Breaking
Fri. May 3rd, 2024

மன்னார் மாவட்­டத்தின் முசலி பிர­தேச செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில், புத்­தளம் மாவட்­டத்தின் எல்­லைப்­பு­றத்தில் அமைந்­துள்ள ஒரு குறிப்­பிட்ட பகுதி, மறிச்­சுக்­கட்­டியா அல்­லது வில்­பத்­துவா என்று தெளி­வாகத் தெரி­யாமல், தென்­ப­கு­தியில் உள்ள சில பௌத்த தீவி­ர­வா­தி­களும், அவர்களின் ஆத­ர­வா­ளர்­க­ளு­மா­கிய சுற்றுச் சூழ­லி­ய­லா­ளர்­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அந்தப் பிர­தேசம் மறிச்­சுக்­கட்­டி­தானா அல்லது வில்­பத்­து­தானா என்று உண்­மை­யி­லேயே தெரி­யா­மல்தான் அவர்கள் தீவி­ர­மான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று கூற முடி­யாமல் இருக்­கின்­றது. ஏனெனில், அந்தப் பிர­தே­சத்­திற்குத் தாங்கள் சென்று நேரில் பார்த்து உண்­மை­யான நிலை­மை­களை அறிந்­தி­ருப்­ப­தாக அவர்கள் அடித்துக் கூறி­யி­ருக்­கின்­றார்கள்.

அவர்கள் கண்­ட­றிந்­துள்ள உண்­மை­யின்­படி, நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் குடும்­பங்கள் புத்­தளம் பிர­தே­சத்தில் இருந்து வில்­பத்து வனப்­ப­கு­திக்குச் சென்று அங்கு காடு­களை அழித்து அந்த சர­ணா­ல­யத்­திற்கு கேடு விளை­விக்கும் வகையில் குடி­யே­றி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதும், அர­சாங்­கத்­தினால் குறித்­தொ­துக்­கப்­பட்­டுள்ள வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்குச் சொந்­த­மான வனப்­ப­கு­தியில், சட்ட விரோ­த­மாக வீடு­களை அமைத்­துள்­ள­துடன் கட்­ட­டங்­க­ளையும் கட்­டி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதும் தெரி­ய­வந்­தி­ருப்­ப­தாக அவர்கள் தெரி­வித்­தி­ருக்­கின்­றார்கள்.

இதனை, முஸ்லிம் குடும்­பங்­களின் நீதிக்குப் புறம்­பான நட­வ­டிக்­கைகள் என வர்­ணித்­துள்ள அவர்கள் இது தொடர்­பாக தென்­னி­லங்­கையில் உள்ள சிங்­களம் மற்றும் ஆங்­கில ஊட­கங்­க­ளுக்குத் தக­வல்கள் வழங்கி அதனைப் பெரும் பிர­சா­ர­மாக முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றார்கள். அர­சாங்­கத்தில் அமைச்­ச­ரவை அந்­தஸ்து பெற்றுத் திகழும் அமைச்­ச­ரா­கிய ரிஷாத் பதி­யுதீன் இத்­த­கைய சட்­ட­வி­ரோத – நீதி­வி­ரோதச் செயற்­பாட்­டுக்குப் பின்­ன­ணியில் இருந்து தனது பதவி அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்திச் செயற்­பட்­டி­ருக்­கின்றார் என்றும் அவர்கள் பகி­ரங்­க­மா­கவே குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றார்கள்.

யுத்தம் முடி­வ­டைந்து ஆறு வரு­டங்­க­ளா­கின்­றன. மூன்று நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் மறிச்­சுக்­கட்டி பிர­தேச மக்கள் தமது சொந்தக்­கா­ணி­க­ளுக்கு – சொந்த ஊர்­க­ளுக்குத் திரும்­பி­யி­ருந்­தார்கள். கடந்த 1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்த முஸ்லிம் மக்­களை விடு­த­லைப்­பு­லிகள் உட­ன­டி­யாக வெளி­யேற வேண்டும் என கடு­மை­யாக அறி­வு­றுத்தி அவர்­களை முழு­மை­யாக வெளி­யேற்­றி­யி­ருந்­தார்கள். அப்­போது, பெரும் எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் குடும்­பங்கள் புத்­தளம் மாவட்­டத்­திற்குச் சென்று, அங்கு பல இடங்­க­ளிலும் தஞ்­ச­மடைந்­தன. மத­வாச்சி, அனு­ரா­த­ர­புரம் போன்ற பிர­தே­சங்­க­ளிலும் கணி­ச­மான குடும்­பங்கள் அப்­போது புக­லிடம் தேடி­யி­ருந்­தன.

இரு­பது இரு­பத்­தி­ரெண்டு வரு­டங்­க­ளுக்குப் பின்னர் தமது சொந்தக் கிரா­மங்­க­ளா­கிய மறிச்­சுக்­கட்டி, பாலைக்­குழி, கர­டிக்­குழி, கொண்­டச்சி போன்ற கிரா­மங்­க­ளுக்கு, அந்த மக்கள் திரும்பி வந்­த­போது, தமது காணி­களை அவர்கள் காண­வில்லை. ஊர்கள் காடு­க­ளாகக் காட்சி தந்­தன. இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக ஆள­ர­வ­மற்­றி­ருந்த அந்தப் பிர­தேசம், பிர­தான வீதியில் இருந்து உள்ளே செல்ல முடி­யா­த­வாறு, காடாகிப் போயி­ருந்­தது. பற்­றை­களும் ஆளு­ய­ரத்­திற்கு மேல் வளர்ந்­தி­ருந்த காட்டு மரங்­க­ளு­மாக அது அடர்ந்­த­தொரு காடா­கவே காட்­சி­ய­ளித்­தது.

மிகவும் கஷ்­டப்­பட்டு தமது காணி­களின் எல்­லை­களைக் கண்­டு­பி­டித்து. காடு­களை அழித்து கொட்­டில்கள் அமைத்து அவர்கள் மீள்­கு­டி­யேறத் தொடங்­கி­னார்கள். அப்­போது மறிச்­சுக்­கட்டி கிரா­மத்தின் ஒரு பகு­தியில் பொது­மக்­க­ளி­னதும், கிரா­மத்தின் பொதுக் காணி­யிலும் பல ஏக்கர் பரப்­ப­ள­வான இடத்தைப் பிடித்து முகாம் அமைத்து நிலை­கொண்­டி­ருந்த கடற்­ப­டை­யினர், அந்­தப்­பி­ர­தேசம் தங்­க­ளுக்குச் சொந்­த­மா­னது, அங்கு வெளியார் எவரும் வர­மு­டி­யாது எனக் கூறி, மீள்­கு­டி­யே­று­வ­தற்­காக, முஸ்லிம் குடும்­பங்கள் அமைத்­தி­ருந்த குடி­சை­க­ளுக்குத் தீவைத்துச் சென்­றார்கள்.

தமது இடங்­க­ளுக்கு, பல வரு­டங்­க­ளுக்குப் பின்னர் திரு­ம்­பி­யி­ருந்த அந்த மக்­களின், சொந்த ஊருக்குத் திரும்­பி­யி­ருந்த மகிழ்ச்­சி­யையும் அந்தத் தீ சுட்டுப் பொசுக்­கி­யது. அதனால் தீச்­சு­வா­லையில் மீள முடி­யாமல் சிக்­கி­ய­வர்­களைப் போன்று அவர்­க­ளு­டைய உள்­ளங்கள் எரிந்து போயின. படை­யி­ன­ரு­டைய அந்த வன்­முறை அவர்­களைச் சுட்­டெ­ரித்­தது. அந்த வெப்­பமும், அந்தத் தீயினால் ஏற்­பட்ட தீப்புண் வேத­னையும் அவர்­களை வாட்டி வதைத்­தது. முதலில் என்ன செய்­வ­தென்று தெரி­யாமல் திகைத்து சோர்ந்த அவர்­களில் பலர், மீண்டும் புத்­த­ளத்­திற்கே ஓடிச் சென்­றார்கள். தலை­முறை தலை­மு­றை­யாக வாழ்ந்த தங்­க­ளு­டைய காணி­களை விட்டுச் செல்ல முடி­யாத நிலையில் ஆண்கள் மாத்­திரம் அங்­கேயே தங்­கி­யி­ருந்து, தமது உரி­மைக்­காகப் போரா­டி­னார்கள். படிப்­ப­டி­யாகப் பல குடும்­பங்கள் திரும்பி வந்­தன. அரச அதி­கா­ரி­களும் அந்த மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்குத் தேவை­யான உத­வி­களைச் செய்­தார்கள். அவற்­றுக்­கெல்லாம் அர­சியல் ரீதி­யான தலை­மையை வழங்கி அரச மட்­டத்தில் தேவை­யான நட­வ­டிக்­கை­களை அந்த மக்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­ நி­தியும் அமைச்­ச­ரு­மா­கிய ரிசாட் பதி­யுதீன் மேற்­கொண்­டி­ருந்தார்.
யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த அப்­போ­தைய அரசாங்கம் இறுதி யுத்த மோதல்­க­ளின்­போது சொந்த இடங்­களை விட்டு இடம்­பெ­யர்ந்து சென்ற குடும்­பங்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­தி­லேயே கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. லட்­சக்­க­ணக்­கான மக்கள் இடம்­பெ­யர்ந்து அப்­போது செட்­டி­குளம் முகாமில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். வச­தி­க­ளற்ற நிலையில் முட்­கம்பி வேலிக்குள் கடும் பாது­காப்­புக்­குள்ளே அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அவர்­களை சொந்தக் கிரா­மங்­களில் மீள்­கு­டி­யேற்ற வேண்டும் என்ற அழுத்தம் இதற்கு முக்­கிய கார­ண­மாக அமைந்­தி­ருந்­தது. அந்த அழுத்தம் கார­ண­மாக, அவர்­க­ளுக்­கான மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருந்­தது. இந்த மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு யு.எ.ன்­எச்.­சி.ஆர், ஐ.நா. உள்­ளிட்ட உலக அமைப்­புக்­களும், பல சர்­வ­தேச தொண்டு நிறு­வ­னங்­களும் இந்­தியா உள்­ளிட்ட நாடு­களும் உத­வி­களை வழங்­கி­யி­ருந்­தன.
ஆனால் இரு­பது வரு­டங்­க­ளுக்கு முன்னர் வட­ப­கு­தியில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் குடும்­பங்­களின் மீள்­கு­டி­யேற்றம் இதில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அதனால் அந்த மீள்­கு­டி­யேற்­றத்தின் உத­விகள், அரசாங்­கத்தின் சலு­கைகள் என்­பன தமது சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யே­று­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்த முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை. இதனால் அப்­போது மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக இருந்த அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீ­னி­னாலும் எத­னையும் செய்ய முடி­யா­தி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே இடம்­பெ­யர்ந்த வடக்கு முஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் என்­பது சிக்கல் நிறைந்­த­தா­கவும் தாம­த­முள்­ள­தா­கவும் மாறி­யி­ருந்­தது.
ஆயினும் முஸ்லிம் அமைச்சர் என்ற ரீதியில் முஸ்லிம் தொண்டு நிறு­வு­னங்­களின் உத­வி­க­ளையும் பாகிஸ்தான் தூத­ர­கத்தின் ஊடாக அந்த நாட்டு அர­சாங்­கத்தின் உத­வி­க­ளையும் பெற்று மீள்­கு­டி­யே­றிய குடும்­பங்­க­ளுக்­கான நிரந்­தர வீடுகள், பள்­ளி­வா­சல்கள் மற்றும் பொதுத் தேவைக்­கு­ரிய கட்­டி­டங்கள் என்­பன அமைக்­கப்­பட்­டன. இவ்­வாறு அமைக்­கப்­பட்­டுள்ள வீடு­களின் கூரை மீது அவற்றை அமைப்­ப­தற்கு நிதி­யு­தவி வழங்­கிய நிறு­வ­ன­மா­கிய ஜெசின் சிற்றி என்ற பெயர் பொறிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
இவ்­வாறு பெயர் பொறிக்­கப்­பட்டு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள வீடுகள் உள்­ளிட்ட, அந்தப் பிர­தே­சத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள அனைத்து வீடு­களும் மறிச்­சுக்­கட்டி, பாலைக்­குழி, கர­டிக்­குழி, கொண்­டச்சி போன்ற கிரா­மங்­க­ளி­லேயே அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
ஆனால் இந்தப் பிர­தே­சத்­திற்குச் சென்று அங்கு என்ன நடந்­தி­ருக்­கின்­றது என்­பதைப் பரி­சீ­லனை செய்­துள்ள சூழ­லி­ய­லாளர் (Head of the Biodiversity conservation Center pubudu Weeraratne) புபுது வீர­ரத்ன, தாங்கள் கண்­ட­றிந்­தவை தொடர்­பான அறிக்­கை­யொன்றை, சர்­வ­தேச சுற்றுச் சூழல் தினத்­தை­யொட்டி, ஜுன் மாதம் 5 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்­க­ளிடம் கைய­ளித்­துள்ளார். வில்­பத்து தொடர்­பாக விடுக்­கப்­பட்­டுள்ள கசற் அறி­வித்­தல்கள் எல்­லைகள் குறிக்­கப்­பட்­டுள்ள தேசப்­ப­டங்கள் என்­ப­வற்றின் அடிப்­ப­டையில் இந்த வீடுகள் கட்­ட­டங்கள் அனைத்தும், வனப்­ப­கு­தி­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பிர­தே­சத்தின் உள்­ளேயே அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 14 ஆம் திகதி வன­வி­லங்கு காணி ஒதுக்­கீட்டு திணைக்­க­ளத்­தினால் 1080 ஏக்கர் காணி­களில் குடி­யேற்றம் செய்­யலாம் என அனு­மதி வழங்­கி­யுள்ள போதிலும், அதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்­டி­லேயே இந்த வீடுகள் கட்­டடங்கள் என்­பன அந்தத் திணைக்­க­ளத்­திடம் அனு­மதி பெறா­ம­லேயே நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­விட்­டன என்றும் அந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
ஆனாலும், சுற்றுச் சூழ­லுக்கு ஏற்­படக் கூடிய பாதிப்­புகள் தொடர்பில் விரி­வான ஆய்வு நடத்­தாமல் வன­வி­லங்கு காணி ஒதுக்­கீட்டு திணைக்­களம் அத்­த­கைய அனு­மதி கடி­தத்தை வழங்க முடி­யாது என தெரி­வித்­துள்ள புபுது வீர­ரத்ன, இந்தத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளினால் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 1080 ஏக்கர் நிலப்­ப­ரப்­பையும் மீறி அதிக அள­வி­லான பிர­தே­சத்தில் குடி­யேற்­றங்கள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன என்று கூறி­யுள்ளார்.
மேற்குக் கரை­யோ­ரத்­தையும் உள்­ள­டக்­கி­யுள்ள இந்தக் குடி­யேற்­றங்கள், மீள்­கு­டி­யேற்­ற­மல்ல. இங்கு மக்கள் புதி­தாகக் குடி­யேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என குறிப்­பிட்­டுள்ள வீர­ரத்­னவின் அறிக்கை, இது ஜஸின் நகரம் என அந்த வீடு­களை நிர்­மா­ணித்து உத­விய நிறு­வ­னத்தின் பெயரில் பெய­ரி­டப்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றது. அந்த நேரத்தில் இந்த குடி­யேற்­றத்­திற்­கான காணியை வழங்­கிய அர­சியல் அதி­காரம் பெற்­றி­ருந்த புள்­ளியே இதில் முக்­கிய குற்­ற­வா­ளி­யாவார் என்றும் அந்த அறிக்­கையில் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.
ஆனால் உண்­மை­யான நிலை என்ன?
மன்­னாரில் இருந்து வவு­னியா மற்றும் மத­வாச்­சிக்குச் செல்­கின்ற பிர­தான வீதி ஏ14 என்று அழைக்­கப்­ப­டு­கின்­றது. இந்த வீதியில் தள்­ளாடி இரா­ணுவ முகாம் அமைந்­துள்ள சந்­தியைக் கடந்து சிறிது தூரத்­தி­லேயே வை சந்தி (Y.Junction) என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்ற சந்­தி­யொன்று உள்­ளது. இந்தச் சந்­தியில் இருந்து வங்­காலை, நானாட்டான் ஊடாக சிலா­வத்­துறை, முசலி, முள்­ளிக்­குளம், கல்­லாறு எனப்­ப­டு­கின்ற வீதிக்குக் குறுக்­காகச் செல்­கின்ற ஆறு, அடுத்­த­தாக மறிச்­சுக்­கட்டி, அத­னை­ய­டுத்து வீதிக்குக் குறுக்­காக பாய்­கின்ற மோத­ர­கம ஆறு என்­ப­வற்றைக் கடந்து வில்­பத்து வன­வி­லங்கு சர­ணா­ல­யத்­திற்குள் புகுந்து அப்­ப­டியே புத்­தளம் நகரைச் சென்­ற­டை­கின்­றது.
மன்னார் தள்­ளா­டிக்கு அருகில் உள்ள வை சந்­தியில் இருந்து புத்­த­ளத்­திற்குச் செல்­கின்ற இந்த வீதி மன்னார் வீதி என்று அழைக்­கப்­பட்­ட­போ­திலும், வை சந்­தியில் இருந்து மறிச்­சுக்­கட்டி வரையில் இந்த வீதிக்கு பி 403 என பெய­ரி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. மறிச்­சுக்­கட்டி பிர­தே­சத்தில் இந்த வீதியில் சந்­திகள் எதுவும் இல்­லாத போதிலும், மறிச்­சுக்­கட்­டிக்கு அப்பால் புத்­தளம் வரை­யி­லான இந்த வீதிக்கு பி 379 என பெய­ரி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இதன் மூலம் மறிச்­சுக்­கட்டி என்ற இட­மா­னது மிகவும் முக்­கி­ய­மான நில அடை­யா­ள­முள்ள இட­மாகக் கரு­தப்­பட்டு வந்­தி­ருப்­பது புல­னா­கின்­றது.
சிலா­வத்­துறை சந்­தியில் இருந்து முசலி, முள்­ளிக்­குளம் என்­ப­வற்றைக் கடந்து செல்­லும்­போது வழியில் கல்­லாறு குறுக்­கி­டு­கின்­றது. இந்த ஆறு இந்த வீதியைக் குறுக்­க­றுத்துச் செல்­கின்ற போதிலும், அங்கு பாலம் எதுவும் அமைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதனால் மாரி காலங்­களில் கடும் மழை பெய்து வெள்ளம் ஏற்­படும் போது இந்த இடத்தைக் கடந்து செல்ல முடி­யா­த­வாறு ஆள் உய­ரத்­திற்கும் அதிக உய­ரத்தில் வெள்ளம் பாய்ந்­தோடும். அப்­போது இந்த வீதியில் ஆற்று வெள்ளம் வடியும் வரையில் வாக­னங்­க­ளிலோ நடந்தோ எவரும் பிர­யாணம் செய்ய முடி­யா­த­வாறு போக்­கு­வ­ரத்து தடை­பட்­டி­ருக்கும். இந்த கல்லாற்றில் இப்­போது கடற்­ப­டை­யினர் நிலை­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த இடத்தில் இருந்து அனு­ம­திப்­பத்­திர முறையில் மணல் எடுத்துச் செல்­கின்ற செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. யுத்த காலத்­திலும், முன்­னைய ஆட்சிக் காலத்­திலும் இந்த இடத்­தில் கடற்­ப­டை­யினர் வீதிச் சோத­னை­யுடன் கூடிய பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டி­ருந்­தனர். இப்­போதும் அவர்கள் அங்கு கட­மையில் இருக்­கின்­றார்கள். எனினும் வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தில்லை. ஆனால் மணல் வியா­பா­ரத்தை அவர்கள் கண்­கா­ணிப்­ப­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றது.
இந்தக் கல்­லாற்றில் இருந்து இந்த வீதியில், மறிச்­சுக்­கட்­டியைக் கடந்து சிறிது சென்­றதும், மோத­ர­கம ஆறு குறுக்­கி­டு­கின்­றது. அந்த ஆற்­றுக்கு அப்பால் உள்ள பிர­தே­சமே வில்­பத்து சர­ணா­லய பிர­தே­ச­மாகும். மோத­ர­கம ஆற்றில் இருந்து சிறிது தூரம் வரையில் வில்­பத்து எல்­லைக்கு வெளியில் உள்ள அந்த வனப்­ப­கு­திக்­கென ஒதுக்­கப்­பட்ட காணி­களைக் கொண்ட பிர­தேசம் அமைந்­துள்­ளது. புத்­தளம் மன்னார் வீதியில் பொது­வாக வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்­கான எல்­லை­யாக இந்த மோத­ர­கம ஆறே அமைந்­தி­ருக்­கின்­றது. அது மட்­டு­மன்றி இந்த மோத­ர­கம ஆறே புத்­தளம் மாவட்­டத்­தையும், மன்னார் மாவட்­டத்­தையும் இரண்­டாகப் பிரிக்­கின்ற எல்­லைக்­கோ­டா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது.
இந்தப் பின்­ன­ணியில் கல்­லாற்­றுக்கும், மோத­ர­கம ஆற்­றுக்கும் இடையில் புத்­தளம் – மன்னார் பிர­தான வீதியை மைய­மாகக் கொண்டு அமைந்­துள்ள மறிச்­சுக்­கட்டி பிர­தே­சத்­தையே வில்­பத்து வனப்­ப­குதி என்றும், வில்­பத்து வனப்­பி­ர­தே­சத்­திற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள வனப்­ப­கு­தி­யென்றும் இப்­போது பிர­சாரம் செய்­யப்­பட்டு வரு­கின்­றது. இதுவே, மறிச்­சுக்­கட்­டியா, வில்­பத்­துவா என்ற பூதா­கர­மான கேள்­வியை எழுப்­பி­யுள்ள சர்ச்­சைக்­கு­ரிய பிர­தே­ச­மா­கவும் திகழ்­கின்­றது.
மறிச்­சுக்­கட்டி என்­பது இலங்­கையில் மிகப்­ப­ழைய காலம் தொட்டு மக்கள் வசித்து வந்த விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய பிர­தே­சங்­களில் ஒன்­றாகப் பதி­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இது மாண­வர்­க­ளுக்­கான பாடப்­புத்­த­கத்­திலும் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக மறிச்­சுக்­கட்­டியைச் சேர்ந்த உபைத்­துல்லா என்ற கிரா­ம­வாசி கூறு­கின்றார். பல தலை­மு­றை­க­ளாக தங்­க­ளு­டைய குடும்பம் மறிச்­சுக்­கட்­டியில் வாழ்ந்து வந்­த­தா­கவும், மறிச்­சுக்­கட்டி, பாலைக்­குழி, கர­டிக்­குழி, கொண்­டச்சி ஆகிய கிரா­மங்­களில் முஸ்லிம் மக்கள் வசித்து வந்­தன என்றும், அருகில் உள்ள முள்­ளிக்­குளம் கிரா­மத்தில் கத்­தோ­லிக்­கர்­க­ளான தமிழ் மக்கள் ஆண்­டாண்டு கால­மாக வாழ்ந்து வந்­த­தா­கவும் அவர் குறிப்­பி­டு­கின்றார்.இத்­த­கைய பழைமை வாய்ந்த கிரா­மப்­பி­ர­தே­சத்தில் இருந்து தாங்கள் 1990 ஆம் ஆண்டு முழு­மை­யாக வெளி­யேற்­றப்­பட்­டதன் பின்னர் 2010 ஆம் ஆண்­ட­ளவில் கடற்­ப­டை­யி­னரின் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் மீள்­கு­டி­யேறி வாழ்ந்து வரும் நிலை­யி­லேயே இப்­போது புதி­தான இந்தக் கிரா­மங்கள் வில்­பத்து வனப்­ப­கு­திக்குச் சொந்­த­மா­னது இங்கு தாங்கள் – முஸ்லிம் மக்கள் புதி­தா­கவே குடி­யே­றி­யி­ருப்­ப­தாகப் புதிய கதையை – புர­ளியைக் கிளப்பி தங்­களை அங்­கி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகக் கவ­லை­யுடன் தெரி­விக்­கின்றார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு முஸ்லிம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து வெறிச்­சோடி பாழ­டைந்து காட­டர்ந்து கிடந்த இந்தப் பிர­தே­சத்தை பொரு­ளா­தார அபி­வி­ருத்திச் செயற்­பாட்டைக் கருத்­திற்­கொண்டு வன­ப­ரி­பா­லன திணைக்­களம் வில்­பத்து பிர­தே­சத்­திற்­கென ஒதுக்­கப்­பட்­டுள்ள வன பிர­தே­ச­மாக தன்­னிச்­சை­யாக 2010 ஆம் ஆண்­டுக்கு முன்­ன­தாக வர்த்தமானி அறி­வித்தல் மூலம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்ற பெயரில் அர­சியல் உள்­நோக்­கத்தைக் கொண்­ட­தாக இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. மறிச்­சுக்­கட்டி பிர­தேசம் மட்­டு­மல்­லாமல், மன்னார் மாவட்­டத்தில் தமிழ் மக்­களின் சரித்­திர காலத்தில் இந்து சமயக் குர­வர்­களின் பாடல் பெற்ற திருத்­த­ல­மாகக் குறிப்­பி­டப்படுகின்ற திருக்­கே­தீஸ்­வரம் ஆலயச் சுற்­றா­ட­லையும் இவ்­வாறு வன­ப­ரி­பா­ல­னத்­திற்­கென ஒதுக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் பிர­க­ட­னப்­ப­டுத்­த­யி­ருக்­கின்­றனர். இந்தப் பிர­க­ட­னத்தை ஆதா­ர­மாகக் கொண்டு திருக்­கே­தீஸ்­வரம் ஆலயச் சுற்­றா­டலில் பௌத்த பிக்கு ஒருவர் சிறிய விகா­ரை­யொன்றை அமைத்து புத்தர் சிலை­யொன்­றையும் நிறுவி நிலை­கொண்­டி­ருக்­கின்றார். இங்கு பௌத்­தமும், இந்து சம­யமும் இணைந்து நிலை­கொண்­டி­ருந்­த­தா­கவும், பௌத்­தர்­க­ளா­கிய தாங்கள் தாராள சிந்­தை­யுடன் செயற்­பட்டு வரு­வ­தற்குச் சிறந்த உதா­ர­ண­மா­கவே திருக்­கே­தீஸ்­வரம் ஆலயம் வானு­யர்ந்த அளவில் கோபு­ரத்தைக் கொண்­ட­தாக நிறு­வப்­பட்டு அங்கு சைவம் தழைத்­தோங்­கி­யி­ருப்­ப­தா­கவும் அந்த பௌத்த பிக்கு தன்னைக் காண வரு­கின்­ற­வர்­க­ளிடம் வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்றார். பௌத்­தர்­க­ளா­கிய தாங்கள் ஏனைய மதத்­த­வர்­களை அடக்­கி­யொ­டுக்­கவோ அல்­லது அவர்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு விளை­விப்­ப­வர்கள் அல்ல என்றும், அவ்­வாறு செயற்­ப­டு­ப­வர்­க­ளாக இருந்தால், திருக்­கே­தீஸ்­வரம் ஆலயம் அங்கு சீரும் சிறப்­பு­மாக இது­கால வரை­யிலும் செயற்­பட்­டி­ருக்க முடி­யாது என்றும் தங்­களின் தாரா­ள­மான மத சிந்­தனை கார­ண­மா­கவே, இந்து ஆலயம் ஒன்று பெரிய அளவில் இயங்­கிக்­கொண்­டி­ருக்­கின்ற போதிலும் தாங்கள் மிகவும் சிறி­யதோர் இடத்தில் மிகவும் எளி­மை­யாக இருப்­ப­தா­கவும் பெரு­மை­ய­டித்துக் கொண்­டி­ருக்­கின்றார்.
இதே­போன்று பொரு­ளா­தார அபி­வி­ருத்தி நோக்­கத்­திற்­காக மன்னார் மாவட்­டத்தின் அல்­லி­ராணி கோட்டை பிர­தே­சமும், மகா­வலி அபி­வி­ருத்தித் திட்­டத்தின் கீழ் வவு­னியா மாவட்­டத்தின் நெடுங்­கேணி பிர­தேச செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட பெரிய பிர­தேசம் ஒன்றை வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­திற்­கென ஒதுக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் அதி­கா­ரிகள் அறிவித்திருக்கின்றார்கள். இந்த அறிவித்தலின்படி, நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஏ9 பிரதான வீதியின் ஒரு பகுதி உள்ளிட்ட கனராயன்குளம் பகுதியும் இந்த மகாவலி திட்டத்திறகெனஒதுக்கப்பட்ட பிரதேசமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் பரம்­பரை பரம்­ப­ரை­யாகக் குடி­யி­ருந்து வந்த முஸ்லிம் மக்கள் யுத்தச் சூழ்­நி­லையில் இடம்­பெ­யர்ந்து சென்று பின்னர் மறிச்­சுக்­கட்டி பிர­தே­சத்தில் உள்ள தங்­க­ளு­டைய சொந்தக் கிரா­மங்­க­ளுக்குத் திரும்பி வந்து மீள்­கு­டி­யே­று­வ­தற்கு முன்னர், அவ்­வாறு குடி­யே­று­வது சூழல் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்­துமா இல்­லையா என்­ப­தற்­கான ஆய்­வ­றிக்­கை­யுடன் கூடிய அனு­ம­தியை வன­ப­ரி­பா­லனத் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து பெற்­றி­ருக்க வேண்டும் என்று சூழ­லி­ய­லா­ள­ரா­கிய புபுது வீர­ரத்ன ஜனா­தி­ப­திக்கு கைய­ளித்­துள்ள அறிக்­கையில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.
பௌத்த தீவி­ர­வா­தி­க­ளி­னாலும், அவர்­க­ளுடைய தீவிர ஆத­ர­வா­ளர்­க­ளி­னாலும் மறிச்­சுக்­கட்டி பிர­தேச மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் கிளப்­பப்­பட்­டுள்ள இன­வாத – மத­வாத சர்ச்­சை­யை­ய­டுத்து, இது தொடர்­பாக பல்­வேறு தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்தும் அறிக்­கை­களைக் கோரி­யி­ருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த அறிக்­கைகள் கிடைக்­கப்­பெற்­றதும், அவற்றை ஆய்வு செய்து இறுதி முடி­வெ­டுக்­கப்­படும் என தெரி­வித்­துள்ளார். இந்த நிலையில் தமது பாரம்­ப­ரிய பிர­தே­சத்­திற்­காகப் போராடி வரு­கின்ற மறிச்­சுக்­கட்டி பிர­தேச மக்­களின் நியா­ய­மான கோரிக்­கைக்கு வலுச் சேர்ப்­ப­தற்­காக 2 லட்சம் கையெ­ழுத்­துக்­களைச் சேக­ரித்து மறிச்­சக்­கட்டி பிர­தே­சத்தின் உண்­மை­யான நிலை தொடர்­பி­லான ஆதா­ர­பூர்­வ­மான தகவல்­களை உள்­ள­டக்­கிய அறிக்­கை­யொன்றை சமர்ப்­பிப்­ப­தற்­கான முயற்­சி­களில் முஸ்லிம் அமைப்­புக்கள் சில ஈடு­பட்­டி­ருக்­கின்­றன. அடுத்த பத்து தினங்­களில் இந்த நட­வ­டிக்கை முற்றுப் பெறும் என அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.
அதன் பின்­னரே, இடம் பெயர்ந்து சென்று திரும்பி வந்து தமது சொந்தக் கிரா­மங்­களில் மீள்­கு­டி­யே­றி­யுள்ள மறிச்சுக்கட்டி பிரதேச மக்கள் குடியேறியுள்ள இடம் உண்மையிலேயே மறிச்சுக்கட்டிதானா அல்லது வில்பத்துவா என்பது ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் தெரியவரும்.

– நன்றி  வீரகேசரி பத்திரிகை –

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *