Breaking
Fri. Nov 1st, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பின்  ஒரு வருட பூர்த்தியை தேசிய அரசாங்கமானது நாளை மறுதினம் கொண்டாடவுள்ள நிலையில் நாளைய தினம் மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய ஒன்றினைந்த சிவில் அமைப்புக்கள்   நல்லாட்சியை மலரச் செய்வதற்காக மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து  பயணிக்குமாறு வலியுறுத்தி  மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை கொழும்பில் முன்னெடுக்கவுள்ளது.

மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படுகின்றமை, ஊழல் வாதிகளுக்கு எதிராக அரசின் மந்தமான விசாரனைகள், தனிப்பட்ட கட்சிகளின்  தேவைகளுக்கு ஜனநாயக தேர்தல்களை பிற்போடுகின்றமை உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் மூவின மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தி மக்களின் ஆணைக்கு மதிபளித்து நல்லாட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியே மேற்படி ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நாளைய தினம் நுகேகொடையில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து கொஹுவல மலர் சந்தியில்  கூட்டமும் நடத்தப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கடந்த வருடம் நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு துணைபுரிந்த கட்சியின் பிரதிநிதிகள், கலைஞர்கள், பேராசிரியர் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளனர்;.

நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் கேசரிக்கு கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின்  செயலாளர் டில்வின் சில்வா

கடந்த வருடம் ஜனவரி 08 ஆம் திகதி எமது நாட்டின் மூவின சமூகங்களும் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்து அந்த அடிபடையில் நல்லாட்சியை மலரச் செய்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்தனர்.  ஆனால் இன்று நல்லாட்சியை மலரச் செய்வதற்காக மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையிலேயே   தேசிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள்  அமைந்துள்ளன.

எனவே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பின்   ஒரு வருட பூர்த்தியை தேசிய அரசாங்கமானது நாளை மறுதினம் கொண்டாடவுள்ள நிலையில் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து நல்லாட்சியை நோக்கி பயணிக்குமாறு அரசை வலியுறுத்தும் முகமாக ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளோம், இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் சில மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் நாளைய தினம் நல்லாட்சியை ஸ்தாபிப்பதற்கு உறுதுனையாக இருந்த கட்சிகள் உட்பட சில சிவில் அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்கவுள்ளன.

குடும்ப ஆதிக்கத்தைப் பலப்படுத்தவோ, அரசியல் நியமனங்களை வழங்கவோ, ஊழல் மோசடியாளர்களை பாதுகாக்கவோ மக்கள் நல்லாட்சியை ஸ்தாபிப்பதற்கான தனது ஆணையை கடந்த ஜனவரி மாதம் 8  ஆம் திகதி  வழங்க வில்லை. நாட்டில் நிலவிய மோசமான குடும்ப ஆட்சியை இல்லாதொழித்து புதியதொரு அரசியல் கலாசாரத்தின் அடிப்படையில் மூவின மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் எமது நாட்டை சிறந்ததொரு பொருளாதார நிலையில்  கொண்டு  செல்லவுமே மூவின மக்களும் ஒன்று சேர்ந்து நல்லாட்சிக்கான தனது ஆணையினை வழங்கினர்.

இவற்றை புரிந்தா நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கபடுகின்றன?  என்பதில் இன்று பாரிய சந்தேகம் நிலவுகின்றது. இந்த அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள் மக்கள் ஆணைக்கு புறம்பானதாவே அமைந்து வருகின்றன. இவ்வாறான நிலையிலேயே நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையை நினைவுப்படுத்தும் வகையிலும் மக்களின் ஆணைக்கு ஏற்றவாறு தமது நல்லாட்சி பயணத்தை முன்னெடுக்க கோரியுமே இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கபடுகின்றது தொடர்ந்து நல்லாட்சியினை விரும்பும் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுகின்றோம் என்றார்.

By

Related Post