Breaking
Sat. May 11th, 2024

 

இந்த நாட்டில் இருக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து உரிய நேரத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்குமாக இருந்தால் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு தேவைப்பாடு கிடையாது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழிலாளர்களுக்கு உபகரணம் வழங்கு நிகழ்வு கல்வி அபிவிருத்தி சங்க கட்டடத்தில் பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எல்.ஏ.லத்தீப் தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

கிழக்கு மாகாண சபை உரிய காலத்தில் கலைக்கப்படாமல் இருந்தால் கற்ற சமூகங்கள் நீதிமன்றம் வரை செல்ல வேண்டி ஏற்படும். அவ்வாறு நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்பட்டால் இந்த அரசாங்கம் பாரிய அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கும். நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்ற பொழுது இலக்கு சாதகமாக பாதகமாக செய்யப்படுகின்ற வேளையில் மக்கள் தீர்ப்புக்கு போக வேண்டும் என்று சொன்னால் இந்த அரசாங்கத்தினுடைய நிலைமை கஸ்டத்திற்கு ஆட்படுகின்ற நிலைமையாக போய்விடும்.

இந்த விடயத்தை தெரியாத அரசியல்வாதிகள் தான் இதனை நீட்டுவோம், பெருக்குவோம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கணக்கெல்லாம் இனி செய்ய முடியாது. ஜனநாயக அரசியல் அமைப்பிலே நல்லாட்சி அரசாங்கத்திலே அப்படி தாங்கள் நினைப்பது போல் பதவிக் காலத்தை நீட்டிக் கொடுப்பதற்கும், பெருக்கிக் கொடுப்பதற்கும் பாராளுமன்றத்தில் இருப்பவர் எல்லோரும் கோமாளிகளாக, ஏமாளிகளாக இல்லை.

இந்த நாட்டின் சட்டதிட்டங்களை தெரிந்து கொண்டவர்களாக, இதன் மூலம் வரவிருக்கின்ற எதிர்ப்புக்கள் பற்றி துள்ளியமாக அறிந்து கொண்டர்களாக பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் நுழைந்ததால் தான் அலிசாஹீர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக வந்தார் என முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக் கூட்டத்தில் ஒருவர் கூறயிருந்தார்.

என்னுடைய அரசியல் பார்வையிலே அவ்வாறு இல்லை அலிசாஹீர் மௌலானா ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் நுழைந்ததால் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொண்டுள்ளது.

ஒரு அரசியல் தலைவரை விமர்சனம் செய்கின்ற பொழுது கௌரவமாக சுட்டிக்காட்டுகின்ற பன்பை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனிப்பட்ட முறையிலே பெற்றுக் கொண்ட ஆசனம் அலிசாஹீர் மௌலானா. அந்த ஆத்மா வரவில்லை என்று சொன்னால் மட்டக்களப்பு மாவட்டத்திலே வெற்றி பெற்றிருக்க முடியாது. அரசியல் பேசுபவர்களை விட வாக்காளர்களே அரசியலில் பெரிய புத்திசாலிகள்.

எதிர்வருகின்ற காலகட்டம் சாதக பாதக சர்ச்சைகள், பிரச்சனைகள் நிரம்பியதாக இருக்கும். தற்போது பேசப்படுகின்ற சமகால விடயங்கள். மூன்று மாகாண சபை தேர்தல்களும் ஒரே தடவையில் நடாத்தப்பட வேண்டும் என்று விரும்பினால் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வெற்றி கொள்ள வேண்டும்.

சிலவேளைகளில் நீதிமன்றம் சென்றால் அதற்கு பொருள்கோடல்கள் செய்யப்பட்டால் அந்த இடத்தில் மக்கள் தீர்ப்பு கிடைக்குமாக இருந்தால் இந்த நாட்டிலே அரசியல் தற்கொலைக்கு ஒப்பான செயலாக அமையும்.

இருபதாவது சட்ட திருத்தம் ஒன்று வர வேண்டும். மாகாணங்களுடைய காலங்களை நீடிப்பது, அதிகாரங்களை மத்திய அரசிடத்திலே கொடுப்பது என்ற பிரச்சனைகள் வருமாக இருந்தால் இருபதாவது அரசியல் அமைப்பு மாற்றம் திருத்தம் கொண்டு வந்தேயாக வேண்டும்.

அவ்வாறு கொண்டு வந்தால் கிழக்கு மாகாணத்திற்குரிய அதிகாரங்களை அல்லது மாகாணத்திற்குரிய நிகழ்ச்சி நிரல்களை மத்திய அரசாங்கத்தில் கையிலே ஏன் ஒப்படைக்க வேண்டும் என்கின்ற பிரச்சனை எங்களுடைய அதிகாரங்களை ஏன் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்கின்ற கேள்வி எழுகின்றது.

இந்த கேள்விக்கு பதில்தான் இந்த நாட்டில் இருக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து உரிய நேரத்தில் தேர்தல் நடாத்துவதற்கு செயற்படுவார்களாக இருந்தால் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு தேவைப்பாடு கிடையாது.

தமிழ் தரப்பு 13வது அதிகாரம் எங்களுக்குள் இருந்து மத்திய அரசாங்கத்திற்கு போகக் கூடாது என்று சொல்வது உண்மையாக இருந்தால் மாகாண சபையை நீட்டுவதற்கு எதிர்ப்பை காட்டுவார்கள் என்றால் 20வது தேர்தல் திருத்தம் பாராளுமன்றத்தில் வரவேண்டிய தேவைப்பாடு கிடையாது.

தமிழ் தரப்பினர் என்ன செய்து விடுவார்களோ என்கின்ற பிரச்சனை அல்லது அதிகாரத்தை அவர்களிடத்தில் கொடுத்து விட்டு மீண்டும் எங்களுடைய அதிகாரம் பறித்து விட்டு போனது என்ற காரண காவியத்தை கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காக சில ஊடகங்களில் எழுதப்படுகின்றது.

எனவே எங்களை விட சம்பந்தன் ஐயா ஒரு சிரேஸ்ட அரசியல்வாதி அவர் மிகவும் தீர்க்கமாக முடிவை எடுக்கக் கூடியவர். எமது நாட்டில் 20வது திருத்தத்திற்குரிய தேவைப்பாடு கிடையாது என்று நான் நினைக்கின்றேன். உரிய காலத்தில் மாகாண சபை தேர்தல் வரும் என்றால் தேவைப்படாது.

தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சனையை காவியுடை தரித்த ஒருவர் நீதிபதியாக வந்து தீர்ப்பு சொல்லுகின்ற ஒரு சங்கடமான நிலைமைக்கு தள்ளப்பட்ட சமூகமாக மாறியுள்ளோம்.

காணிப் பிரச்சனை தமிழருக்கும், முஸ்லிமுக்கும் இருக்கின்றது. இவ்வாறு பிரச்சகைள் இருக்கின்ற பொழுது அதற்குரிய தலைவர்கள் இருக்கின்றார்கள். அதனை எங்களால் செய்து வைக்க முடியும்.

காவி உடை தரித்தவர்கள் வந்து இந்த மாவட்டத்திலே இனமுறுகளை வேறு ஒரு பாதையில் மாற்றிக் கொள்ளுகின்ற போது தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் எந்த விடயத்திலும் அனுமதிக்க மாட்டார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் தான் முரண்பாடுகள் ஏற்படும். அதன்பிற்பாடு வருகின்ற காலங்களில் நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு வேலைகள் செய்து வருகின்றோம்.

எல்லா விடயங்களுக்கும் அப்பால் நின்று ஒரு காவியுடை தரித்தவர் நின்று இரண்டு சமூக பிரச்சனையை தீர்த்து தருகின்ற நீதிபதியாக இருப்பது இரண்டு சமூகத்திற்கும் இடையிலான ஒரு நல்ல சமீஞ்சை அல்ல.

இதனை திட்டமிட்டு இரண்டு சமூகங்களுக்குமிடையில் ஏதோ செய்யப் பார்க்கின்றார்கள். இரண்டு சமூகங்களுக்குமிடையில் மூட்டி விடப்படுகின்ற ஆரம்ப வேலையை பார்க்கின்றார்கள். இதனை கொண்டு அத்திவாரம் இட்டுள்ளார் என்றார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சமூக சேவை அமைப்புக்கு எழுபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான கணனி உபகரணம், மூன்று விளையாட்டு கழகங்களுக்கு ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள், பாலர் பாடசாலைக்கு மூப்பதாயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள், முப்பத்தி இரண்டு ஓடாவிமார்களுக்கு ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *