Breaking
Thu. May 2nd, 2024
-நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம் –
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொழுகை அறை மூன்றாவது முறையாக தாக்குதலுக்குள்ளான சம்பவம் இரு தினங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது.
இரவு வேளையில் இனம்தெரியாத சிலர் தொழுகை அறையை தாக்கி அதற்குள்ளிலிருந்த மின் விசிறிகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் படிக்கும் சுமார் 650 முஸ்லிம் மாணவர்களுக்கு ஐவேளை தொழுகையை நிறைவேற்றுவதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ஒதுக்கப்பட்ட பத்து பத்தடியிலான அறையே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் நாட்டுக்கு வழங்கும் செய்தி என்ன? பெரும்பான்மை தமிழ் மாணவர்கள் கல்வி பயிலும் இப்பல்கலைக்கழகத்தில் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கேள்வியே எழுப்பப்படுகின்றது.
இச்செயற்பாடு இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு செயலாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.
ஒரு முறை, இருமுறை அன்றி மூன்று முறை இந்த தொழுகை அறை தாக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையிலான ஒற்றுமை கட்டியெழுப்பப்படல் வேண்டும் என பேசப்படும் காலத்தில், இவ்வாறான சம்பவங்கள் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பாதகமாகவே அமையும்.
பெரும்பான்மை சிங்கள சமூகம் தமக்கு அநீதி இழைக்கின்றது எனக்கூறும் தமிழ்ச் சமூகத்தவர்கள் மற்றொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் விடயத்தில் இப்படித்தான் நடந்து கொள்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்புவதற்கு இச்சம்பவத்தை பயன்படுத்த இடமுண்டு.
தமிழ், முஸ்லிம் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சில தீய சக்திகள்கூட இந்த சம்பவத்தை செய்திருக்கலாம்.
இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் யார் என்பதனை பல்கலைக்கழக நிர்வாகம் தேடிப் பகிரங்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறிய எண்ணிக்கையிலான முஸ்லிம் மாணவர்கள் படிக்கும்போது பொது மண்டபத்திலுள்ள அறையொன்று தொழுகை அறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது யாழ். பல்கலைக்கழகத்தில் சுமார் 650 முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலுகின்றார்கள். அவர்களுக்கு தம் தொழுகையை நிறைவேற்ற வசதியான ஒரு இடத்தை ஒதுக்கித் தருமாறு யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றது.
இப்போதுள்ள தொழுகை அறையில் ஆண்கள் தொழுகையை முடித்த பின் பெண்கள் தொழுவதற்கு காத்து நிற்க வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
தெற்கிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்த வசதி முஸ்லிம் மாணவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று யாழ். பல்கலைக்கழகத்திலும் தொழுகைக்கான வசதியை செய்து கொடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழுகை அறைக்கு பாதுகாப்பான ஓர் இடத்தை ஒதுக்கிக் கொடுப்பதன் மூலம் அடிக்கடி இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகுவதனை தவிர்க்க முடியும்.
சில விஷமிகளின் செயற்பாடு முழு தமிழ் – முஸ்லிம் மாணவர்களது ஒற்றுமையை சீர்குலைக்க இடமுண்டாகையால் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விடயத்தில் தாராளத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *