்லிம்களிடத்தில் கிடைக்கப்போவதில்லை. இத்தேர்தலில் அரசுக்கு முஸ்லிம்கள் மட்டுமல்ல பெரும்பான்மை மக்களும் நல்லதொரு பாடத்தை புகட்டவுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க அரசு காத்திரமான நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. ஆரம்பததில் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் அரசு அக்கறையுடன் செயற்பட்டிருந்தால் மேலும் கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது. இதனாலேயே வன்முறைகள் தொடர்ந்தும் கட்டவிழ்க்கப்பட்டு வருகின்றது.

பள்ளிவாசலுக்கு புகுந்து குண்டு வைக்கும் அளவுக்கு நிலைமை உருவாக்கப்பட்டுவிட்டது. இதனை தடுக்காது எதிர்கட்சிகளை குற்றம்சாட்டுவதில் பயனில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

(VK)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *