Breaking
Fri. May 3rd, 2024

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :

“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்குர்ஆன் 2:183)

“(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)”. (அல்குர்ஆன் 2:184)

“நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள்.”  (ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி)

“ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான்.”  (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்)

“எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்.” (அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.

அல்லாஹ்வும், தூதரும் நோன்பாளிக்கு வழங்கி உள்ள சலுகைக்கான ஆதாரங்களை பார்ப்போம்.
எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை கலாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கலாச் செய்யுமாறு கட்டளை இடமாட்டார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறினார்கள். நூல் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத்

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க கூடியவர்களாக இருந்தார்கள் அவரது மரணத்திற்கு பின் அவரது மனைவிகள் அந்நாட்களில் இஃதிகாஃப் இருப்பதை தொடர்ந்து நிறைவேற்றினர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவுத், முஸ்லிம்

ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்

1. நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ?
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான் அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான் எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள் இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும் அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள் இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 2:187

2. ஊசி போடலாமா ?
உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.

3. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ? தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா?
எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : அஹமத், அபூதாவுத்

4. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா?
நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும். (அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

5. நோன்பு எதை கொண்டு திறப்பது ?
நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *