Breaking
Tue. May 21st, 2024
வடமாகாணத்திற்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ,ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகமான முஸ்லிம்களின் பிரதிநிதிகளையோ, அமைப்புக்களையோ சந்திப்பதில் எத்தகைய கரிசனையும்  காட்டுவதில்லையெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விசனம் தெரிவித்தார். 
இலங்கைக்கான ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதி உனா மெக்லோலே அவர்களுக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைத் தீர்வில் அக்கறை காட்டும் ஐ.நா பிரதிநிதிகள,; இந்த நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் கவனத்திற்கொண்டு தமது நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
அத்துடன் யுத்தத்தின் விளைவுகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம் சமூகம் இன்னும் தமது பாரம்பரிய இடங்களில் மீளக்குடியேறுவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். காணிப்பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை மற்றும் இன்னோரன்ன அடிப்படை வசதிகள் இல்லாததால் அந்த மக்களின் குடியேற்றம் கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. இவர்களின் மீள்குடியேற்றத்திற்கு எவரும் இதயசுத்தியுடன் உதவுவதாக தெரியவில்லை.
வடமாகாண சபை வெறுமனே ஒரு சமூகத்தை மட்டும் மையமாக கொண்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதை கைவிட்டு அனைத்து சமூகங்களின் பிரச்சினைகளையும் கவனத்திற் கொண்டு செயற்படவேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் அந்த மாகாண சபை இற்றைவரை கரிசனை காட்டியதாகத் தெரியவில்லை. வடக்கிலே தமிழ்த் தலைவர்களை ஐ.நா அதிகாரிகள் சந்திக்கும் போது அவர்களிடம் எமது மனக்குறைகளை எடுத்துரைக்க வேண்டும்.  முஸ்லிம் சமூகத்தையும் மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் நோக்கி பாரபட்சமின்றி அந்தச் சமூகத்திற்கு உதவுமாறு ஐ.நா அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும். என்று அமைச்சர் ரிஷாட், தன்னைச் சந்தித்த ஐ.நா நிரந்தர வதிவிடப்பிரதிநிதியிடம் எடுத்துரைத்தார்.
தற்போதைய அரசாங்கம் தேர்தல் முறை மாற்றம்அரசியலமைப்புச் சீர்த்திருத்தம், ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல் ஆகியவை தொடர்பில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இதுவரை காலமும் நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறையினால் முஸ்லிம் சமூகம் உட்பட அனைத்து சமூகங்களும் நன்மைகளையே பெற்றுவருகின்றன.
அது மட்டுமன்றி,  சிறுபான்மைக் கட்சிகள், சிறுகட்சிகள், புத்திஜீவிகள் ஆகியோரும்  இந்த தேர்தல் முறையின் பலாபலன்களை அனுபவிக்கின்றனர். எம்மைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தல் முறை மிகவும் சிறப்பானதென்றே நாம் கருதுகின்றோம். எனினும் இந்த முறையை மாற்றி புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றது.
காலசூழ்நிலைகளுக்கு ஏற்ப, இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை அரசுக்கு இருந்த போதும், அதற்கு அப்பால்; அனைத்து சமூகங்களின் அபிலாஷைகளையும் திருப்திப்படுத்தக்கூடிய, கடமையும் பொறுப்பும் அரசுக்கு இருக்கின்றது. குறிப்பாக சிறுபான்மை, சிறுகட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் புதிய தேர்தல் முறை மாற்றம் அமையவேண்டும். அதே போன்று எந்தவொரு சமூகத்தின் நலன்களுக்கு குந்தகம் ஏற்படுத்தாதவகையிலான அரசியலமைப்பு மாற்றத்தின் மூலமே நிரந்தரமான சமாதானத்தை மேற்கொள்ளமுடியும். புதிய மாற்றங்கள் அனைத்துச் சமூகங்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதே எமது கட்சியான மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடாகும். இந்த விடயங்களை நாங்கள் பல தடவை நாட்டுத் தலைவர்களுக்கு வலியுறுத்தியிருக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சரின் ஆலோசகர் ஹிமாலி ஜினதாஸ, அமைச்சரின் இணைப்பாளர் நளீம் ஆகியோரும் பங்கேற்றனர்.  

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *