Breaking
Tue. May 7th, 2024

-சுஐப் எம்.காசிம் –

அம்பாறை மாவட்ட நெசவுத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் உயர்மட்டக்குழு ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று மாலை (21) நியமித்தார்.

அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் அமபாறை நெசவுத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து விளக்கியதன் பிரதிபலனாக நேற்று மாலை நிதியமைச்சர ரவி கருணாநாயக்க தனது அமைச்சுக் கட்டிடத்தொகுதியில் அமைச்சர்கள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகள் மற்றும் நெசவுத்தொழிலாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் வகையில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நெசவுத்தொழிலாளர்கள் படுகின்ற கஷ்டங்களை விபரித்தனர்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக அம்பாறையில் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருவோர் தற்போது மிகுந்த கஷ்டங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தொழிலில் ஏற்படுத்தப்படும் தடைகள், முட்டுக்கட்டைகளால் பலர் வேறு தொழிலை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று இந்தத் தொழிலையே நம்பி வாழும் சிலர் வறுமைக்கோட்டின் கீழே வாழ்கின்றனர்.

இந்தியாவிலிருந்து கைத்தறிகளை சில வியாபாரிகள் இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு புடவைகளை வழங்குவதால் இலங்கை மக்கள் உள்ளூர் உற்பத்தியை வாங்குவதில் நாட்டங்காட்டுவதில்லை. அத்துடன் இந்தத் தொழிலில் ஈடுபடுவோருக்கு எத்தகைய வசதிகளும் வழங்கப்படுவதில்லை. இதனால் பாரம்பரியக் கைத்தொழிலான கைத்தறி நெசவுத் தொழில் அருகி வருகின்றது. இளைய சந்ததிக்கு இந்தத் தொழிலில் ஆர்வம் குறைந்துவிட்டது. இதனை நன்முறையில் விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்தத் தொழிலில் ஈடுபடுவோர் நன்மை அடைவதுடன் பாபரம்பரியத் தொழிலையும் பாதுகாக்க முடியும் என்றும் அமைச்சர் றிசாத் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது இறக்குமதிக்கான செஸ் வரியை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவில் இருந்து புடவையை இறக்குமதி செய்வோரின் நாட்டத்தைக் குறைக்க முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இவற்றை கேட்டறிந்த பின்னரே நிதியமைச்சர் ரவி இது தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமித்தார்.

இந்தக் குழுவில் அங்கம் வகிக்கவென கைத்தொழில், வர்த்தக அமைச்சின் மேலதிகச் செயலாளர் தாஜுதீன், புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் ஹர்ஷ, தேசிய வடிவமைப்புச் சபைத் தலைவர், சட்டத்தரணி மில்ஹான், லக்சல பணிப்பாளர் நாயகம் அலி அஹ்லம் ஆகியோரைத் தாம் சிபாரிசு செய்வதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு அறிவித்தார்.

 

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *