Breaking
Fri. May 17th, 2024

-நாச்சியாதீவு பர்வீன் –

புதிதாக சிந்தித்து பால் உற்பத்தியை பெருக்க வழி செய்ய வேண்டும். நாம் இன்னும் நமது மூதாதையர்கள் நமக்கு காட்டித்தந்த வழியில் தான் பால் உற்பத்தியை மேற்கொள்கிறோம். அதனால் நமது உற்பத்தியில் முன்னேற்றம் இல்லை. அத்தோடு நமது தொழிலிலும் அபிவிருத்தி இல்லை மாறாக, புதிய வகையில் சிந்தனை செய்து பால் உற்பத்தியை பெருக்கும் வழிவகைகளை பாற்பண்ணையாளர்கள் கண்டறிய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ் அமீர் அலி தெரிவித்தார். வெள்ளாவெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள 40 கிராம மக்களின் நலன் கருதி பால் பதனிடும் நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர்.

இந்த பிரதேச பால் உற்பத்தியாளர்களின் நன்மை கருதி,உங்களின் மேலதிக சிரமத்தை கருத்திற் கொண்டே இந்த பால் பதனிடும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. உங்கள் வாழ்க்கையை எப்போதும் இதே தரத்தில் வைத்துக்கொள்ளுவதா அல்லது அதில் மாற்றத்தை கொண்டுவருவதா என்பது பற்றி நீங்கள் தான் சிந்திக்க வேண்டும். எமது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு உங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அர்ப்பணிப்புடன் செயல்படவும்,உங்கள் முன்னேற்றத்திற்காக உதவவும் தயாராகவே இருக்கிறது. எங்களை பயன்படுத்துவதில் நீங்கள் முன்நிற்க வேண்டும். வெளிநாடுகளில் அதிக வருமானம் பெரும் தொழிலாக பால் உற்பத்தி திகழ்கின்றது. இங்கும் அந்த நிலை வரவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.

பால் பண்ணையார்கள் தொடர்பில் நவீன தொழில்நுட்பத்தினையும்,அதுபற்றிய பயிற்சியினையும் எமது அமைச்சு எதிர்காலத்தில் வழங்க இருக்கிறது. அதிகளவிலான பாலினை தரக்கூடிய கறவை மாடுகளை வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்து, பால் உற்பத்தி தொழிலில் ஆர்வத்துடன் செயல் படுகின்ற பண்ணையாளர்களுக்கு வழங்கும் திட்டமும் இருக்கிறது. இங்குள்ள பாற்பண்ணையாளர்கள் முன்வைக்கின்ற பிரதான பிரச்சினை மாடுகளுக்கான மேச்சல் தரை இல்லை என்பதாகும். வெளி நாடுகளிலும் ஏன் இப்போது இலங்கையிலும் கூட சில பகுதிகளிலே மிகக்குறைந்த நிலப்பரப்பிலே மாடு,ஆடு வளர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டுள்ளது. எனவே வழமையான மாடு வளர்ப்பு முறையில் இருந்து நாம் மாற வேண்டும். மாடுகளுக்கான பாலினை சுரக்க வைக்கின்ற தீவனத்தை நாம் வழங்க வேண்டும். மேச்சல் தரைகளுக்காக நமக்கு சொந்தமான வயல் நிலங்களிலே புற்களை வளர்க்கின்ற முயற்சியில் நாம் இறங்க வேண்டும், வெளிநாடுகளில் அதிகளவில் பாலினை எவ்வாறு பெற்றுக் கொள்கிறார்கள் என்கின்ற பொறிமுறையினை அடையாளம் கண்டு அதனை இங்கு முயற்சி செய்ய வேண்டும். இதனை எமது அமைச்சு எதிர்காலத்தில் செயற்படுத்தும் முயற்சியிலேயே இறங்கியுள்ளது. இதன்மூலம் திறமையும்,முயற்சியும் உள்ள பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.

பால் உற்பத்தியாளர்களின் சங்கம் இந்தவிடயங்களை கருத்தில் கொண்டு சங்க அங்கத்தவர்களுக்கான,ஆலோசனைகளை அவ்வப்போது வழங்குவதோடு,அவர்களுக்கான நலத்திட்டங்களை முன்மொழிய வேண்டும். பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை ஆர்வத்துடன் செய்யவேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவி செய்ய வேண்டும். என அவர் கூறினார். இதன்போது பால் உற்பத்தியாளர்கள் சிலருக்கான ஊக்குவிப்பு நிதியுதவி பிரதியமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர் திரு கே. கணகராஜா , களுவாஞ்சிக்குடி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. சம்பந் , கால்நடை வைத்திய அதிகாரி துசியேந்தன் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜனாப் கலீல், திரு கண்ணன், பிரதியமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.எஸ்.எம்.றிஸ்மின் மற்றும் பிரதேசத்து பால் பண்ணையார்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *