Breaking
Mon. May 20th, 2024

நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கபட வேண்டும். நாட்டில் பிற பகுதிகளில் 6 ஆயிரம்  பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது நுவரேலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது மலையக தமிழருக்கு கடந்த 28 வருடங்களாக இழைக்கப்பட்டுள்ள  ஜனநாயக மறுப்பு அநீதி. இது எனது அமைச்சு பொறுப்பில் உள்ள தேசிய சகவாழ்வு விடயத்துக்கு முரணானது. எனவே இந்த  மிக நீண்ட கால அநீதி இப்போதாவது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன்  உள்ளூராட்சி தேர்தல் எல்லை சீர்த்திருத்த அமைச்சரவை உபகுழுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு  கூறியதாவது,

இந்த முக்கியமான விவகாரம் தொடர்பில் ஏற்கனவே ஒரு கருத்தொருமைப்பாடு இருக்கின்றது. எனவே உள்ளூராட்சி தேர்தல் எல்லை சீர்த்திருத்த அமைச்சரவை உபகுழு, நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களையும், மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடி, புதிய பிரதேச சபைகளை நுவரெலியா மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். இது எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அடுத்த உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னர் நடைபெற வேண்டும்.

எனது இந்த கோரிக்கையை,  உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் உள்ளூராட்சி தேர்தல் எல்லை சீர்த்திருத்த அமைச்சரவை உபகுழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் வெகு விரைவில் நமது அமைச்சரவை உபகுழுவை சந்திக்கும் முகமாக, நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், நுவரேலியா மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த  மிக நீண்ட கால அநீதி நிவர்த்திக்கப்பட வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடாகும். இது தொடர்பான முடிவு கூட்டணியின் கடந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அடுத்த உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னர் செய்து முடிக்கப்பட வேண்டிய இந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோருகிறேன்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *