Breaking
Sun. Apr 28th, 2024

– சுஐப் எம்.காஸிம் –

மாநாடுகளைக் கூட்டி, மக்களைக் காட்டி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு ஒரு போதும் கிடையாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மூதூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
தேர்தலுக்கு முதல் ஒரு கதையும், தேர்தலுக்குப் பின்னர் மற்றொரு கதையும் கூறுபவர்கள் நாங்கள் அல்ல. திருமலை மாவட்டத்தில், தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குகளை நிறைவேற்றித் தருவோம்.

மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தின் ஓர் இக்கட்டான காலத்திலேயே ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தார். அந்தக் கட்சி அன்று தோற்றுவிக்கப்படாது இருந்தால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக் கலாசாரத்துக்குள் தம்மை ஈடுபடுத்தியிருப்பர். அவர் கட்சியை வளர்த்து முஸ்லிம் சமூகத்துக்கு பலா பலன்களைப் பெற்றுத் தந்தார்.

ஜனாதிபதி பிரேமதாசவையும், ஜனாதிபதி சந்திரிக்காவையும் ஆட்சிக் கதிரையில் அமர்த்தினர். அதே போன்று 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா தலைமையிலான, பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாங்கம் உருவாகுவதற்கு மர்ஹூம் அஷ்ரப் அவர்களே கிங் மேக்கராக இருந்தவர். முஸ்லிம் சமூகத்தை தீர்மானிக்கும் சக்தியாக, பலம் பொருந்திய சமூகமாக மாற்றுவதற்கு மர்ஹூம் அஷ்ரப்பின் அணுகுமுறைகளே காரணம்.

ஆனால், அஷ்ரப்பின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் முஸ்லிம் சமூகத்தை சரியாக வழி நடத்தவில்லை. மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்கள் இரண்டிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்த வேட்பாளர்கள் தோல்வியுற்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் முடிவெடுக்க முடியாது தடுமாறிய அவர்கள், தபால் வாக்களிப்பின் போது மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் என்று அறிவித்தனர்.

முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டதனால் அவர்கள் வேறு வழி தெரியாது மைத்திரிக்கு வாக்களிக்க தீர்மானித்தனர். மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் எனக் கூறுவதற்கு ஒரு கட்சி தேவையா? அதற்கென ஒரு தலைமையும், தலைமைக்குத் துதி பாட ஓர் உயர்பீடமும், உயர்பீடத்திற்கு வக்காலத்து வாங்க இன்னுமோர் அரசியல் பீடமும் தேவைதானா? மக்களே சிந்தியுங்கள்.
எமது கட்சியைப் பொறுத்தவரையில், நாம் சரியான தருணத்தில் சிந்தித்து எடுத்த முடிவினால் ஆட்சியை ஆட்டங்கானச் செய்து மகிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம்.

எமது கட்சியைப் பொறுத்தவரையில் நேரத்தையும், பணத்தையும் வீண் விரயமாக்கி, எங்களுக்குப் பின்னால்தான் சமூகம் இருக்கின்றது என்று பம்மாத்துக் காட்ட வேண்டிய தேவை இல்லை. ஜனாதிபதியையும், பிரதமரையும் மேடையில் வைத்துக்கொண்டு உட்கட்சிப் பூசல்களையும், வீரப்பிரதாபங்களையும் கதைப்பதால் மக்களுக்கு என்ன பிரயோசனம்?

வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அநேகம் இருக்கின்றன. ஒலுவில் துறைமுகம் அமைப்பதற்காக நமது மக்களிடம் பெற்ற காணிச் சுவீகரிப்புக்கு இன்னும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. சுமார் ௦6 வருடங்களாக சவூதி அரசாங்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் இன்னுமே மூடிக்கிடக்கின்றன. சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேச சபை அமைத்துத் தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னுமே நிறைவேற்றப்படவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள், அநாதைகள், குழைந்தைகளின் நிலை பரிதாப நிலையில் உள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்துக்கோ, பராமரிப்புக்கோ முறையான திட்டங்களோ, உருப்படியான முயற்சிகளோ எடுக்கப்படாத நிலையில், மக்களை மீண்டும் மீண்டும் கூட்டம் போட்டு ஏமாற்றும் முயற்சியே தொடர்கின்றது.

கல்வியிலே பின்தங்கியிருக்கும் முஸ்லிம் சமூகத்தை தூக்கி நிமிர்த்துவதற்கு, எந்த உருப்படியான திட்டங்களும் இன்னுமே வகுக்கப்படாத நிலையில், வார்த்தை ஜாலங்களால் மட்டும் அரசியலை நடத்த முடியுமென எண்ணுவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

திருமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்தால் இந்த மக்கள் பெற்ற வேதனைகளை நானறிவேன். குறிப்பாக மூதூர், தோப்பூர் மக்கள் யுத்தத்தின் கோறப்பிடிக்குள் சிக்கி, அந்த இடங்களை விட்டு வெளியேறி வந்ததை நான் கண்ணாரக் கண்டவன். இந்த வேதனைகளை நானும் அனுபவித்ததனால் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த நான், இந்த மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்துள்ளேன்.

மூதூர் மக்கள் இன்னுமே அரசியல் ஏமாளிகளாக இருக்கக் கூடாது. தேர்தல் காலங்களில் மட்டும் வந்து உணர்ச்சியூட்டும் பாடல்களை ஒலிபரப்பி, உங்கள் வாக்குகளை வசீகரிப்பவர்களின் மாயையில் நீங்கள் சிக்கக் கூடாது. என்னை சந்தித்த மூதூர் மகளின் பிரதிநிதிகள், இந்த பிரதேச மக்களின் குறைபாடுகளை எடுத்துரைத்தனர். மூதூர் தளவைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையால், நோயாளர்கள் திருகோணமலைக்குச் செல்ல வேண்டியிருக்கும் அவலத்தை எடுத்துக் கூறினார்கள். மயக்கமருந்து கொடுக்கும் வைத்தியர் இல்லாததால், தற்போது அங்கு பணி புரியும் மகப்பேற்று மருத்துவரும் இடமாற்றம் பெற விரும்புகிறார் என்ற ஒரு துர்ப்பாக்கியமான செய்தியை எம்மிடம் கூறினர்.

கிழக்கிலே உள்ள பல கிராமங்களில் உள்ள மக்கள் ஒற்றுமையுடனும், தீர்க்கதரிசனத்துடனும் மேற்கொண்ட முடிவுகலால்தான், அந்தப் பிரதேசம் இன்று அபிவிருத்திப் பெற்றுள்ளது. அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் மேற்கொண்ட காலோசிதமான முடிவு, மக்கள் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தைத் தந்தது. மூதூர் மக்களும் எதிர்வரும் காலங்களில் தமது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளாத வரை அவர்களுக்கு விடிவு கிட்டப் போவதில்லை என அமைச்சர் கூறினார்.

ri6.jpg2_6

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *